ஈழம் இன்று...

Sunday, December 25, 2011




ஈழம் இன்று...

ஈழம்... இந்த நூற்றாண்டின் சொல்லி மாளாத சோகம் !

இரண்டரை ஆண்டுகளைக் கடந்த பிறகும் மரண பீதி விலகவில்லை. கடவுளின் வரைபடத்தில் கூட இல்லாத தேசமாகிவிட்டது. சிதைக்கப்பட்ட இடங்களின் சிதிலங்கள் மீது சிமெண்ட் பூசி மறைக்கும் காரியங்கள் மட்டும் தான் இந்த 30 மாதங்களில் நடந்துள்ளன. மிச்சம் இருப்பவர்களை உரிமை பெற்றவர்களாக அல்ல... உயிர் உள்ளவர்களாகக் கூட மதிக்க இலங்கை அரசு தயாராக இல்லை என்பதே உலகத்துக்கான செய்தி!

விடுதலைப் புலிகள் மட்டும் அல்ல... மொத்தத் தமிழர்களும் போராளிகள் தான் . அவர்களை வெளியே விடுவது ஆபத்து என்று அனைத்துத் தமிழர்களையும் நடுக்காட்டுக்குள் திறந்த வெளிச் சிறை வைத்து சுற்றிலும் இரும்பு முள்வேலி அமைத்தார்கள். அதில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் அடைக்கப்பட்டார்கள். இப்படி ஒரு மனித உரிமை மீறல் உலகத்தில் எங்கும் நடந்தது இல்லை என்று ஐநா சபை உள்ளிட்ட அனைத்து நாடுகளும் திரும்பத் திரும்பச் சொல்லி ஐரோப்பா ஒன்றியம் இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்கும் சூழ்நிலை வந்த பிறகு தான் வயதானவர்கள் பெண்கள் குழந்தைகள் வெளியே விட்டார்கள் . முள்வேலிக்குள் இருப்பவர்களுக்கும் சரியான சாப்பாடு குடிக்கத் தண்ணீர் கூடக் கொடுக்காமல் விட்டதில் பலரும் நொந்து செத்துபோனார்கள் . கையில் பணமும் நகையும் வைத்திருந்தவர்கள் அங்கே இருந்த சிங்கள அதிகாரிகளுக்கு கொடுத்து வெளிநாடுகளுக்குத் தப்பித்தார்கள் . இப்படிப் பலரும், பல வழிகளில் தப்பியது போக இன்னமும் கதிர்காமர் மற்றும் ஆனந்த குமாரசாமி ஆகிய இரண்டும் முகாம்கள் இருக்கின்றன .கதிர்காமர் முகாமில் 1017 குடும்பங்களும் ஆனந்த குமாரசாமி முகாமில் 1262 குடும்பங்களும் என மொத்தம் 7540 பேர் மட்டுமே இருப்பதாகக் கடந்த வாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு தகவல் சொல்லப்பட்டுள்ளது.

முகாமைவிட்டு வெளியே வந்த தங்களது சொந்த ஊருக்கு சென்ற பலருக்கும் அவர்களது வீடு இருந்த சுவடே இல்லை. மரங்கள் உள்ள இடத்தில் டெண்ட் போட்டுத் தங்கி இருக்கிறார்கள். அவர்களது சொந்த நிலம் எங்கே என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. அரசாங்கம் எடுத்துக் கொண்டுவிட்டது . பழைய பாத்திரங்கள் செல்லாது என்று சொல்லிவிட்டார்கள் மீன் பிடிக்கக் கடற்கரைக்கும் செல்ல முடியாது. இடிபாடுகள் கொண்ட பழைய கட்டடங்களையும் தெருக்களையும் பார்த்த படியே படுத்துக்கிடக்கின்றன தமிழ்க் குடும்பங்கள் . 80 ஆயிரம் விதவைகள் 5000 உடல் ஊனமுற்றோர் அநாதைகளாக அலைகிறார்கள் . எங்கள் குழந்தைகளைக் காணவில்லை என்று குவிந்த புகார்களில் இருந்த 49 குழந்தைகள் மட்டும் மீட்கப்பட்டு உள்ளன. 50 ஆயிரம் வீடுகள் கட்ட இந்தியா கொடுத்த கோடிக்கணக்கான பணத்தை தரவில்லை என்கிறார் எம்பி யான சீ.யோகோஸ்வரன் எங்களை யாரும் கேள்வியே கேட்க முடியாது என்பது தான் ராஜபக்ஷே தமிழர்களுக்குச் சொல்லும் ஒரு வரிச்செய்தி.

எங்கும் ராணுவமயம்:

வடக்கு கிழக்கு மாகாணங்களில் ராணுவத்தின் ஆட்சிதான் நடக்கிறது. என்று தமிழ் எம்பி க்கள் கூட்டமைப்பு சொல்கிறது. அதை உறுதிபடுத்துவது மாதிரியே திரும்பிய பக்கம் எல்லாம் ராணுவம் ராணுவம் ரானுவம் மட்டுமே
போர் முடிந்துவிட்டதே அப்புறம் எதற்கு ராணுவத்தினரை இந்த அளவுக்கு நிறுத்தி வைத்து இருக்கிறீர்கள் ? அவர்களை வாபஸ் வாங்க வேண்டியது தானே ? என்று தன்னை சந்தித்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷேவிடம் ஐக்கிய நாடுகள் அவையின் செயலாளர் பான் கீ மூன் கேட்டார் . அவர்கள் தான் இப்போது தமிழர்களுக்குச் சேவை செய்கிறார்கள் . அரசாங்கத்தின் அனைத்துத் திட்டங்களையும் அமல்படுத்த அவர்களைத்தான் பயன்படுத்துகிறோம் என்றார் ராஜபக்ஷே துப்பாக்கியை வைத்துக்கொண்டு சமூக சேவை செய்பவர்களை இலங்கையில் தான் பார்க்க முடியும் . வடக்கில் போர் முடிந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. கிழக்கில் போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், யாழ்ப்பாணத்தில் போர் முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்படிப்பட்ட யாழ்ப்பாணத்திலேயே இன்னும் 44 ஆயிரம் ராணுவ வீரர்கள் இருப்பதாக அந்த மாவட்டத்து எம்பி சொல்கிறார். அதன் மொத்த மக்கள் தொகையே 6 லட்சம் தான்.

இலங்கை முழுவதும் ஆறு ராணுவப் படைத்தளங்கள் உள்ளன. அதில் நான்கு தமிழர் பகுதிகளாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு வன்னி ஆகிய இடங்களில் உள்ளன. ராணுவத்தின் 17 டிவிஷன்கள் அங்கு உள்ளன. சிங்களப் பகுதியில் நான்கு டிவிஷன்கள் மட்டுமே இருக்கின்றன. இன்னமும் தமிழ் மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்குவதற்காகவே இவர்களை நிறுத்தி வைத்து இருக்கிறார்கள் என்று தமிழ் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டுகிறார்கள்.

சிங்களமயமாகும் தமிழ் நிலம்

வடக்கும் கிழக்கும் தமிழர் பெரும்பான்மையாக வாழும் இடம் எனவே இது தமிழர் தாயகம் இவை இரண்டையும் இணைத்து தமிழ் ஈழம் அமைப்போம் என்பது தான் தமிழர்கள் இது நாள் வரை வைத்த கோரிக்கை . வடக்கிலும் கிழக்கிலும் சிங்களவர்களைப் பெரும்பான்மை ஆக்கிவிட்டால் ? தமிழர் தாயகம் இணைப்பு தமிழ் ஈழம் என்ற கோரிக்கையே செல்லாததாக ஆகிவிடும் அல்லவா ராஜபக்ஷேவின் திட்டம் இது தான் . இப்போது தமிழர் பகுதியில் இது தான் நடக்கிறது.
தமிழர் கையில் இருந்த நிலங்களை வித்தியாசமாக தந்திரத்தின் மூலம் பறிக்கிறார்கள். ஊர்க் காவல் படைக்கு இடம் வேண்டும் என்று சொல்லி மொத்தமாக அரசாங்கம் எடுத்துகொள்கிறதாம் பிறகு இந்த இடங்கள் ராணுவ வீரர்களுக்குத் தரப்படுகின்றன. அவர்கள் சிங்கள மக்களுக்கு விற்பனை செய்கிறார்கள் . பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இந்த மாதிரி கையகப்படுத்தப்பட்டு சிங்களவர்களுக்குத் தாரைவார்க்கப்படுகின்றன. புதிய முகாம்கள் அமைத்தல் ராணுவத்துக்கான இட வசதிகள் ராணுவத்தின் தேவைகள் ஆகியவற்றுக்கான காணிகளை எடுப்பது என இடங்கள் பறிக்கப்படுகின்றன. மக்கள் தங்களது சொந்த இடங்களுக்குச் சென்று தங்களது வாழ்க்கையை தொடங்க முடியாமல் அவர்களது வாழ்க்கையே ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது. என்கிறார் தமிழ்தலைவர்களில் ஒருவரான இரா.சம்பந்தம் இதனால் ஓமந்தை என்ற இடம் ஓமந்த என்ற சிங்கள உச்சரிப்புடன் சொல்லப்படுகிறது. கொச்சான்குளம் என்ற ஊர் கால பொவசெவெள என்று மாற்றப் பட்டுவிட்டது. தமிழில் எழுதப்பட்ட பலகைகள் அழிக்கப்பட்டு சிங்களம் ஆங்கிலத்தில் எழுதப்படுகின்றன. கிளிநொச்சியில் பிரதான தெருவுக்கு மகிந்த ராஜபக்ஷே மாவத்தை என்று சூட்டப்பட்டு உள்ளது. இந்து கிறிஸ்தவக் கோயில்கள் இடிந்த நிலையில் கிடக்க புத்த விகாரைகள் புத்துணர்வு பெற்று எழுகின்றன.

நடுங்கும் ராஜபக்ஷே

இலங்கைக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொடர்ந்து அச்சுறுத்தல் இருக்கிறது. எந்த நாட்டுக்கு சென்றாலும் என் மீது தாக்குதல் நடப்பதற்கான சூழல் இருக்கிறது. அதனால் தான் ராணுவ பலத்தை நான் அதிகப்படுத்தி வருகிறேன் என்று கொழும்பு கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் அதிபர் ராஜபக்ஷே பேசும்போது சொன்னார். இலங்கைப் பகுதியில் அதிக அளவில் விழாக்களில் அவர் பங்கேற்பது இல்லை. பெரும்பாலும் அலரி மாளிகை விழாக்களில் மட்டுமே கலந்துகொள்கிறார். லண்டனுக்கு சென்றிருந்த போது புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அவர் தங்கி இருந்த இடத்தை சுற்றி வளைத்த போது எப்படி தப்பினார் என்று வெளியே தெரியாத அளவுக்கு கொழும்பு வந்து குதித்தார். இதன் பிறகு அவரது வெளிப் பயணங்கள் பலதும் தள்ளி வைக்கப்பட்டன.

அமெரிக்கா இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் ராஜபக்ஷே மீது போர்குற்றவாளி என்று குற்றம் சாட்டும் வழக்குகள் பாய்ந்து வருகின்றன. இதனாலும் பயணங்கள் தள்ளி வைக்கப்படுகின்றன. ராஜபக்ஷேக்கு அடுத்த நிலையில் அவரது தம்பி பசில் வருவாரா அல்லது என்ற உள்வீட்டுக் குழப்பம் இப்போதே தொடங்கிவிட்டது. தனது மகனைக் கொண்டு வர வேண்டும் என்பதில் மகிந்தாவின் மனைவி ஆர்வமாக இருக்கிறார். விடுதலைபுலிகள் பேரால் கூறப்படும் ஆபத்து ஒரு பக்கம் இருந்தாலும் நிதி நெருக்கடி காரணமாக இலங்கை அதிகப்படியான கடன் சுமைகளில் மூழ்கி வருவதும் இதனால் பொருட்களின் விலை அதிகமாகி வருவதும் சிங்கள மக்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கி உள்ளன. என்ன ஆனாலும் பரவாயில்லை என்று ராணுவத்துக்கு மட்டும் 222.9 மில்லியன் ஒதுக்கிவிட்டு உட்கார்ந்துவிட்டார் ராஜபக்ஷே . நாடாளுமன்றத்தில் இந்த பட்ஜெட் மீதான விவாதம் நடந்துகொண்டு இருந்தபோது பார்வையாளர் மாடத்தில் இருந்த ஒருவர் தண்ணீர் பாக்கெட்டைத் தூக்கிப்போட வெடிகுண்டு விழுந்ததைப் போல அத்தனை பேரும் பதறிப்போனார்கள். அனைவரையும் விட அதிகமாக பதறிப்போனவர் ராஜபக்ஷே.

கண் துடைப்பு கமிஷன்

ராஜபக்ஷே மீது போர்க் குற்ற வழக்கை பதிவு செய்துக் கைது செய் என்பது தான் உலகெங்கும் வாழும் தமிழர்களின் குரல் இதற்கு அவர் சொன்ன பதில் இலங்கையில் போர் விதிமீறல் நடத்தி அப்படி தவறு செய்தவர்களைக் கண்டிப்போம் என்பது அதாவது இலங்கை ராணுவத்தினர் செய்த தவறுகளை இலங்கை அரசே விசாரிக்கும் காமெடி இது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்று இதற்குப் பெயர் . 338 பக்கம் கொண்ட இந்த குழுவினரின் அறிக்கை ராஜபக்ஷேவிடம் கடந்த 20ம் தேதி தரப்பட்டது . மொத்த சம்பவங்களைப் பூசி மொழுகும் காரியம் இது என்று கொழும்பு பத்திரிக்கையாளர்கள் சொல்கிறார்கள். சிங்கள மொழி பேசியபடியே தமிழ்ப்பெண்களைக் கற்பழிக்கும் காட்சியும் தமிழ் இளைஞர்களை ராணுவத்தினர் நிர்வாணமாக்கி கண்களைக் கட்டி சுட்டுக்கொல்லும் காட்சியும் சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது . உலகத்துக்கு உண்மையை சொன்ன ஒரு சில நிமிடங்கள் அவைதான். அந்தக் காட்சியே பொய்யானது என்று இந்த அறிக்கை சொல்கிறதாம். ராணுவத்துக்கு வேறு வழி இல்லை. பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று ராணுவம் நினைத்திருந்தால் தீவிரவாதிகளது கை ஓங்கி இருக்கும் என்று காரணமும் சொல்கிறதாம். அதையும் மீறிச் சில சம்பவங்கள் நடந்திருந்தால் அதற்கு சரத் ஃபொன்சேகாவும் அவரது ஆதரவு ராணுவ அதிகாரிகள் சிலரும் தான் காரணம் என்று கைகாட்டுகிறதாம் இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்னமும் தாக்கல் செய்யப்படாத அந்த அறிக்கையின் சில தகவல்களை சிங்களக் பத்திரிக்கைகள் வெளியிட ஆரம்பித்து உள்ளன. இந்த அறிக்கையை ஏற்க முடியாது என்று சிங்களக் கட்சிகளே சொல்ல ஆரம்பித்து உள்ளன.

எப்படி இருக்கிறார்கள் ஃபொன்சேகா

மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று சரத் ஃபொன்சேகா கொழும்பு வெலிக்கடைச் சிறையில் இருக்கிறார்கள். அவரது விடுதலைக்காக எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளும் பொய்த்துவிட்டன. தனக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுத் தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்தார் ஃபொன்சேகா யார் இந்த தண்டனையைக் கொடுத்தாரோ அதே நீதிபதிக்குப் பதவி உயர்வை கொடுத்து அந்த அப்பீல் மனுவையும் அவரையே விசாரிக்கச் சொல்லிவிட்டார் ராஜபக்ஷே பிரிந்த இந்த இரண்டு மாஜி நண்பர்களுக்குள் நடக்கும் அரசியல் என் கணவரைக் காப்பாற்றுங்கள் என்று ஃபொன்சேகாவின் மனைவி தான் தினமும் அறிக்கை விடுகிறார். ஃபொன்சேகாவை எப்போது எல்லாம் மருத்துவமனையில் காட்ட வேண்டுமோ அப்போது எல்லாம் எதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அங்கு அழைத்துச் செல்ல மறுத்துவிடுகிறார்களாம். இந்த நிலையில் ஃபொன்சேகாவின் விடுதலைக்காக சிங்களக் கட்சிகளை ஒன்றுதிரட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே குரல் கொடுத்துள்ளார். உடனே ரணில் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களைச் (ஹோமோ செக்ஸ் மாதிரியான புகார்கள்) சொல்லி கேவலப்படுத்தும் காரியங்கள் தொடங்கி இருக்கின்றன. ஃபொன்சேகா உயிரோடு வெளியே வரமாட்டார்கள் என்கிற அளவுக்கு அவருக்கு நெருக்கடிகள் ஏற்பட்டுவிட்டனவாம்.

பேசிப்பார்க்கும் தமிழ் எம்பிக்கள்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் அணி திரண்டுள்ள தமிழர் எம்பிக்கள் மட்டும் தான் ஈழத் தமிழர்களுக்காக அந்த மண்ணில் இருந்தபடி தயங்காமல் பேசுகிறவர்கள். நாடாளுமன்றத்திலும் இவர்கள் பேச்சு நம்பிக்கை தருவதாக உள்ளது. பயன் இருக்கிறதோ இல்லையோ இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இருக்கிறார்கள். இதுவரை 13 முறை இவர்கள் பேசி இருக்கிறார்கள்.

டிசம்பர் மாதம் மட்டும் நான்கு நாட்கள் பேசுவதற்கான தேதி குறிக்கப்பட்டுள்ளது. மீள் குடியமர்வு புனர்வு வாழ்வு வீட்டு வசதி தொழில் வாய்ப்பு அத்தியாவசியத் தேவைகள் ஆகிய கோரிக்கைகளை இவர்கள் முன்வைப்பதோடு அரசியல் தீர்வையும் வலியுறுத்துகிறார்கள். நாங்கள் எங்களுக்குத் தேவையானதைச் சொல்லிவிட்டோம் . அரசு இதுவரை எந்தப் பதிலும் சொல்லவில்லை. என்கிறோம் சம்பந்தம்.

இந்தப் பேச்சுவார்த்தையில் நாங்கள் நிதானமாகச் செயல்படுவோம். எமது மக்களுக்கு நாங்கள் துரோகம் செய்யமாட்டோம். விட்டுத் தர மாட்டோம் என்கிறார் சம்பந்தம். இன்னும் எத்தனை கற்று பேசுவார்கள் எனப் பார்ப்போம்.

தமிழர்களின் மெளன எழுச்சி

தமிழர்கள் முதலில் அடி வாங்கியதும், திருப்பி அடிக்க ஆரம்பித்ததும் யாழ்ப்பாணம் தான் . எல்லாவற்றுக்கும் ஆரம்பம் அதுதான் . இப்போது அங்கும் சில ஒளி மின்னல்கள் கடந்த வாரத்தில் தெரிந்தன. உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நவம்பர் 27 மாவீரர் நாளுக்கான நிர்வாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டதாகும்.

சத்திய லட்சிய வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களின் சத்திய வழியில் பயணித்து சுதந்திரத் தமிழீழத்தை வென்றெடுக்க உறுதி பூணுவோம் என்று எழுதப்பட்டதைப் பார்த்து தமிழர் மாணவர்கள் உணர்ச்சி அடைய அடுத்த சில நிமிடங்களிலேயே ஆறு பைக்குகளில் முகமூடி அணிந்து ( ராணுவத்தினர் என்று சொல்லப்படுகிறது) வந்தவர்கள் அந்த சுவரொட்டியைக் கிழித்துச் சென்றுவிட்டார்களாம். கானா நகர் மணற்காடு முத்துமாரி அம்பாள் ஆலயத்துக்கும் பண்டத்தரிப்பான் குளம் ஸ்ரீசுந்தரேசன் பெருமாள் கோயிலுக்கும் வந்த கடற்படை வீரர்கள் இந்த ஒரு வாரத்துக்கும் கோயிலில் மணி அடிக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்களாம்.

மீறி ஒலித்திருக்கிறது மாவீரர் மணி ஓசை...!!!!!!!!

- நன்றி ஆனந்த விகடன்


- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

1 Comments:

GUNAL said...

VELVOM THAMIZHA...