வாக்காளர் தினம்
நாளை இந்திய வாக்காளர் தினம். வாக்களிப்பது நமது உரிமை மட்டுமின்றி நமது கடமையும் கூட. நமது வாக்கை சரியான சமயத்தில் சரியான வேட்பாளருக்கு அளித்து அவரை பதவியில் அமர்த்தி மக்களுக்கு நன்மை செய்யவைக்க வேண்டும். ஆனால் இன்று இருக்கும் நிலையே வேறு. பதவிக்கு வரும் வரை நல்லவனாய் நடிக்கின்றனர். பதவிக்கு வந்ததும்தான் அவர்கள் உண்மையான முகம் தெரிகிறது. நம் இந்தியாவின் எதிர்காலம் நம் கையில்தான் இருக்கிறது. இளைஞர்கள் எல்லா துறையிலும் சாதிக்கும்போது ஏன் நம்மால் அரசியலில் சாதிக்க முடியாது. அரசியல் என்பது சாக்கடை என்று சொல்லி விலகி செல்வோர்தான் அதிகம். அரசியல் என்றால் ஆட்சிக்கு வருவதும் கட்சி அமைப்பது மட்டும் இல்லை. நம்மை சுற்றி நமக்கும் பிறருக்கும் நடக்கும் தவறை தட்டி கேட்பதும் அரசியல்தான். அரசியல் செய்ய தெரியாத ஒரே காரணத்தால் தான் இளைஞர்கள் அரசியலை விட்டு விலகி இருக்கின்றனர். இன்று இருக்கும் அரசியல் அமைப்பினை மாற்றி அமைப்போம். நாம் அரசியலில் ஈடுபட்டால் மட்டுமே நம் சமூகத்தை முன்னேற்ற முடியும். இன்று நமது நாடு இப்படி இருக்க காரணம் ஒரு தலைமுறைக்கு முன்னர் இருந்த அரசியல்வாதிகள்தான். நம் வருங்கால சமூகம், ஏன் நம் பிள்ளைகள் ஒரு மகிழ்ச்சியான சமூகத்தில் வாழ வேண்டும் என்றால் நாம் அரசியலை நம் கையில்ல் எடுக்க வேண்டும். சாதாரண வேலைக்கு கூட, குறைந்தபட்சம் பத்தாவது படித்திருக்க வேண்டும் என்று கேட்கும்போது, அரசியலில் வருவதற்கும் ஆட்சியில் அமரவும் குறைந்தபட்ச தகுதி என்று எதுவும் இல்லை. பெரும்பாலும் அதிகம் படித்திராத சொல்லப்போனால், கையெழுத்துக்கூட போடத்தெரியாத பல பிரதிநிதிகள் நம் நாடாளுமன்றத்தில் இருக்கின்றனர். இப்படி இருக்கும்போது இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் ஒரு பட்டதாரியாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் ஆட்சியில் அமர்ந்தால் பல ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களை செய்யலாம். கூடங்குளம் பிரச்சினை, பெரியார் அணை பிரச்சினையில் மட்டும் அரசியல் இல்லை. நம்மை அரசியலுக்கு வரவிடாமல் தடுப்பதிலும் அரசியல் இருக்கு. நாளைக்கே நாம் ஒரு கட்சி ஆரம்பித்தால், நம்மை புரட்சியாளர்கள் என்று சொல்லி கைது செய்வார்கள். அதுவும் அரசியல்தான். நான் ஒரு பட்டம் வாங்கிவிட்டேன். என் ஆசைப்படியும் என் பெற்றோர் ஆசைப்படியும் ஒரு தனியார் அலுவலகத்திலோ அல்லது ஒரு அரசு அலுவலகத்திலோ வேலை கிடைத்துவிட்டது. இன்னும் சில வருடங்களில் திருமணம் செய்துக்கொள்வேன். அப்புறம் என் வாழ்க்கை செட்டில் ஆகிவிடும். அரசியலில் இறங்கி நான் அந்த நிம்மதியான வாழ்க்கையை இழக்க விரும்பவில்லை என்பதுதான் இப்போதைய இளைஞர்கள் பெரும்பாலானோரின் கருத்து. சினிமாவில், இளைஞர்கள் அரசியலில் சாதிக்கும் படமென்றால், உதாரணமாக “கோ”, “முதல்வன்”, “ஆயுத எழுத்து” படங்களை தியேட்டரிலோ வீட்டிலோ ஆர்வமாக பார்த்து நல்ல படம் என்று சொல்வது தான் இப்போதைய இளைஞர்களின் பங்காக இருக்கிறது. உங்களில் எத்தனை பேர் அரசியலில் இறங்கி நாட்டை சுத்தம் செய்ய தயாராக இருக்கின்றனர். உண்மையான இந்தியனாய் நம் இந்தியாவை நல்வழியில் அழைத்து செல்ல எத்தனை பேர் துணை வருவீர்கள்???
இணையதளத்தில் மட்டுமே நம் கருத்துக்களையும் கோபத்தையும் காட்டியது போதும் தோழர்களே. செயலில் இறங்க எத்தனை பேருக்கு உண்மையான வீரம் இருக்கிறது. வீரமும் காதலும் தமிழனின் இரு கண்கள். காதலில் மட்டுமே உங்கள் பார்வையை செலுத்தியது போதும். வீரத்தை கொஞ்சம் கையில் எடுப்போம். துணிந்து அரசியலில் இறங்குவோம். தக்க ஆதரவும், உண்மையான தோழர்களும் கிடைத்தால், நான் முன் நின்று நாம் அரசியலில் இறங்குவதற்கு அடுத்த கட்ட நடவடிக்கையை செய்ய தயார். இதற்காக என் அரசு வேலையையும், என் IAS இலட்சியத்தையும், என் காதலையும் கூட விட்டுத்தர நான் தயாராய் இருக்கிறேன்.. வளமான இந்தியாவை யாராவது உருவாக்குவார்கள் அதில் நாம் வாழ்ந்துக்கொள்ளலாம் என்று நினைக்காதீர்கள். நாம்தான் வளமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் தோழர்களே..
இமயம் வரை செல்வோம்… எட்டுத்திக்கும் வெல்வோம்…
- தினேஷ்மாயா
இமயம் வரை செல்வோம்… எட்டுத்திக்கும் வெல்வோம்…
- தினேஷ்மாயா
- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா
தினேஷ்மாயா