Slam
Book நம் அனைவருக்கும் பிடித்த விஷயம். பள்ளிப்பருவத்தில் Slam Book அல்லது
Autograph Book என்று அழைப்போம். பள்ளியில் பத்தாவது அல்லது பன்னிரண்டாவது
அல்லது கல்லூரி முடித்துவிட்டு செல்லும்போது நம் நண்பர்களின் நினைவாக நமக்கு பிடித்தவர்களின்
நினைவாக இதை அவர்களிடம் கொடுத்து எழுதி வாங்குவோம்.
எவ்வளவு சுகமான அனுபவம் தெரியுமா அது. பள்ளி
முடிய அதாவது பள்ளியில் பொதுத்தேர்வு நடக்க ஒரு மாதம் இருக்கும் முன்னரே படிப்பதற்காக
விடுமுறை விட்டுவிடுவார்கள். அதனால் அந்த விடுமுறைக்கு ஓரிரண்டு மாதங்கள் முன்னதாகவே
பல கடைகள் ஏறி இறங்கி இந்த புத்தகத்தை நாம் தேடிப்பிடிப்போம். அதும் அதில் சிறப்பான
விஷயம் என்ன தெரியுமா. பள்ளிப்பருவத்தில் நம் மனசுக்கு யாரையாச்சும் ரொம்ப பிடிச்சு
இருந்தா, உங்கள் வாழ்க்கைத்துணை எப்படி இருக்க வேண்டும் என்ற வாசகம் இருக்கும் புத்தகமாக
தேடிப்பார்ப்போம்.
ஒருவழியாக புத்தகம் வாங்கிவிட்டு, அதில் முதல்
பக்கத்தில் நம் பெயரை விதவிதமாக டிசைன்களில் எழுதுவோம். மறுநாள் பள்ளிக்கு எடுத்துச்சென்று
முதல் பக்கத்தை நம் மனது யாருக்காக முன்பதிவு செய்து வைத்திருக்கிறதோ அவர்களுக்கு அதை
எழுதித்தர சொல்லி தருவோம். அப்படியே நம் புத்தகத்தை நம் நண்பர்கள் அனைவருக்கும் தருவோம்.
அதோடு நாம் நமது நண்பர்கள் அனைவரிடமும் சொல்லி வெச்சு இருப்போம். அதாவது, நம் மனதுக்கு
பிடிச்ச பெண் மற்றவர்களின் ஆட்டோகிராப் புத்தகத்தில் எழுதும் பக்கத்தின் அடுத்த பக்கத்தில்
நாம்தான் எழுதவேண்டும் அதனால் யாரும் எழுதாதீங்கடா என்று சொல்லிடுவோம். அதுவும் ஒரு
சுகமான அனுபவம்தான்.
மற்றவர்களின் புத்தகத்தை எழுதுவதை விட, அதில்
மற்றவர்கள் அல்லது நம் மனதுக்கு பிடிச்சவங்க என்ன எழுதி இருக்காங்க என்றுதான் மனசு
முதலில் பார்க்கும். ஆசிரியர் எதையாச்சும் பலகையில் எழுதிபோட்டு அதை மனப்பாடம் செய்யச்சொன்னால்
முரண்டு பிடிக்கும் நாம், நொடி நேரத்தில் அவள் எழுதியது அனைத்தையும் மனதில் மனப்பாடம்
செய்துக்கொள்வோம். அவளுக்கு பிடிச்ச நிறம், பிடிச்ச பாடல், பிடிச்ச உணவு, பிடிச்ச படம்,
பிடிச்ச நடிகர் நடிகைகள், பிடிச்ச இடம், அவளின் மறக்க முடியாத நினைவுகள், மிக முக்கியமாக
அவளின் நெருங்கிய நண்பர்களில் நம் பெயரை எங்கேயாச்சும் சொல்லி இருக்காளா என்று கண்கள்
தேடும்.
இதைவிட மிகப்பெரிய விஷயம் ஒன்னு இருக்கு. அட
அதாங்க, மத்தவங்க நம்மை பற்றி என்ன எழுதி இருக்காங்க என்று நாளை பரிட்சையை வைத்துக்கொண்டு
நம் ஆட்டோகிராப் புத்தகத்தை ஆவலாக படித்துக்கொண்டிருப்போம். அதுவும், நம் மனதுக்கு
பிடிச்சவள் நம்மை பற்றி கொஞ்சம் நல்லா எழுதிட்டா போதும். அன்னைக்கு முழுதும் தூக்கமே
வராது.
ஒரு சிலர் இருக்கிறார்கள். யார் ஆட்டோகிராப்
புத்தகம் அவர்களிடம் வந்தாலும் சரி, எதையாச்சும் கொஞ்சம் வித்தியாசமாகவே எழுதுவார்கள்.
அது எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதில் நானும் ஒருவன். எதைக்கேட்டாலும் அதில் ஒரு சிறிய
குறும்புத்தனம் இருக்கும் நான் எழுதுவதில். அது எனக்கும் பிடிக்கும், அவருக்கும் பிடிக்கும்படியாய்
எழுதுவேன்.
ஆட்டோகிராப்
புத்தகம் என்பது எவ்வளவு அரிய பொக்கிஷம் தெரியுமா. நம் பள்ளிப்பருவத்தின் ஒட்டு மொத்த
நினைவையும் இந்த ஒரு புத்தகம் தரும். நாம் பள்ளி வருவத்தில் படித்த புத்தகத்தில் எத்தனையை
இன்று பத்திரமாக வைத்திருக்கிறோமோ இல்லையோ, இந்த ஆட்டோகிராப் புத்தகத்தை அனைவரும் தங்கள்
அலமாரியில் பத்திரமாக வைத்திருப்போம். நான் என் பெட்டியில் இன்னமும் பத்திரமாக என்
3 ஆட்டோகிராப் புத்தகங்களை பத்திரமாக பொக்கிஷமாய் பாதுகாத்து வருகிறேன். ஒன்று பத்தாவது
படிக்கையில் எழுதிவாங்கியது, இன்னொன்று பன்னிரண்டாவதில், மூன்றாவது கல்லூரியில். எல்லாவற்றையும்
விட என் பத்தாவது ஆட்டோகிராப் புத்தகம்தான் என் மனதில் இன்னும் அதிக இடம் பிடித்து
இருக்கிறது. அரும்பு மீசையுடன் துள்ளித்திரிய ஆரம்பித்த நேரத்தில், மனதில் தோன்றியது
காதல் இல்லை என்று புரிந்துக்கொள்ள முடியாமல் அது காதல்தான் என்று நினைத்து அவளுக்காகவே
தேடி தேடி வாங்கிய புத்தகம் அது. மறக்க முடியுமா அந்த சுகமான நினைவுகளை…..
- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment