திண்டுக்கல் நினைவுகள்

Saturday, March 16, 2013



-  திண்டுக்கல் - 

இரண்டு வருடம் திண்டுக்கல் வாழ்க்கை எனக்கு மறக்க முடியாத நிறைய அனுபவங்களை  அள்ளித் தந்திருக்கிறது.


   2011 ஜீலை மாதம் திண்டுக்கலில், தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணியமர்த்தப்பட்டேன். இதற்கு முன்னர் கர்நாடகா மாநிலத்தில் 4 மாதங்கள் வேறொரு வங்கியில் வேலைசெய்து மொழி புரியாமல் கஷ்டப்பட்டதால் திண்டுக்கலில் எனக்கு புதுப்பணி கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது. ஊரும் புதுசு, மக்களும் புதுசு. கடவுள் புண்ணியத்தில் நான் வேலை செய்யும் வங்கியின் மேல்தளத்திலேயே அதிகம் அலையாமல் நான் தங்கிக்கொள்ள ஒரு சிறு அறை கிடைத்தது. இந்த இரண்டு வருட திண்டுக்கல் வாழ்க்கையில் கடந்த ஆறு மாதங்கள்தான் நான் பிறரிடம் அதிகம் பழக ஆரம்பித்தேன். ஒன்றரை வருடங்கள் படிப்பதற்காகவே நான் என்னை தனிமைப்படுத்தி கொண்டேன். இந்த ஆறு மாதகாலத்தில் எனக்கு கிடைத்த நட்பு வாழ்நாள் முழுதும் மறக்கமுடியாதவண்ணம் அமைந்துவிட்டது.  இந்த குறுகிய காலத்திலேயே பலர் என் மனதில் இடம்பிடித்துவிட்டனர், நானும் பலர் மனதில் இடம்பிடித்துவிட்டேன்.
      
      நான் ஏற்கெனவே சொன்னதுபோல, ஊரும் புதுசு, மக்களும் புதுசு. சொந்தம் என்று சொல்லிக்கவோ,  தெரிந்தவர்கள் என்று சொல்லிக்கவோ யாரும் இல்லை அங்கே எனக்கு. காலை எழுந்ததும் குளித்து அலுவலகம் செல்வேன். காலை உணவை பணியாளரிடம் வாங்கிவர சொல்வேன். உணவை முடித்துவிட்டு வேலையை துவங்கினால், மதிய உணவையும் அலுவலகத்திலேயே முடித்துக்கொள்வேன், இரவு 8 மணிக்கு அறைக்கு செல்வேன். இரவு உணவிற்காக வெளியே வந்து உணவை முடித்துவிட்டு திரும்ப அறைக்கு வந்திடுவேன். பின்பு படிப்பு. இப்படியே படிப்பு, வேலை, ஓய்வு, என்று ஒன்றரை வருடத்தை ஓட்டிவிட்டேன். அப்படி இருந்ததால்தான் இன்று அந்த வங்கி வேலையை விட்டு, ஆயத்தீர்வை ஆய்வாளர் பணியில் சேரப்போகிறேன். இதில் என்னைவிட என் நண்பர்கள் அனைவர்க்கும் அதிக மகிழ்ச்சி. நேற்றிரவுதான் திண்டுக்கலில் இருந்து வீட்டுக்கு வந்தேன். என்னை வழியனுப்ப அத்தனை நண்பர்கள் வந்திருந்தனர். ஒருவனை வழியனுப்ப ஒரு பேருந்து அளவிற்கு நண்பர்கள். ஆனால் என்ன, என்னை பிரிவதை அவர்களும் அவர்களை பிரிவதை என்னாலும் ஏற்க முடியவில்லை. காலத்தில் கட்டாயம் என்றாலும், பிரிவுதான் உறவை பலப்படுத்தும் என்பதை நானும் உணர்ந்து அவர்கட்கும் எடுத்துரைத்து பிரியாவிடை பெற்று வந்தேன். கடந்த ஒரு மாதமாக இரவு முழுவதும் நண்பர்களுடன் செலவழிப்பதிலேயே அதிகம் நகர்த்தினேன். 

     என் மனதை தொட்ட உறவுகளைப்பற்றி நிச்சயம் இங்கே பதிவு செய்தாக வேண்டும்.

* குணா - என் அலுவலகத்தில் துணை ஊழியராக பணியாற்றி வருகிறார். எனக்கு அனைத்து உதவிகளையும் எந்தவித சலிப்பும் இன்றி மனதார செய்தார். அலுவல் வேலையாக இருந்தாலும் சரி, மற்ற எந்த வேலையாக இருந்தாலும் சரி முதலில் என் மனதில் வருவது குணா தான். தன் வேலையில் தெளிவாக இருப்பார். கொஞ்சம் அதிகம் பேசுவார். இதுதான் இவரின் பலமும் பலவீனமும். யாரும் தெரியாத திண்டுக்கலில் எனக்கு முதன்முதலில் எல்லாமுமாக இருந்தவர் இவர். 

*  சுரேந்தர் - என் வங்கியின் வாடிக்கையாளர் ஒருவரின் அலுவலகத்தில் வேலை செய்கிறான். எனக்கு முதலில் கிடைத்த நண்பன். இன்று என் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள தம்பி. இவனும் நானும் சேர்ந்து நிறைய திரைப்படங்கள் பார்த்துள்ளோம். நண்பன், துப்பாக்கி, விஸ்வரூபம், முகமூடி, சாட்டை, ... இப்படி நிறைய. நான் திண்டுக்கல்லில் பார்த்த படங்களில் 90% இவனுடன் பார்த்திருப்பேன். இவனுடன் சேர்ந்த பின்னர்தான் திண்டுக்கல்லை கொஞ்சம் சுற்றி பார்க்க ஆரம்பித்தேன்.

* சிவபிரகாஷ் - என் வங்கியில் ஆயுள் காப்பீட்டு திட்டத்தை பார்க்கும் வேலையில் நான் சேர்ந்த அடுத்த மாதத்தில் புதிதாய் வந்து சேர்ந்தார். சேலத்துகாரர். என் ஊருக்கு கொஞ்சம் பக்கத்தில் என்பதாலும் இருவரும் அதிகம் நெருக்கமாய் பழகினோம். அவர் குடும்ப சூழ்நிலைகள் அனைத்தையும் என்னிடம் சொல்லி கொஞ்சம் ஆறுதல் அடைவார். தினமும் இரவு இவரும் நானும் கையேந்திபவனில் இட்லி சாப்பிட்டதை அவரும் மறக்கவில்லை நானும் மறக்கவில்லை. இப்போது சேலத்தில் இருக்கிறார். ரொம்ப ஆனந்தமாய் இருக்கிறார், அதனால் அதற்கு ஒரு தடை போட, இவருக்கு வீட்டில் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் போய்க்கொண்டிருக்கிறது. திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பிருந்தே அவருடன் இருந்து அனைத்து வேலைகளிலும் கூட இருக்க வேண்டுமென்று சொல்லிவிட்டார். வேலைப்பளுவால் இப்போது நாங்கள் அதிகம் பேசிக்கொள்ள இயலாவிட்டாலும் எங்கள் இருவர் மனதிலும் இருவருக்கும் எப்போதும் தனி இடம் உண்டு.

* மா.சிவக்குமார் - சிவபிரகாஷ் வேலைவிட்டு சேலத்தில் வேறு வேலையில் சேர்ந்ததும் அவர் இடத்திற்கு அவருக்கு பதிலாக வந்தவர் மா.சிவக்குமார். இவர் முதலில் நண்பர் என்று ஆரம்பித்து, அண்ணன் என்று மாறி இன்று பங்காளி என்று இருவரும் ஒருவரையொருவர் அழைத்துக்கொள்ளும் அளவிற்கு மாறிவிட்டோம். குணத்தில் தங்கம், கொஞ்சம் அடம்பிடிப்பார், உருவத்திற்கேற்ப பேச்சும் அதிகம். வாழ்க்கையில் எந்த மகிழ்ச்சியானாலும் துன்பமானாலும் என்னை எப்போதும் துணையாக வைத்திருப்பார். இவருக்கும் திருமண ஏற்பாடுகள் போய்க்கொண்டிருக்கிறது. இவரு எனக்கு எப்போதோ கட்டளையிட்டுவிட்டார். இவரின் திருமணத்திற்கு பெண் பார்ப்பதில் இருந்து அனைத்து விஷயங்களையும் பெற்றோரைவிட என் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டார். இவருடனான நட்பை சொல்ல வார்த்தைகள் இல்லை.

* கே.சிவக்குமார் அண்ணா ரேணுகா அண்ணி - என் வங்கியில் நகைகளை ஆய்வு செய்து நகைக்கடன் வழங்கும் வேலையை செய்துவருகிறார். இவர் ஒரு பொற்கொள்ளர். இவர் வேலை செய்யும் தங்கம் போலவே இவர்கள் இருவரின் மனதும் தங்கம். எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது எனக்கு உணவும் பாசமும் மருந்தாய் கொடுத்து என்னை பார்த்துக்கொண்டனர். எனக்கு கிடைத்த இன்னொரு அண்ணன்.

* தியாகு அண்ணா சாந்தி அண்ணி - என் குடும்பத்தில் ஒருவராகவே இவர்களை பார்க்கிறேன் இவர்களும் என்னை அவர்களில் ஒருவனாகவே பார்க்கின்றனர். ஞாயிறு வந்தால் போதும். இவர்கள் வீட்டில் எப்போதும் எனக்காக அசைவம் செய்து வைத்திடுவார்கள். என்னை அவர்கள் தம்பி போல் பாவித்துக்கொண்டார்கள். நான் திண்டுக்கல்லை விட்டு கிளம்பும்போது என்னை வழியனுப்ப வந்து கண் கலங்கி நான் கிளம்பும் முன்னமே இவர்கள் கிளம்பிவிட்டனர். என்மீது வைத்திருக்கும் இவர்களின் பாசம் எடுத்துரைக்க இயலாத ஒன்று.

* சுதன் அண்ணா சபானா அண்ணி - எனக்கு கிடைத்த இன்னுமொரு பொக்கிஷ உறவு இவர்கள். சுதன் அண்ணா அதிகம் யாருடனும் பழக மாட்டார். ஆனால் என்னிடம் எப்படியோ அதிகம் ஒட்டிக்கொண்டார். இவரும் சரி சபானா அண்ணியும் சரி இருவருக்குள்ளும் அப்படியொரு அன்பு அலை எப்போதும் பாயும்.

* சண்முகம் அண்ணா ஜோனா அண்ணி - இவர்களும் எனக்கு கிடைத்த இன்னொரு உறவு.

* விக்னேஷ் - பாசத்திற்கும் சரி பஞ்சாயத்திற்கும் சரி முதலில் வந்து நிற்பார். குறுகிய காலத்தில் மிகப்பெரிய இடத்தை பிடித்தவர். பேச ஆரம்பித்தால் பேசிட்டே இருப்பார். அதுவே எனக்கு இவரை ஓட்ட வாய்ப்பு கிடைத்து இவரை ஓட்டினால் மட்டுமே இவர் பேச்சு குறையும். ரொம்ப வித்தியாசமான மனிதர். இவருக்கும் கால்கட்டு போட வீட்டில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

* ராஜேஷ் அண்ணா லீலா அண்ணி - இவன் ஊரோ திண்டுக்கல், இவன் உள்ளமோ ஒரு வைரக்கல் என்று இவரைப்பற்றி கவிதை எழுதி கொடுத்தேன் இவருக்கு. எனக்கு கிடைத்த ஈடுஇணையற்ற அண்ணன். இவர் குடும்பத்தில் நானும் ஒருவனாகிவிட்டேன். அண்ணனும் அண்ணியும் Made for each other என்னும் அளவிற்கு அவ்வளவு அழகாய் வாழ்கின்றனர்.

* மணிகண்ட பிரபு - எனக்கு கிடைத்த மற்றுமொரு தோழர்.

ஹரிஹரன், சிம்பு, செல்வா, தண்டபானி, ஓம்ராஜ் அண்ணா, முரளி, பிரசாந்த், பாண்டி, ரஞ்சித்...... இன்னும் இந்த பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது.

இவை ஒருபுறம் இருக்க, இமயம் அறக்கட்டளையின் சார்பாக நாம் நி.பஞ்சம்பட்டி மற்றும் முள்ளிப்பாடி கிராமத்தில் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் நம்மால் இயன்ற சேவைகளை செய்துவந்தோம். இமயத்தின் முதல் முயற்சியாக இவை துவங்கப்பட்டது. அங்கே இருக்கும் அனைத்து குழந்தைகளின் அன்பும் அரவணைப்பும் இன்று நினைத்தாலும் உள்ளம் சிலிர்க்க வைக்கிறது.

இவ்வளதுதான் என்று சொல்லிவிட முடியாது. திண்டுக்கல் உறவுகலை பற்றி சொல்ல நேரம் போதாது. இங்கே வெறும் 1% மட்டுமே பதிந்திருக்கிறேன். மீதம் 99% இடத்தை என் மனதில் பதிந்திருக்கிறேன்.

* தினேஷ்மாயா *

0 Comments: