மனிதர்கள் என்றுமே மனிதர்கள்தான். ஆனால் அவர்களுக்குள்தான் எத்தனை பிரிவுகள். இதில் காலம் லமாய் இருக்கும் ஒரு தனி இனம் அகதிகள். அவர்களை அனைவரும் ஒரு தனித்துவிடப்பட்ட ஜீவனாகத்தான் பார்க்கின்றனர்.
தமது தாய்நாட்டில் வாழ்க்கைக்கு தேவையான சூழ்நிலைகள் இல்லாதபோது, அல்லது தங்கள் குடும்பத்திற்கும், உயிருக்கும் ஆபத்து நேரும்போது வேறு ஒரு நாட்டை தஞ்சமாய் நாடி செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு தஞ்சம் தரும் நாடோ, அவர்களை நடத்தும் விதம் மிகவும் கவலை அளிக்கும்விதமாக இருக்கிறது.
நான் யாரைப்பற்றியும் கூறவில்லை. என் ஈழத்தமிழர்களை பற்றியும் என் தாய்திருநாடான இந்தியாவை பற்றியும்தான் பேசுகிறேன்.
இலங்கை அகதிகள் முகாம் என்று அடிக்கடி சொல்கின்றனர். “முகாம்” எனக்கு இந்த வார்த்தையை கேட்டதும் ஏதோ விலங்குகளை அடைத்துவைக்கும் முகாம் என்றுதான் தோன்றுகிறது. அவர்களை யாரும் மக்களாய் நினைப்பதில்லை. மனிதர்களை நடத்துவதுபோல் நடத்துவதில்லை. எந்த அடிப்படையில் இப்படி சொல்கிறேன் என்றுதானே கேட்கிறீர்கள்.
சமீபத்தில் வெளிவந்த சில செய்திகள்தான் என்னை இப்படி பேச வைக்கிறது. அகதிகளை கைதிகள் போல நடத்துகிறார்கள் இங்கே. அவர்கள் தங்கள் தாய்நாட்டை விட்டு வேறொரு நாட்டிற்கு தஞ்சமாய் வருகின்றனர். ஒருவேலை அவர்கள் தேடிவந்த நாட்டிலும் அவர்களின் உடமைக்கும் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்னும் நிலை இல்லாத போது அவர்கள் வேறொரு நாட்டைத் தேடி செல்கின்றனர். இப்படி செல்பவர்களை கைது செய்கிறார்கள். கேட்டால் சட்டப்படி குற்றம் என்கிறார்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காத சட்டம் அவர்களுக்கு தண்டனை மட்டும் தர ஓடோடி வருவது என்ன் நியாயம். அகதிகள் முகாமில் இருந்து ஒருவரை விடுதலை செய்ததாக செய்தி ஒன்று படித்தேன். அவர் என்ன கைதியா அல்ல அவர் இருப்பது என்ன சிறையா அவரை விடுதலை செய்ய. செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்லும் ஊடகங்களும் சில நேரங்களில் ஏன் பல நேரங்களில் தவறாகத்தான் செய்திகளை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கின்றன. என் செய்வது. எல்லாம் வியாபாரத்திற்கு என்றான பிறகு யாரை இங்கே குற்றம் சொல்லி என்ன ஆகப்போகிறது.
எந்த ஒரு முதலமைச்சரோ, அல்லது வேறு அமைச்சர்களோ அகதிகள் முகாமிற்கு சென்று அவர்களின் துயரையும் தேவைகளையும் கண்டறிந்தனர் என்று கேள்விப்பட்டதே இல்லை. தேடி வந்தவர்களுக்கு மாடிவீட்டில் விருந்தளிக்காவிட்டாலும் பரவாயில்லை, அவர்களுக்கு ஒரு குடிசை வீட்டில் இருக்க இடம் அளிக்கலாம் இல்லையா.
சொந்த பந்தங்களையும், குடும்பத்தையும் இழந்து இனி இதுதான் என் வீடு என்று நம்மை நம்பி வந்த என் ஈழ சகோதரர்கள் இங்கு படும் துன்பம் சொல்லி மாளாது. இங்கே அவர்கள் சந்திக்கும் அவல நிலையினை பார்க்கையில் அவர்கள் அங்கே வீர மரணம் கண்டிருக்கலாம் என்று நினைக்க தோன்றுகிறது. ஒருபோது தன் தன்மானத்தை விட்டுக்கொடுக்காதவன் தமிழன். ஆனால் இங்கு அப்படி வாழவேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை பார்க்கையில் கண்ணீர் கூட வர மறுக்கிறது மாறாய் கோபம்தான் பெருக்கெடுத்து வருகிறது.
நான் இவ்வளவு பேசுகிறேனே, நான் இதுவரை ஈழ சகோதரர்கள் இருக்கும் குடிலுக்கு சென்று அவர்களை பார்த்ததில்லை. எங்கே அனுமதிக்கிறார்கள். யார் நீ, உனக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம், உன்னோடு வேறு யார் வந்திருக்கார், எதைப்பற்றி பேச வேண்டும், எவ்வளவு நேரம் பேசுவீர்கள், யாரை பார்க்க வந்திருக்கிறீர்கள், அவரை உங்களுக்கு எப்படி தெரியும்... அப்பப்பா.. கேள்விகளால் ஒரு வேள்வி செய்தார் வைரமுத்து. ஆனால் இவர்களோ, தங்கள் கேள்விகளால் ஒரு வேலி போடுகின்றனர் நாம் அவர்களோது பேசி பழக.
அத்தனைக்கும் நாம் பார்க்க நினைப்பது ஒரு தமிழனை. தமிழனை தமிழன் சென்று பார்க்க ஒரு தமிழனே தடைப்போடுகிறான். நல்லா இருக்குய்யா உங்க நியாயம்.
இதற்கு என்னத்தான் காரணம் என்று ஒன்றும் புரியவில்லை. அரசியல்தான் காரணமா, இல்லை சட்டம் எதாவது சொல்கிறதா, இல்லை நம் மக்களுக்கு தமிழன் என்னும் உணர்வும், “என் இனமடா நீ” என்னும் உணர்வும் செத்துவிட்டதா என்று தெரியவில்லை..
இவர்களை அகதிகள் என்று சொல்ல வேண்டாம். உண்மையில் இவர்கள்
அக-கைதிகளாக இருப்பதை கொஞ்சம் உணர்ந்து பாருங்கள்.
- உள்ள குமுறல்களுடன்
****தினேஷ்மாயா****
0 Comments:
Post a Comment