ஒரு திருமணம்

Friday, March 22, 2013



   திருமணம் என்பது ஒரு ஆணுக்கு ஏற்படுத்தும் பாதிப்பைவிட ஒரு பெண்ணின் ஆழ்மனதில் அதிகம் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. காதல் திருமணங்களைப் பற்றி நான் பேசவில்லை. வீட்டில் பெரியவர்கள் பார்த்து நடத்தி முடிக்கும் திருமணம் பற்றி சொல்கிறேன். 

     அதிகம் பார்த்திராத, பேசிராத, அறிமுகமில்லாத ஓர் ஆண்மகனிடம் தன் வாழ்க்கை முழுவதையுமே ஒரு பெண் ஒப்படைக்கிறாள். அவன் எப்படியிருந்தாலும் அவனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவளுக்கு மூன்றாவது முடிச்சு போட்டு முடிக்கும்போதே வந்துவிடுகிறது. மனிதனாக பிறந்த அனைவர்க்கும் கருவறை , கல்லறை என்று இரண்டு வீடுகள் இருக்கும்போது பெண்களுக்கு மட்டும் பிறந்தவீடு, புகுந்தவீடு என்று இன்னும் இரண்டு வீடுகள் இருக்கிறது. 

  பிறந்தவீட்டு சொந்தங்களையும் பார்க்க வேண்டும், புகுந்தவீட்டின் கௌரவத்தையும் காக்க வேண்டும். தான் வழிப்படும் குலதெய்வம் முதல் தன் பெயருக்கு முன்னால் இருக்கும் தந்தையின் முதல் எழுத்து வரை அனைத்தையும் மாற்றிக்கொள்கிறாள். திருமணம் ஆகிவிட்ட பிறகும் ஆண்களை ஒரு முதிர்ந்த தோற்றத்தோடு எவரும் பார்ப்பதில்லை. ஆனால் திருமணம் ஒரு பெண்ணுக்கு 21 வயதில் ஆனாலும், அடுத்த வருடம் அவளை ஒருவர் பார்க்கும்போது அவளை ஒரு முதிர்ந்த தோற்றத்தோடுதான் தன் மனதில் வைத்து பார்ப்பார்.

     குழந்தையை பெறுவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரி பங்கு உண்டு என்றாலும், கடைசிவரை குழந்தையை சுமந்து, பெற்றெடுக்கும் வலி மட்டும் என்னவோ எல்லா உயிரினத்திலும் பெண்களுக்கு மட்டுமே இருக்கிறது. 

    தன் இரத்ததை பால் ஆக்கி, தன் குழந்தைக்கு கொடுத்து கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொள்வது ஆணல்ல, பெண் தான். 

    அதென்னவோ தெரியவில்லை, இந்த உலகத்தில் எங்கே சென்றாலும் குடும்பத்தை நடத்தி செல்வது பெண்களின் வேலையே. ஆண்கள் சம்பாதித்து கொடுப்பதையே தலையாய கடமையாக எண்ணி வருகின்றனர். அவர்களுக்கும் குடும்பத்தை நடத்த தன் துணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பது மறந்தே போகிறது.

  திருமணத்திற்கு முன்பு வரை அடுப்பு தான் சமையல் செய்ய பயன்படுத்துவார்கள். திருமணத்திற்கு பிறகு மனைவியை தான் சமைக்க பயன்படுத்துவார்கள் இங்கே.

       இன்னும் பல சூழ்நிலைகள் உண்டு. பெண்ணை வெறும் குழந்தை பெற்றெடுக்கும் கருவியாகவும் வீட்டு வேலைக்காரியாகவும் நினைக்கும் வர்க்கமும் இங்கே உண்டு.

       ஒரு திருமணம், ஒரு கன்னிப்பெண்ணை, பெண்ணாக்கி, தாயாக்குவதோடு இன்றி அவளை ஒரு தியாகி ஆக்குகிறது. 


       பதிவு செய்ய நிறைய கருத்துகள் இருக்கின்றன. கிடைத்த நேரத்தில் என்னால் இயன்றவற்றை பதிவு செய்திருக்கிறேன். மங்கையர் அனைவர்க்கும் என் சமர்ப்பணம் இது.


* தினேஷ்மாயா *

0 Comments: