எங்குநோக்கினும் பணம்..

Wednesday, October 17, 2012



   இந்த உலகில் எங்கு பார்த்தாலும் எதற்கெடுத்தாலும் பணம் தான் முக்கியமாக வந்து நிற்கிறது.

   இன்று என் வாழ்நாளில் முதன்முறையாக காவல் நிலையத்திற்கு சென்றேன். என் அடுத்த வேலை சம்பந்தமாக என் அடையாளத்தையும் முகவரியையும் உறுதிசெய்துக்கொள்ள வர சொன்னார்கள். அங்கும் பணம் தான் முக்கியமாக இருந்தது.

     ஒரு உணவகத்திற்கு சென்றேன். அங்கே வேலை செய்பவர் எனக்கு என்ன வேண்டும் என்று கேட்டு கேட்டு கொண்டு வந்து தந்தார். சாப்பிட்டு முடித்துவிட்டு, ரசீதை என் கையில் கொடுத்தார். 130 ரூபாய் வந்தது. நான் 200 ரூபாயை எடுத்து கல்லாவில் கொடுத்தேன். அவர் மிச்சம் 70 ரூபாய் கொடுத்தார். எனக்கு உணவுகளை எடுத்து வந்து பரிமாறியவர் நான் எதாவது அவருக்கு பணம் தருவேனா என்றபடி நின்றார். ஆனால் நான் எதுவும் தரவில்லையென்று வெளியே வந்து வண்டியை எடுத்தேன். அங்கே நின்றிருந்த காவலாளியும் என்னிடம் பணம் எதிர்பார்த்தார். அவருக்கும் எந்த பணமும் தரவில்லை. பின் வண்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். அங்கே யாசகம் கேட்டு வந்தார் ஒருவர். அவரும் என்னிடம் பணம் எதிர்பார்த்தார். 

      ஒரு முறை என் வேலை சம்பந்தமாக ஒரு மருத்துவரை சந்தித்து ஒரு சான்றிதழ் வாங்க நேர்ந்தது. அவரின் கடமைதான் அது. ஆனால் அந்த சான்றிதழ் வழங்க 500 ரூபாய் கேட்டார். 

     பணம் இருப்பவரை கொஞ்சம் பெரியவர் எனவும் பணம் இல்லாதவரை அதிகம் சிறிவர் எனவும் பார்க்கும் உலகம் இது. ஆக, பணம் படைத்தவருக்கு மட்டும்தான் இங்கு மரியாதையா?

    நான் வியர்வை சிந்தி பல போராட்டங்கள், பிரச்சனைகள், கஷ்டங்களைத் தாண்டித்தான் 25000 ருபாயை என் கைகளில் சம்பளமாக பெறுகிறேன். என் வீட்டிற்கு பாதிக்கு மேலே சம்பள பணத்தை தந்துவிட்ட பிறகு என் தேவைக்கும் அறக்கட்டளைக்கும் செலவு செய்வேன். இப்படியிருக்க அவரவர் கடமையை செய்யவே பலர் பணம் கேட்கும் போது நான் எப்படி அவர்களுக்கு பணம் தருவேன், எதிலிருந்து பணத்தை தருவேன். இதில் யாசகம் கேட்போர் வேறு. நான் உழைத்து இல்லாதவர்க்கு தருவதானால் என் மனதிற்கு சம்மதம். ஆனால் மாத வருமானத்திற்கு எதாவது ஒரு வேலையில் இருப்போரே பணம் கேட்கும்போது எதற்காக பணம் கேட்கின்றனர் என்று தெரியவில்லை. தட்டிகேட்க சென்றால், உனக்கு எதற்கு இந்த வீண் வம்பு என்கின்றனர் என்னுடன் இருக்கும் நண்பர்கள். 

   பணம்தான் மனிதனை ஆட்சி செய்துக்கொண்டிருக்கிறது என்பதை புரிந்துக்கொண்டேன். அதற்காக மற்றவர் செய்யும் தவறுக்கு துணை போவதும் தப்புத்தானே. அதை நான் மனமுவந்து எப்படி செய்வேன். எல்லாம் இந்த பணம் படுத்தும் பாடு. என்னத்தான் செய்ய ?


- அன்புடன்
****தினேஷ்மாயா****

1 Comments:

Unknown said...

உலகில் பணம் இல்லையெனில்,- உணர்வுகள்,
உறவுகள், உதவிகள், உரிமைகள் உதாசீனப்படுத்தபடும்.