தண்ணீர் தண்ணீர்

Thursday, May 16, 2013


    சென்னையில் கடந்த சில நாட்களாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவுகிறது. சென்னையில் பெரும்பாலான மக்கள், பொதுவாக நடுத்தர வர்க்கத்தினரும் சரி, ஏழை மக்களும் சரி 25 முதல் 30 ரூபாய் கொடுத்து இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வாங்கி உபயோகித்து வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் சென்னை மாநகராட்சியின் குடிநீர் அனைத்து தரப்பினரையும் சென்றடைவதில்லை. ஆஹா ஓஹோ என்று சொல்லும் அளவிற்கு சுகாதாரமானது என்றெல்லாம் சொல்லிவிட முடியாது ஆனாலும் இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சென்னையில் ஏறக்குறைய அனைத்து தரப்பு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்துவந்தது. 

           இதற்கு யார் கண் பட்டதோ தெரியவில்லை, சில நாட்களாக உள்ளூரில் சுத்திகரித்து விநியோகிக்கப்படும் அனைத்து சிறிய நிறுவனங்களையும் மூடும்படி வெளிநாட்டு நிறுவனங்களான KINLEY, AQUAFINA போன்ற நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளதாக இந்த தொழிலில் ஈடுபட்டுவருவோர் குற்றம் சாட்டுகின்றனர். மே 20-ம் தேதிவரை அனைத்து உள்ளூர் நிறுவனங்களையும் மூடும்படி உத்தரவிடப்பட்டிருக்கிறதாம்.

         இன்றைய நிலைக்கு அந்நிய நிறுவனங்களின் தண்ணீரின் விலை ரூ.77 முதல் 100 வரை இருக்கிறது. மேல்தட்டு மக்களால் இந்த குடிநீரை வாங்கி உபயோகிக்க முடியும் நம்மைப்போன்ற சாமானிய மக்களால் அது சாத்தியமாகாது. 

     சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அரசு அனுமதித்துள்ளது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் அதன் முன்விளைவுகளை வேறு துறைகளில் இருந்தே என்னால் காண முடிகிறது. பெப்சி , கோக-கோலா போன்ற பானங்களை நாம்தான் இங்கே வளர்த்துவிட்டோம். விளையாட்டு வீரர்களும் சரி, திரையுலக கலைஞர்களும் சரி அனைவரும் தங்களுக்கு வருமானம் கிடைக்கிறது என்று இதுபோன்ற வெளிநாட்டு பொருட்களில் விளம்பரங்களில் நடித்து மக்களை வாங்க வைக்கின்றனர். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக நம் சந்தையில் கால்பதித்து பின்னர் நம் சந்தையில் இருக்கும் சிறு நிறுவனங்களை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு தான் மட்டுமே முழு ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்று நினைக்கிறார்கள் இது போன்ற நிறுவனத்தார். ஆனால் இந்த உண்மை நம் மக்களுக்கு தெரியாமல் மோகத்தால் அந்நிய பொருட்களுக்கு துணைபோகின்றனர். 

     இன்றுமுதல் நான் ஒரு சபதம் எடுக்கிறேன். இதுபோன்ற அந்நிய பொருட்களை அறவே ஒழித்து என் அனைத்து பயன்பாட்டிற்கும் நம் நாட்டில் தயாரான பொருட்களையே உபயோகிப்பேன். இதுவரை இதை கடைபிடித்துதான் வருகிறேன். ஆனால், இன்று முதல் அந்நிய குளிர்பானங்களையும்கூட நான் ஆதரிக்க மாட்டேன். இந்த மாற்றம் நம் அனைவரிடத்திலும் தேவை. நமக்கு உதவும் நம் நாட்டு வியாபாரிகளுக்கு நாம்தான் உறுதுணையாக இருக்க முடியும். சிந்தித்து செயல்படுவோம் தோழர்களே..

* தினேஷ்மாயா *

0 Comments: