கண்ணியம்

Tuesday, September 18, 2018



       பெண்களுக்கு கற்பு நெறி முக்கியம் என்று இந்த சமூகம் கருதுவது போல ஆண்களுக்கு கண்ணியம் மிக மிக முக்கியம் என்பதை இந்த சமூகம் ஆண்களுக்கு உணர்த்த வேண்டும் இதை ஆண்களும் உணர வேண்டும்.

       கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே இருக்க வேண்டிய ஒரு நெறி அல்ல. அது ஆண்களுக்கும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு நெறி. பெண்கள் கற்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம், ஆண்கள் கண்ணியத்துடன் இருக்க வேண்டும் என்று எண்ணுவதில்லை.

    "ஜான் மகன் ஆனாலும் ஆண்மகன்" - இது மாதிரியான பழமொழிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். ஆணாதிக்கத்தை சமூகத்தில் விதைத்து சென்ற நம் முன்னோர்களின் இதுபோன்ற சடங்குகளை பேச்சுகளை சம்பிரதாயங்களை பழமொழிகளை அறவே ஒழிக்க வேண்டும்.

           இன்றைய பெண்களுக்கு சமூகத்தில் ஒரு  சிறப்பான இடம் இருக்கிறது. ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்களின் திறமைகளை வெளிக்காட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் ஒரு பெண் ஒரு நாட்டிற்கு குடியரசுத் தலைவர் அல்லது பிரதமராகவே ஆனாலும் அங்கேயும் அவர் ஒரு பெண் என்கிற வகையில் சில சங்கடங்களை கஷ்டங்களை எதிர்கொள்ள தான் செய்கிறார். ஒரு நாட்டின் தலைமைப் பதவிகளில் இருக்கும் பெண்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண அரசு அலுவலகங்களிலும் தனியார் அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு ஏற்படும் இன்னல்களை எண்ணி பாருங்களேன் !

   ஒரு பெண் நம்முடன் பேருந்தில் பயணிக்கும் பொழுது முடிந்தவரை நாம் அவரை தொடாமலும் உரசாமல் இருப்பது நமது கண்ணியம். ஒரு தாய் தன் சேய்க்கு பாலூட்டும் போது நீங்கள் அருகில் இருந்தால் சற்று விலகி நிற்பது உங்களது கண்ணியம். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நம் சக  பெண் ஊழியர்களிடம் காக்கவேண்டியது கண்ணியம். நட்புடன் பழகினாலும் அந்த உறவிலும் ஒரு கண்ணியத்தை காக்க வேண்டும். முதலில் நாம் ஆண்களுக்கு நடத்தையில் கண்ணியத்தை சொல்லிக் கொடுப்பதை விட அவர்களின் சிந்தனையில் கண்ணியத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். எந்த ஒரு பெண்ணையும் தவறான கண்ணோட்டத்தோடு பார்க்க கூடாது என்கிற எண்ணத்தை விதைக்க வேண்டும். இந்த ஒரு கண்ணியத்தை ஒவ்வொரு ஆண்மகனின் மனதிலும் சிந்தனையிலும் விதைத்து விட்டால் பெரும்பாலான குற்றங்கள் சமூக அவலங்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் குறையும் என்பதில் கொஞ்சமும் ஐயம் இல்லை.

* தினேஷ்மாயா *

0 Comments: