சமீபத்தில் இரசித்த திரைப்படங்கள்

Thursday, November 10, 2016

     என் சிறு வயதில் அதிகம் படம் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது நான் பார்க்காமல் இரசிக்காமல் விட்டுப்போன படங்களை இப்போது பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன். அப்படி நான் சமீபத்தில் பார்த்து இரசித்த திரைப்படங்களை இங்கே பதிகிறேன்

கருத்தம்மா:

 கருத்தம்மா கதாபாத்திரம், பெரியார்தாசன் அவர்களின் இயல்பான நடிப்பு, இசைப்புயலின் பிண்ணனி இசை, வசனம், என்னை அதிகம் கவர்ந்தது. சில இடங்களில் பிண்ணனி இசையால் கண்களில் நீரை வரவைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள். அவரின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். மண்வாசம் ததும்ப ததும்ப இந்த விருந்தை பாரதிராஜா படைத்திருக்கிறார். 

கிழக்கு சீமையிலே:


கருத்தம்மா படம் கொடுத்த அனுபவம் எனக்கு இதில் கிடைக்காவிட்டாலும், ஏ.ஆர்.ரஹ்மான், பாரதிராஜா கூட்டணியில் வந்த மற்றுமொரு திரைப்படம். அண்ணன் தங்கை பாசத்தை இக்காலத்துகேற்ப சமைத்து நமக்கு பரிமாறியிருக்கிறார். பிண்ணனி இசையைவிட, பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

சேது:

படம் முழுக்க எனக்கு இசைஞானி மட்டுமே தெரிந்தார். நான் அவரின் இரசிகன் என்பதால் இதுவோ என எனக்கு தெரியவில்லை. வார்த்தை தவறிவிட்டாய், எங்கே செல்லும் இந்த பாதை பாடல்கள் இளையராஜா அவர்களின் குரலில் கண்ணீருக்கும் மேல் வேறெதையோ எனக்கு தந்தது. பாலா அவர்களின் திரைக்கதை அற்புதம். அனைவரின் நடிப்பும் சிறப்பாக இருந்தது. விக்ரம் அவர்களின் நடிப்பு இன்னொரு பரிணாமத்தை அடைய ஆரம்பித்தது இங்கிருந்துதான். அருமையான படம். 

நாயகன்: 


மணிரத்னம், இளையராஜா, கமல். மூன்று ஜாம்பவான்கள். சொல்லவா வேண்டும் ? இப்போதும் படம் முழுக்க இளையராஜா அவர்கள்தான் இருக்கிறார். தென்பாண்டி சீமையில பாடல் இசைஞானியில் குரலில் கேட்கையில் ஒரு உணர்வு, கமல் குரலில் கேட்கையில் இன்னொரு வித்தியாசமான உணர்வு. என்ன மாயம் இது ? படத்தின் கதை, திரைக்கதை, அருமையான வசனம், கமல் அவர்களின் தேர்ந்த நடிப்பு, இசைஞானியின் பிண்ணனி இசை மற்றும் பாடல்கள், எல்லாம் சேர்ந்து என்னை புரட்டிப்போட்டுவிட்டது..

சிந்து பைரவி:


கே.பாலசந்தர் அவர்களின் விசிறி நான். அவரின் படங்களில் அவரின் தனித்துவம் நன்றாக தெரியும். இதிலும் அதை காட்டியிருக்கிறார். முதலில் என்னை கவர்ந்தது, இசைஞானி, பிறகு வைரமுத்து. இவர்கள் இருவரின் உழைப்பால் அமைந்த அத்துனை பாடல்களும் அருமை. தீக்ஷிதர், தியாகராஜர் அவர்களின் கீர்த்தனைகளையும் படத்தில் இணைத்திருந்தார் கே.பி., இது இவர் ஸ்டைல். நடிப்பில் அதிகம் கவர்ந்தது சுஹாசினி. அட அட அட அட, என்ன ஒரு நடிப்பு. முகத்தில் அத்துனை பாவங்கள், அனைத்து உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் எப்படி இவரால் ஒருசேர வெளிகாட்ட முடிகிறது என்று வியந்தேன். சிரித்துக்கொண்டே அழுகையை மறைக்க முயல்வது, அதிர்ச்சியை புருவத்தில் மட்டும் காட்டிக்கொண்டு புன்னகை பூப்பது, இன்னும் இப்படி ஏராளம். சிவக்குமார் அவர்களின் நடிப்பும் அருமை. 

0 Comments: