உனக்காக சுவாசிக்கிறேன்

Friday, October 20, 2017




நான் உனக்காக சுவாசிக்க துவங்கி

இன்றுடன் 97 நாட்கள் ஆகிறது !!

* தினேஷ்மாயா *

சண்டை




எனக்கும் உனக்கும் சண்டை வருகிறது..

அந்த சண்டையின் போதுதான் உணர்கிறேன்

நம் இருவருக்குமான அழகான காதலை !!

* தினேஷ்மாயா *

கால்களால் கவிதை


நான் என் கைகளால்
காகிதத்தில் கவிதை எழுதிக்கொண்டிருக்கையில்,

அவள் - தன் கால்களால்
நடக்கும் இடமெங்கும் கவிதையை
சிதறவிட்டப்படி செல்கிறாள் !!

* தினேஷ்மாயா *

என் தேவதையின் பிறந்தநாள் !!

Tuesday, October 17, 2017



என் தேவதையின் பிறந்தநாள் !!

நான் கோவையில் இருக்கிறேன். அவள் கன்னியாகுமரியில் இருக்கிறாள்.. அவள் பிறந்தநாளும், அவள் வயதும் ஒன்றாக அமைந்தது இந்த வருடம்.  இன்னமும் எங்கள் நிச்சயதார்த்ததிற்கு ஒரு மாதத்திற்கும் மேல் இருக்கிறது, ஆனால் அவள் பிறந்தநாள் அதற்குள் வந்துவிட்டது. 

அவளை காண வருகிறேன் என்று சொன்னால், நிச்சயம் அடம்பிடிப்பாள். வர வேண்டாம், எல்லாம் நிச்சயதார்த்தம் நடக்கட்டும் அப்புறம் பார்த்துக்கலாம் என்பாள். அதனால் அவளுக்கு சொல்லாமலே, ஆகஸ்ட் மாதமே கோவையிலிருந்து கன்னியாகுமரி செல்ல முன்பதிவு செய்துவிட்டேன். அவளிடம் அனைத்தையும் சொல்லிவிடும் நான், இதை மட்டும் சொல்லவில்லை. அவளுக்கு இன்ப அதிர்ச்சி தரலாம் என்று இதை மட்டும் மறைத்துவிட்டேன். நாளை அவள் பிறந்தநாள். அவளுக்கு இரவு வெகுநேரம் விழித்திருக்க பிடிக்காது. அது எனக்கு சாதகமாக அமைந்தது. இரவு 8 மணிக்கு அவளுக்கு தொலைப்பேசியில் அழைத்தேன். இன்று இரவு நண்பர்களுடன் துப்பறிவாளன் திரைப்படம் பார்க்க திரையரங்கம் செல்கிறேன் என்று பொய்யுரைத்தேன். ஆனால், உன்னுடன் குறுஞ்செய்தியில் பேசுவேன் என்று சொல்லிவிட்டு நான் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டேன். இரவு 11 மணி வரை அவளுடன் குறுஞ்செய்தியில் பேசிக்கொண்டிருந்தேன். அவள் தூக்கம் வருகிறது என்றாள். என் மனமார்ந்த வாழ்த்துக்களை அவளுக்கு குறுஞ்செய்தியிலேயே தெரிவித்தேன். காலை 6 மணிக்கே நான் கன்னியாகுமரி வந்து சேர்ந்தேன். என் நண்பன் ஒருவனிடம் முன்னரே பேசிவைத்திருந்தேன். நான் வருவேன் என்று. அவன் வீட்டிற்கு சென்று அவன் வீட்டில் கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு அவன் வண்டியை எடுத்துக்கொண்டேன். சில நாட்கள் முன்னர், அவளிடம் சொல்லியிருந்தேன், உன் பிறந்தநாளன்ரு, காலை உணவு ஒரு உணவகத்தில் இருந்து வரவழைத்து தருகிறேன் என்று. அன்று அவளுக்கு அலுவலகம் இருந்தது. அவள் அன்று விடுப்பு எடுக்கவில்லை என்பதை முன்னமே அவளிடம் உறுதி செய்துக்கொண்டேன். வண்டியை எடுத்தேன். அருகில் இருக்கும் ஒரு பெரிய உணவகம் சென்றேன். அவளுக்காக காலை சிற்றுண்டி வாங்கிக்கொண்டேன். அவள் அலுவலகம் செல்லும்போது நேரம் கிடைக்கையில் அருகில் இருக்கும் ஒரு சிவன் கோவில் செல்வாள். அவளிடம் நான்  முன்னமே கேட்டுக்கொண்டிருந்தேன். உன் பிறந்தநாளன்று நிச்சயம் அந்த சிவன் கோவிலுக்கு சென்றுவிட்டு உன் அலுவலகம் செல் என்று. அவளும் முயற்சிக்கிறேன் என்று சொன்னாள். அன்று காலை 6 மணிக்கு என்னை அழைத்தாள். தூக்க கலக்கத்திலேயே பேசினாள் என் மாயா. படுக்கையில் இருந்து எழுந்துக்கொள்ளவில்லை. கண் விழித்த உடனே எனக்கு அழைத்தாள். நான் காதலுடன், பாசத்துடன் என் மனமார்ந்த வாழ்த்துக்களை அவளுக்கு தெரிவித்தேன். நான் மருதமலை முருகன் கோவிலுக்கு சென்றுக்கொண்டிருக்கிறேன் என்றேன். அவளை மறவாமல் அந்த சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று சொன்னேன். நிச்சயம் செல்கிறேன் என்றாள். ஒரு மணி நேரம் கழித்து, அவள் அலுவலகம் கிளம்ப பேருந்து நிலையம் வந்து என்னைஅழைத்தாள். நான் மருதமலை முருகனை தரிசித்துவிட்டு, என் வீட்டின் அருகே இருக்கும் சிவன் கோவிலில் நான் காத்துக்கொண்டிருக்கிறேன் என்றேன். அவள் ஏன் காத்துக்கொண்டிருக்கிறாய், நீ வணங்கிவிட்டு உன் அலுவலகம் செல்லலாமே என்றாள். நான் சொன்னேன், இல்லை இல்லை, நீ அங்கே அந்த சிவன் கோவிலில் தரிசிக்கும் போது நானும் இங்கே தரிசிக்க வேண்டும் என்றேன். அப்படியே அவளிடம் அலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தேன். ஆனால், நான் நிஜமாக அவள் அலுவலகம் அருகில் இருக்கும் சிவன் கோவிலில் தான் அவள் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தேன். அவளை பெண் பார்க்க சென்ற போது பார்த்தது. அதற்கு பின்னர், அலைப்பேசியில் பேசியிருக்கிறோம், இருவரின் புகைப்படங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளோம். ஆனால், நேரில் பார்க்கவில்லை. அவளை பார்த்துவிட்டு வந்த தேதியில் இருந்து இன்று அவளை இரண்டாவதுமுறை பார்க்க கிட்டத்தட்ட 75 நாட்கள் ஓடிவிட்டது. எனக்கு சிறிது தயக்கமும்கூட. நேரில் பார்க்க போகிறேன், எப்படி எடுத்துக்கொள்ள போகிறாளோ என்கிற பயமும் தயக்கும் இருந்தது. அவள் பேருந்தைவிட்டு இறங்கி கோவிலினுள் நுழைந்தாள். அவள் கோவிலினுள் நுழைவதை வண்டியின் கண்ணாடியில் பார்த்தேன். 



( அதோ - தொலைவில் என் மாயா வருகிறாள் !!! )

        நான் இறைவனுக்காக வாங்கி வைத்திருந்த மாலையை கையில் எடுத்துக்கொண்டு வண்டியைவிட்டு இறங்கினேன். அவள் தன் காலணிக்ளை கழட்டிவிட்டு கோவில் பிரகாரத்தில் நுழையும்போது அவள் முன்னே சென்றேன். அவள் கண்களில் தெரிந்த அந்த வியப்பை என்னால் வார்த்தைகளால் விளக்க முடியாது. ஏதோ கனவில் காண்பதுபோல் என்னை பார்த்தாள். நான் என் கைகளை கொடுத்து இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்றேன். அவள் பேச்சு வராமல் அப்படியே நின்றாள். நான் சுதாரித்துக்கொண்டு, சரி வா, உனக்கு நேரமாச்சு என்றேன். இருவரும் ஈசனை வணங்கிவிட்டு, ஒவ்வொரு சன்னதியிலும் வணங்கினோம். அது நவராத்திரி நேரம். அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்திருந்தார்கள் அதை இருவரும் சில நொடிகள் பார்த்து இரசித்து தரிசித்துவிட்டு, அனைத்துசன்னதிகளையும் வணங்கினோம். ஆனால், கோவில் பிரகாரத்தை வலம்வந்துகொண்டிருக்கையில் அவள் என்னை வியப்பாகவே பார்த்தாள், நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள். மருதமலையில்தானே இருக்கிறேனு சொன்னீங்க என்றாள் அப்பாவியாய். சரி சரி அதெல்லாம் பிறகு சொல்கிறேன் என்றேன். பின் கோவிலில் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு செல்வோம் என்றேன். என்னை ஒரு கோவமான பார்வையால் பார்த்தாள். சரி நீ அலுவலகம் கிளம்பு என்று சொல்லி, நான் வாங்கிவந்த உணவு, இனிப்பு, பூ அனைத்தையும் அவள் கையில் கொடுத்து அனுப்பினேன். உன்னை உன் அலுவலகம்வரை வண்டியில் இறக்கிவிடட்டுமா என்றேன். இப்போது கொஞ்சம் அதிகமாகவே முறைத்தாள். அவள் அலுவலகம் சென்றுவிட்டாள். அவள் ஒரு வங்கியில் காசாளராக பணியில் இருக்கிறாள். அவள் அலுவலகம் சென்று 10 நிமிடம் ஆனதும், நான் அவள் வங்கிக்கு சென்றேன். ஒரு வாடிக்கையாளராக சென்றேன். சில வாரங்களுக்கு முன்னரே, ஏதோ ஒரு காரணம் சொல்லி அவள் வங்கி கணக்கு எண்ணை வாங்கிவைத்துக்கொண்டேன். அன்று வங்கிக்கு சென்றேன். பணம் செலுத்தும் படிவத்தை எடுத்தேன். அதில் அவள் பெயரை எழுதினேன், அவள் கணக்கு எண்ணை எழுதினேன், ரூ.143/- அவள் கணக்கில் செலுத்த, அந்த படிவத்தை நிரப்பிவிட்டு அவள் முன்னாடி சென்று நின்றேன். அவளுக்கு இன்னும் கோவம் அதிகமானது. இருந்தாலும் அவள் காதல் அந்த கோபத்தை குறைத்துவிட்டது என்றுதான் சொல்லனும். பின் அந்த படிவத்தை அவளிடம் கொடுத்தேன். அவள் அந்த 143 என்ற தொகையை பார்த்துவிட்டு என்னை மீண்டுமொருமுறை முறைத்தாள். 143 - I LOVE YOU , இதை சொல்லும்விதமாகத்தான் அந்த தொகையை அவள் கணக்கில் செலுத்தினேன். இன்னும் எத்தனை வருடம் கழித்து பார்த்தாலும், அவள் பிறந்தநாளின் நான் அவள் கணக்கில் 143 செலுத்தினேன் என்பதும், அவளைக் காண வந்தேன் என்பதும் அவள் நினைவில் இருக்கும். பணத்தை செலுத்திவிட்டு நான் கிளம்பிவிட்டேன். பின்னர் நான் என் நண்பன் வீட்டிற்கு வந்துவிட்டேன். அது அவள் அலுவலகத்தில் இருந்து, 20 நிமிடம் பயணத்தில் இருக்கிறது. அங்கே வந்துவிட்டு அவளுக்கு அலைப்பேசியில் அழைத்தேன். அவள் இப்போதுதான் என்னை நேரில் கண்ட அதிர்ச்சியில் இருந்து மீண்டுவந்து என்னிடம் பேசினாள். நீங்க எப்போ இங்க வந்தீங்க, எப்படி வந்தீங்க, இப்படி இன்னும் நிறைய கேள்விகள் அடுக்கிக்கொண்டே சென்றாள். நான் சொன்னேன், அதற்கெல்லாம் விடையை பிறகு சொல்கிறேன், உனக்காக ஒரு சிறப்பு பரிசு வைத்திருக்கிறேன் அதை இன்று மாலை உன் அலுவலகத்தில் வந்து தருகிறேன் என்றேன். அதற்கும் அவள் தயங்கினாள். இருந்தாலும் அந்த பரிசு கொஞ்சம் நிறையவே சிறப்புகள் வாய்ந்தது. நான் வரைந்த இரண்டு ஓவியங்கள் அவளுக்கு பரிசளித்தேன். அன்று மாலை அவள் அலுவலகத்தில் ஆயுத பூஜை போட்டார்கள். அவளைக்காண நான் வந்தேன் என்று அவள் தன் அலுவலகத்தில் தன் சக ஊழியர்களிடம் தெரிவித்தாள். அவர்களும் என்னைக்காண வேண்டும் என்றனராம். சரியென்று, அந்த பரிசை கையில் எடுத்துக்கொண்டு, அனைவருக்கும் இனிப்புகள் வாங்கிக்கொண்டு அவள் அலுவலகம் சென்றேன். நானும் ஆயுத பூஜையில் கலந்துக்கொண்டேன். பின் அனைவருக்கும் என் மாயாவின் பிறந்தநாளுக்காக இனிப்புகள் வழங்கிவிட்டு அனைவரிடமும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு உண்மையை சொல்லப்போனால், அவளிடம் அப்போது நான் பேசவில்லை. வழக்கமாக 4 மணிக்கெல்லாம் அலுவலகத்தைவிட்டு கிளம்பிவிடுவாள். 6:30-7:00 மணிக்கெல்லாம் தன் வீட்டில் இருப்பாள். ஆனால் இன்றோ மாலை 05:30 வரை அலுவலகத்திலேயே இருக்க வேண்டியிருந்தது. ஆயுத பூஜை என்பதால். நான் அவள் அலுவலகம் சென்றது, அவள் அலுவலக நண்பர்களை சந்தித்து இனிப்பு வழங்கிவிட்டு, என்னவளிடன் என் பரிசை அளித்துவிட்டு வீடு திரும்பவேண்டும் என்றுதான். ஆனால், நேரம் அதிகமாகிவிட்டதால் நான் வேண்டுமானால் உன்னை வீட்டில் இறக்கிவிடட்டுமா என்றேன். அவள் வேண்டவே வேண்டாம், முடியவே முடியாது என்று ஒற்றைக்காலில் நின்றாள். நான் பக்குவமாக எடுத்துக்கூறினேன். இதற்குமேல் பேருந்தில் சென்றால் நிச்சயம் உனக்கும் அலைச்சல் அதிகம், தாமதமாகத்தான் வீட்டிற்கு செல்வாய் என்றேன். ஒருவழியாக என் மாயா என்னுடன் வண்டியில் வர சம்மதித்தாள். அன்று வழியில் வண்டிகளில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டோம். ஆனாலும், அவளும் நானும் பேசிக்கொண்டுதான் வந்தோம். ஆண்டவன் இன்னுமொரு விளையாட்டை நடத்தினான். அப்போது மழை பொழிந்தது. மழைக்கு ஒரு கடையின் அருகில் மக்கள் ஒதுங்கியிருந்தார்கள். அங்கே நாங்களும் நின்றோம். அப்போதுதான் நாங்கள் இருவரும் மனம்விட்டு பேசிக்கொள்ள சிறிது நேரம் கிடைத்தது. நான் எப்படி கன்னியாகுமரி வந்தேன்,  எப்போது வந்தேன் என்று அந்த கதையை விவரித்துக்கொண்டிருந்தேன். பின் மழை நின்றமாதிரி தெரிந்தது. சரியென்று வண்டியை எடுத்தேன். சிறிது தூரம் சென்றதும் மீண்டும் மழை. இம்முறை தேவையில்லாமல் ஒரு இடத்தில் நிற்பதைவிட, இருவரும் ஏதாவது உணவகம் சென்று இரவு உணவை முடித்துக்கொள்ளலாம் என்று நான் ஒரு யோசனை சொன்னேன். மழையில் நின்று நேரத்தை வீணாக்காமல் எதிரெதிரே அமர்ந்து பேச ஒரு வாய்ப்பு கிடைக்குமே என்று அந்த யோசனையை தெரிவித்தேன். வழியில் ஒரு பெரிய உணவகம் ஒன்று தென்பட்டது. அங்கே சென்றோம். நாங்கள்தான் முதல் வாடிக்கையாளர் போல. மாலை 6:30 மணிக்கே சென்றுவிட்டோம். அவளுக்கு என்ன பிடிக்குமோ அதை கொண்டுவர சொன்னேன். பின் இருவரும் பேச ஆரம்பித்தோம். இதுதான் நாங்கள் முதலில் தனியாக சந்திக்கிறோம். இதுநாள்வரை அலைப்பேசியிலும், குறுஞ்செய்தியிலுமே பேசிக்கொண்டிருந்தோம். முதலில் நேரில் பார்த்து பேசும்போது எனக்கும் சிறு தயக்கம் இருந்தது, அவளுக்கும் இருந்தது. காலையில், கோவிலில் இருவருக்குமே அதிக தயக்கம். சரிவர பேசிக்கொள்ளவில்லை. ஆனால், வண்டியில் வரும்போது நாங்கள் இருவரும் வெகு சகஜமாக பேசிக்கொண்டு வந்தோம். என்னவோ திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆன தம்பதிகளைப்போல பேசிக்கொண்டு வந்தோம். இருவரின் காதலும் ஒரே சீரான அலைவரிசையில் இருந்ததால், எங்கள் இருவருக்கும் இருந்த தயக்கம் உடனே மறைந்துவிட்டது. நாங்கள் அந்த உணவகத்தில் இருக்கும்போது அவள் அம்மாவிற்கு அவள் அலைப்பேசியில் அழைத்தாள். அலுவலகத்தில் நேரமாகிவிட்டதால், என்னுடன் வீட்டிற்கு வருவதாய் சொன்னாள். நானும் அவள் அம்மாவிடம் பேசினேன். நான் பத்திரமாக அழைத்துவந்து வீட்டில் சேர்க்கிறேன்மா என்று உறுதியளித்தேன். அவரும் சரியென்று சம்மதம் தெரிவித்தார். பின் நாங்கள் இருவரும் உணவருந்தினோம். நிறைய பேசினோம். மனம்விட்டு பேச நிறைய நேரம் கிடைத்தது. 

          இருவரும் சாப்பிட்டபின், நான் அவளுக்கு என் பரிசினை அளித்தேன். அதை அவள் உடனே பிரித்து பார்க்கட்டுமா, இல்லை வீட்டிற்கு சென்று பார்க்கட்டுமா என்றாள். நான் சொன்னேன், இதை இப்போதே பிரித்துப்பார், என் பரிசு என்ன என்பதை நீ பார். நீ பார்க்கும்போது உன் முக பாவனைகள் எப்படி இருக்கிறது என்பதை நானும் பார்த்து இரசிக்கிறேன் என்றேன். அவளும் ஒப்புக்கொண்டாள். அந்த பரிசை பிரித்தாள். அதை பிரித்து பார்க்கவே 5 நிமிடம் ஆனது அவளுக்கு. அப்படியொரு பொக்கிஷம்போல் அதை அவளுக்கு பரிசளித்தேன்.



      நானும் அவளும் சிவனும் பார்வதியும் போல பழகிவருகிறோம். நான் அவளின் சிவனாக இருக்கிறேன், அவள் என் சக்தியாக இருக்கிறாள். சிவம் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பதற்கு சான்றாக எங்கள் காதல் இருக்கிறது. அதை நாங்கள் இருவருமே உணர்வோம். அவளின் சிவன் நான், என் சிந்தையில் அவள் மட்டுமே எப்போதும் இருக்கிறாள் என்பதை உணர்த்தும்விதமாக ஒரு ஓவியத்தை வரைந்தேன். அதை முதலில் அவள் பார்க்கையில் அதில் அவள்பெயர் மட்டுமே இருந்தது, என் பெயர் எங்கேயாவது இருக்கிறதா என்று தேடினாள். ஆனால் அதில் என் பெயர் எங்குமே இல்லை. நான் பிறகு அந்த ஓவியத்தின் அர்த்தத்தை சொன்னேன். அந்த சிவன் நான். உன்னுடைய சிவன் அது. என் சிந்தை முழுவதும் நீதான்இருக்கிறாய் என்பதற்கு அர்த்தமாய் அந்த ஓவியம் இருக்கிறது என்பதை விளக்கினேன். அவள் ம்னதில் அப்போது ஏற்பட்ட ஆனந்தத்தை அவள் கண்களின் வழியாக கண்டு நான் மகிழ்ந்தேன். பின் அவளை அவள் வீட்டில் சென்று இறக்கிவிட்டு அவள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் இனிப்பும் வழங்கிவிட்டு நான் நண்பன் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். அன்றிரவே கோவைக்கு கிளம்பி வந்தேன். 


( அவளுக்கு நான் பரிசளித்த இன்னொரு ஓவியம்)


அழகான ஓர் கவிதையைப்போல் நடந்த இந்த நிகழ்வு எத்தனை ஆண்டுகளானலும் எங்கள் இருவரின் வாழ்க்கையிலும் இனிமையாய் இருக்கும். நான் மேலே சொன்னதில், பல விஷயங்களை விட்டுவிட்டேன். நேரம் இல்லை என்பதால் இயன்றவரை என் மாயாவின் பிறந்ததினத்தில் அவளை சந்தித்த அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டேன். இன்னும் என் மாயாவும் நானும் வாழப்போகும் வாழ்க்கையின் அழகான பதிவுகளை பின்னர் பகிர்கிறேன்.

காதலுடன் - என் மாயாவுடன்

* தினேஷ்மாயா *