ராகுகாலம்

Tuesday, December 06, 2011




ராகுகாலம்
      திங்கள்    - 7.30 முதல் 9.00 மணி வரை
      செவ்வாய் - 3.00 முதல் 4.30 மணி வரை
      புதன்       - 12.00 முதல் 1.30 மணி வரை
வியாழன்  - 1.30 முதல் 3.00 மணி வரை
வெள்ளி    - 10.30 முதல் 12.00 மணி வரை
சனி         - 9.00 முதல் 10.30 மணி வரை
ஞாயிறு    - 4.30 முதல் 6.00 மணி வரை

நான் இங்கே ராகுகாலத்தின் நேரத்தை பற்றி சொல்ல வரவில்லை. நம் நாட்டில் இன்னும் பலர் இந்த ராகுகாலத்திற்கு பயந்து எந்த ஒரு புதிய வேலைகளையும் செய்யாமல் இருக்கின்றனர். ஒரு மனிதன் சராசரியாக 60 ஆண்டுகள் வாழ்கிறான் என்று எடுத்துக்கொள்வோம். ஒரு நாளில் அவன் 90 நிமிடங்கள் ராகுகாலம் பார்பதனால் எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறான் என்றால் அவன் வாழ்நாளில் மொத்தம் 3.75 வருடங்கள் அவன் இந்த ராகுகாலத்தால் இழக்கிறான் என்று அர்த்தம்.
ராகுகாலத்தில் ஏன் எந்த ஒரு விஷயத்தையும் செய்ய அஞ்சுகின்றனர் என்று அவர்களுக்கே தெரியாது. காரணம் கேட்டால், ராகுகாலத்தில் எதையும் செய்யக்கூடாதுனா செய்யக்கூடாது அவ்வளவுதான் என்று பதிலளிப்பர். அதுபோன்றோர்க்கு நான் சொல்கிறேன் பதில்..
நம் இந்து மதம், பூமியை மத்தியில் கொண்டு 9 கிரகங்களும் அதாவது சூரியனும் நம்மை சுற்றி வருவது என்று கருதி அதன்படியே ஜாதகம் மற்றும் பஞ்சாங்கம் எல்லாம் எழுதியிருக்கிறது. ஆனால் உண்மை என்னவென்று அனைவருக்கும் தெரியும். சூரியனைத்தான் மற்ற கிரகங்கள் அனைத்தும் சுற்றி வருகிறது.
அந்த காலத்தில், ராகுவும் கேதுவும் சூரியனுக்கு முறையே வடக்கு திசையிலும் தெற்கு திசையிலும் இருந்துக்கொண்டு பலம் வாய்ந்த கிரகங்களாக இருப்பதாகவும், ராகு சூரியனை விழுங்குவதால் தான் சூரிய கிரகனம் ஏற்படுவதாகவும் கருதினர். ஆனால் சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வருவதால்தான் சூரிய கிரகனம் ஏற்படுகிறது என்று அப்போது அவர்கள் உணரவில்லை. அவ்வளவு சக்தி மிகுந்த சூரியனையே ராகு விழுங்குகிறது, அதன் நிழல் பூமியில் படும் ராகுகாலத்தில் நாம் எந்த விஷயம் செய்தாலும் அது நல்லதாக முடியாது என்று கருதினர். அதுதான் இன்றளவும் நம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இப்படி முட்டாள்தனமாக ராகுகாலம் பார்ப்பதானால் நாம் இந்த உலகைவிட 90 நிமிடம் பின்னோக்கி தள்ளப்படுகிறோம் என்பதை அப்படி பார்க்கும் எவரும் உணரவில்லை. ராகுகாலத்தில் ஒரு விஷயத்தை துவங்கினால் என்ன, ஒன்று வெற்றியில் முடியும் அல்லது தோல்வியில் முடியும். தோல்வியை கண்டு அஞ்சுவது ஏன். வெற்றி என்றும் நிரந்தரம் இல்லை என்பதை அவர்கள் உணரவில்லை போலும். அதே நேரம் தோல்வியும் நிரந்தரமில்லை என்பதை அவர்கள் எண்ணிப்பார்க்க மறந்துவிட்டனர். மனதிற்கு சரி என்று பட்டால் எந்த விஷயத்தையும் நினைத்த அடுத்த கணமே தொடங்கிவிடுவதுதான் சிறந்தது. இனிமேலாவது இப்படி ராகுகாலம் பார்ப்பவர்கள் கொஞ்சம் மாறினால் நிச்சயம் அது உங்கள் வாழ்வில் மாற்றத்தை கொண்டுவரும்.
ராகுகாலம் பார்ப்பவர்களுக்கு நான் இன்னொரு மாற்று வழி சொல்கிறேன் கேளுங்கள். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கும். இந்த ராகு ஒன்றும் உங்கள் கடவுளைவிட பெரியவர் இல்லை. அதனால் உங்கள் கடவுள் மீது பாரத்தை போட்டு உங்கள் செயலை இக்கனமே துவக்குங்கள். வெற்றி நிச்சயம்……

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: