அன்பு பிடிக்கும்

Thursday, September 20, 2012




இவ்வுலகில் மதம் பிடிக்கும் இரண்டு மிருகங்கள் எதுவென்று உங்களுக்கு தெரியுமா ?

1. யானை
2. மனிதன்

ஆம். யானைக்கு எப்போதாவதுதான் மதம் பிடிக்கும். ஆனால் இங்கே பல மனிதர்களுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இறக்கும்வரை மதம் பிடித்துக்கொண்டுதான் இருக்கிறது.

சமீபத்தில் பாகிஸ்தானில், குரானின் சில பக்கங்களை எரித்ததற்காக ஒரு பெண்ணிற்கு மரண தண்டனை வழங்கினார்கள். பின்னர் விசாரணையில், அந்த பெண் ஒரு கிறித்துவ பெண், அவளை ஒரு இசுலாமிய பையன் காதலித்துவந்தான். அவனின் காதலுக்கு இவள் மறுப்பு தெரிவிக்கவே அவளை மாட்டிவிட அவன் இச்செயலை செய்திருக்கிறான். இந்த விஷயத்தை விடுங்கள். அவர்கள் புனிதமாக கருதும் ஒரு புத்தகத்தின் சில பக்கங்களை கிழித்து எரித்தமைக்காக ஒரு பெண்ணிற்கு மரண தண்டனை தந்திருக்கிறார்கள். அதுவும் அந்த பெண்ணிற்கு வயது 13 !!!

    இந்த குற்றத்தை அவள் செய்யவில்லை என்றாலும், குற்றத்தின் உண்மைதன்மையை அறியும் முன்னரே அந்த சின்ன பெண்ணிற்கு மரண தண்டனை விதிக்கும் அளவிற்கு மனிதாபிமானம் இறந்துவிட்டதா இல்லை மதம் அவர்களின் கண்ணை மறைத்துவிட்டதா. அவள் கிழித்து எரித்ததாய் சொல்லும் அதே குரானில் தான் மன்னிப்பு பற்றியும் சொல்லியிருக்கிறார் நபிகள் நாயகம்

“ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி, இயல்பில், தமக்கு தீங்கிழைத்த ஒருவரை பழிவாங்கும் முயற்சியில் ஈடுபடக்கூடியவர்களாக இருக்கவில்லை. பிறரது தீங்குகளை தாங்கிக் கொண்டார்கள். தம்மீதான காபிர்களின் கொடுமைகள் தமது மன்னிப்பு இரக்கம் என்பவற்றின் மூலம் எதிர்கொண்டார்கள்.”
மதம் ஒருவனின் கண்ணை எந்த அளவிற்கு மறைத்திருக்கிறது பாருங்கள். அறிவியல் ரீதியாக பார்த்தால் சில காகிதங்களை எரித்ததால் மரண தண்டனையா?
நான் இசுலாமியர்களின் நம்பிக்கையை குற்றம் சொல்லவில்லை. இராமாயணத்தையோ, மகாபாரதத்தையோ கிழித்து எரித்தால் உனக்கு எப்படி இருக்கும் என்று என்னை கேட்பீர்கள். அது இராமாயணமாக இருந்தாலும் சரி, திருகுரானாக இருந்தாலும் சரி, பைபிளாக இருந்தாலும் சரி. நீங்கள் சொல்வதுபோல, அதில் இருக்கும் சில பக்கங்களை கிழித்து எரிவதால் ஒன்று அந்த நூல்களுக்கு இழிவு ஏற்பட்டு விடாது. அதை இழிவு படுத்தவும் முடியாது என்பதை நீங்கள் எப்போதுதான் புரிந்துக்கொள்ள போகிறீர்கள். காலங்களை கடந்த நற்கருத்துக்கள் பொதிந்து கிடக்கும் அந்த இதிகாசங்களை மக்களின் நன்மைக்காக பயன்படுத்த வேண்டுமே தவிர பிற விஷயங்களுக்காக பயன்படுத்துவது மூடத்தனமே.
      இங்கே எந்த இந்து குரானையும் பைபிளையும் படித்திருக்கான், எந்த கிறித்தவன் குரானை படித்திருக்கான், எந்த இசுலாமியன் இராமாயணத்தை படித்திருக்கான். இங்கேயே தெரியவில்லையா மதம் உங்கள் கண்களை எவ்வளவு மறைத்திருக்கிறது என்று. அனைத்து மதத்தின் இதிகாசங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் மைய கருத்து அன்பு. மதம் என்னும் வட்டத்தை நீங்களே உங்களுக்கு போட்டுக்கொண்டு அதனை விட்டு வெளியேவர தயங்குகின்றனர். சொல்லப்போனால், நீங்கள் இறைவனை அடைய உங்கள் மதம்தான் தடையாக இருக்கிறது என்பேன் நான். எந்த மதமானால் என்ன, இறைவன் ஒருவன்தான் என்பதை உணர்த்தும் மதம் இன்றுவரை இல்லவே இல்லையே இங்கு. என்ன செய்ய. இறைவனேகூட இப்படி நினைத்திருக்கலாம், யாரும் தன்னை எளிதில் அடைந்துவிடக்கூடாது என்று மக்களுக்குள் வேறுபாட்டை கொண்டுவர மதம் என்றொரு ஆயுதத்தை கையில் எடுத்திருப்பானோ என்றும் சில சமயங்களில் தோன்றுகிறது.
      மதத்தால் இங்கே எவ்வளவு சண்டைகள், போர்கள், உயிரிழப்புகள், அகதிகள, வாழ்க்கை கைதிகள். சில சமயம் இந்த இறைவனால் உருவாக்கபட்ட மனிதன் மதத்தின் பெயரால் செய்யும் பல விஷயங்களால் அந்த மதத்தையும் இறைவனையுமே வெறுக்க தோன்றுகிறது.
     மிருகத்தில் இருந்துதான் மனிதன் வந்தான் என்றாலும், இன்னும் அந்த மிருக குணம் நம்மில் பலருக்கு மாறவே இல்லை என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு தான் இந்த மதம்.

          அன்பை வெளிப்படுத்துவோம். அன்பை அனைவர்க்கும் பரிசாய் கொடுப்போம். மதம் பிடிக்கும் என்பதைவிட எனக்கு அன்பு பிடிக்கும் என்று சொல்லிப்பாருங்கள். அனைவருக்கும் உங்களை பிடிக்கும்…..

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: