ஓர் குளிரான இரவில்..

Saturday, March 16, 2013




எப்போதோ படித்த ஒரு குறுங்கதை..

     ஓர் குளிரான இரவு. குளிரில் ஊரே உறைந்துபோய் இருந்தது. அப்போது செல்வம், கடவுள், மரணம் இம்மூன்றும் குளிருக்கு ஒதுங்க ஊரில் ஒதுக்குப்புறமாய் இருந்த ஒரு ஏழையின் குடிசை கதவை தட்டினர். முதலில் செல்வம் கதவை தட்டியது. ஏழை கதவை திறக்கும் முன், யாரென்று கேட்டான். அப்போது நான் தான் செல்வம் வந்திருக்கிறேன். கதவை திற என்றது செல்வம். ஆனால் அவன் கதவை திறக்கவில்லை. அடுத்து கடவுள் கதவை தட்டினார். அப்போதும் அந்த ஏழை கதவை திறக்கவில்லை. அடுத்து மரணம் கதவை தட்டியது. அப்போது அந்த ஏழை கதவை திறந்து மரணத்தை மட்டும் உள்ளே அனுமதித்தான். செல்வத்திற்கும், கடவுளுக்கும் உச்சகட்ட வியப்பு. எங்களை உள்ளே விடாமல் மரணத்தை மட்டும் உள்ளே ஏன் அனுமதித்தாய் என்று அந்த ஏழையை கேட்டனர்.

    அந்த ஏழை, செல்வம் என் வீட்டிற்கு வருவதில் எனக்கு மகிழ்ச்சி தான். ஆனால் அதே நேரத்தில் செல்வம் எந்த நேரத்திலும் என் வீட்டைவிட்டு கிளம்பிவிடும் நிலையும் இருக்கிறது. அதுமட்டுமின்றி, செல்வம் எப்போதும் செல்வந்தர்களின் பக்கம்தான் அதிகம் வசிக்கிறது. என் போன்ற ஏழைகளிடத்தில் செல்வம் கருணை காட்டுவதில்லை என்றான். அத்தோடு, கடவுளைப் பார்த்து, நீ எல்லோருக்கும் ஒன்றாக உன் கருணையை காட்டுவதில்லையே. என் போன்ற ஏழைகள் எப்போதும் ஏழைகளாகவே இருக்கின்றனர், மேலும் மேலும் துன்பத்தை அனுபவிக்கின்றனர், செல்வம் படைத்தவர்கள் மேலும் மேலும் செல்வத்தை சேர்த்துக்கொண்டு எங்களை வஞ்சிக்கின்றனர். அதற்கு நீ எதுவும் செய்யவில்லை. நீயும் பாரபட்சத்துடனே நடந்துக்கொள்கிறார் என்றான்.

  ஆனால், மரணமோ அனைவர்க்கும் பொதுவானது. ஏழை பணக்காரன் ஆண் பெண் என்று எந்தவித வித்தியாசமும் பார்க்காமல் அனைவர்க்கும் பொதுவானது மரணம் மட்டுமே. அதனால்தான் மரணத்தை நான் அனுமதித்தேன் என்றான். இதை கேட்ட செல்வமும், இறைவனும் குளிருக்கு ஒதுங்க அடுத்தவீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

                           **********************************************

நான் எந்த கருத்தையும் இங்கே முன் வைக்கவில்லை. நான் படித்த எவ்வளவோ கதைகளில் என் மனதை அதிகம் பாதித்த கதை இது என்பதால் இங்கே பதிந்தேன்.


* தினேஷ்மாயா *

0 Comments: