நிலா

Tuesday, December 06, 2011



நிலா
      ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்குத்தான் எழுத எனக்கு நேரம் கிடைச்சு இருக்கு. எதைப்பத்தி எழுதலாம் என்று கட்டிலில் படுத்துக்கொண்டே யோசித்தபோது என் ஜன்னல் வழியே நிலா எட்டிப்பார்த்தது. அட... எதற்காக நான் தலைப்பை பற்று யோசிக்கனும். இதோ நிலாவே வந்து என்னை பற்றி எழுதலாமே என்று சொல்வதுபோல இருந்தது. என்ன எழுதுவது என்று தெரியாமல் நிலா என்று தலைப்பை வைத்துவிட்டு இவ்ளோ எழுதிவிட்டேன் பாருங்க!!
      நிலவை ரசிக்காதவர்கள் யாராச்சும் இருக்க முடியுமா சொல்லுங்க. கிராமத்தில் பொதுவாக அனைவரும் வெட்ட வெளியில்தான் படுப்பார்கள். அவர்களுக்கும் நிலவிற்கும் அவ்வளவு பாசப்பிணைப்பு இருக்கும்.
      இரவு நேரத்தில் வாகனம் ஓட்டும் பல வண்டி ஓட்டுநர்களுக்கு பயணம் முழுதும் துணையாய் வரும் நம் நிலா.
      இரவு நேர பயணத்தின் போது, ஒரு பழைய பாட்டு பேருந்தில் ஒலித்துக்கொண்டிருக்கும். தூக்கம் வராமல் நாம் ஜன்னலில் தலை சாய்த்து பாட்டை ரசிக்கும் வேலையில் அழையா விருந்தாளியாக நிலா வந்து நம் கண் முன் நிற்கும். அந்த மாதிரி வேலையில் நிலவை ரசிப்பது எவ்வளவு சுகம் தெரியுமா.
      எனக்கு நினைவிருக்கு. ஒரு நாள் மின்சாரம் இல்லாத போது நான், அம்மா, அப்பா, தங்கை அனைவரும் நிலா வெளிச்சத்தில் அம்மா எங்கள் அனைவருக்கும் சாப்பாடு உருண்டை பிடிச்சு தந்தாங்க. அது வழக்கத்தை விடவும் ருசி அதிகமாய் இருந்தது.
      கூரைவீட்டில் ஓட்டை இருப்பது அனைவருக்கும் வருத்தம்தான். ஆனால் அதிகம் மேக மூட்டம் இல்லாத நாளில் அந்த ஓட்டை வழியே நிலவை ரசித்தபடியே தூங்குவதும் சுகம்தான்.
      சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைக்கு அம்மா நிலவை காட்டித்தான் சாப்பாடு ஊட்டுவார், அதும் நிலவில் ஒரு பாட்டி வடை சுட்டுட்டு இருப்பாங்கனு கதையெல்லாம் வேறு சொல்வாங்க அம்மா.
      காதலனுக்கு நிலவை பார்க்கும்போதெல்லாம் அவன் காதலிதான் முன் வந்து நிற்பாள்.
      புதிதாய் மணமான தம்பதிகள் கூட தேன்நிலவை தான் அதிகம் விரும்புவார்கள். அங்கும் நிலவிற்கு பங்கு இருக்கிறது.
      வயதான காலத்தில் தன் துணையுடன், ஈஸி சேரில் சாய்ந்துக்கொண்டு அவள் கையைப்பிடித்து நிலவை பார்த்து தங்கள் இளைய நினைவுகளை அசைப்போடுவது ஈடு இணையில்லாத இன்பம்.
      என்னத்தான் நம் விஞ்ஞானம் அதிகம் வளர்ந்துவிட்டாலும், நிலவை ஒரு அறிவியலாக பாராமல், நம் வாழ்வில் எப்போதும் கூட வரும் நண்பனாகவே பார்க்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. அதில் முதலாமவன் நானாகத்தான் இருப்பேன்…. J


- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: