எனக்கென்ன...
இந்தியா
ஒரு ஜனநாயக நாடு. இதை கேட்கும்போதெலாம் எனக்கு சிரிப்பாய் வரும். இன்னும் எத்தனை நாட்கள்தான்
இப்படியே சொல்லிக்கொண்டு ஊரை ஏமாற்றப்போகிறோமே என்று. சரி நான் எதும் ஆக்ரோஷமாக பேச
விரும்பவில்லை. அதைப் பேசும் மூடு எனக்கு இப்போ இல்லை. ஆனால் நான் இப்போ பேச வருவது,
நம்மில் பலருக்கும் இருக்கும் எனக்கென்ன மனப்பான்மையை பற்றி…
எனக்கென்ன… இது உங்களுக்கு எனக்கு மட்டுமல்லாமல்
இந்தியாவின் ஒட்டு மொத்த மக்களின் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துவிட்ட வார்த்தை இது.
பேச்சு உரிமை நம்மில் அனைவருக்கும் இருக்கிறது.
ஆனால் நம்மில் எத்தனை பேர் அதை சரியாக பயன்படுத்துகிறோம். பேச்சு உரிமை என்றால் எதை
வேண்டுமானாலும் பேசிட எனக்கு உரிமை இருக்கிறது என்பது அர்த்தம் ஆகாது. பேச வேண்டுமானால்
ஒரு நாள் முழுக்க வெட்டிக்கதை பேசலாம். உருப்படியான விஷயத்தை பேசுவதுண்டா நாம். சரி
அதைவிடுங்க.
தப்பு நடந்தா நம்மில் எத்தனை பேர் தட்டி கேட்கிறோம்.
தப்பு என்றால், சினிமாவில் வருவது போல ஒரு மார்க்கெட்ல ஒரு தனி ஆளை பத்து அடியாட்கள்
அடிப்பார்கள், அதை பலர் நின்று வேடிக்கை பார்ப்பார்கள். அதை தட்டி கேட்க யாருமில்லை
என்று காமெடியான விஷயத்தை பத்தி நான் பேசலை. அது சினிமா.
நான் நிஜ வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை
பற்றி பேசுகிறேன். ஒரு கடைக்கு செல்கிறோம். ஒரு பொருளில் விலை 10 ரூபாய் என அதில் எழுதப்பட்டு
இருக்கிறது. அதன் மொத்த விலையே அவ்வளவுதான் என்று அந்த நிறூவனமே முடிவு செய்த பின்னர்தான்
விற்பனைக்கே வருகிறது. அதை 2 ரூபாய் அதிகமாக கடைக்காரர் விற்கிறார் என்றால் நம்மில்
எத்தனை பேர் அதை எதிர்த்து கேட்கிறோம். எனக்கென்ன. 2 ரூபாய்தானே. கொடுத்துவிட்டு போகலாம்.
மற்றவன் யாராச்சும் வந்து சண்டை போட்டால்தான் இவங்களுக்கு புத்தி வரும் என்று நாம்
அதிக பணம் தந்து பொருளை வாங்கிவிட்டு வந்துவிடுவோம்.
பொது இடத்தில் மக்களுக்கு இடையூராக புகைப்பிடிப்பவர்களை
நம்மில் எத்தனை பேர் தட்டு கேட்கிறோம். தட்டி கேட்காவிட்டாலும் அவர்களிடம் கொஞ்சம்
தள்ளி செல்லும்பதி நம்மில் எத்தனை பேர் சொல்கிறோம். எனக்கென்ன. நான் கொஞ்சம் தள்ளி
நின்று கொள்கிறேன். மற்றவர் யாராச்சும் வந்து அவர்களிடம் சொல்லட்டும் என்று நினைக்கிறோம்.
உதாரணம் வெறும் இரண்டு தான் இங்கே சொல்லி இருக்கிறேன்.
உதாரணங்கள் கோடிக்கணக்காய் அடுக்கிக்கொண்டே செல்லலாம். அதைப்பற்றி நான் பேசுவதைவிட
நம் மக்களின் மனப்பான்மையைதான் இங்கே பேச விரும்புகிறேன்.
இந்த மனப்பான்மை எவ்வளவு ஆபத்தானது என்று யாருக்கும்
தெரியாது. இப்போது இது சிறியதாக தோன்றும். பின்னால் பெரும் பூகம்பமாய் வெடிக்கும் இந்த
பிரச்சனை.
இந்த மனப்பான்மையால் இவ்வுலகில் நாம் எந்தவித
மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. இப்படி நினைப்பதால் நம் மனதில் அடிமைத்தனம்தான் அதிகம்
வேறூன்றி நிற்கும். இதை எவரும் உணருவதில்லை. இந்த மனப்பான்மையினை நமக்கே தெரியாமல்
நம் சந்ததிகளுக்கும் நாம் தருகிறோம்.
இருப்பதிலேயே பெருங்கொடுமை என்ன தெரியுமா. எனக்கென்ன
என்று நாம் நினைத்து நினைத்து எதாச்சும் நடந்தால் அதை மற்றவர் கேட்கட்டும் என்று இருந்துவிடுகிறோம்.
எப்பவாச்சும் நமக்கே எதாச்சும் நடந்தாலும் கூட அதை தட்டிகேட்க யாராச்சும் வரமாட்டாங்களா
என்று மனம் எதிர்ப்பார்க்கும். இது மிகவும் ஆபத்தான விஷயம். இந்த பிரச்சனை உங்களுக்கு
சாதாரணமாக தோன்றலாம். இந்த விஷயத்திற்காக நான் ஏன் இவ்வளவு அக்கறை காட்டுறேன் என்று
உங்களுக்கு புரியாமல் கூட போகலாம். ஆனால் இந்த விஷயம் உடனே கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
நாம் நம்மில் இருக்கும் இந்த மனப்பான்மையை உடனே மாற்றிக்கொள்ள முயல வேண்டும். அதுதான்
நாம் நமக்கும் நம் நாட்டிற்கும் செய்யும் மிகப்பெரிய உதவியாய் இருக்கும் என்பது என்
கருத்து…
- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment