நவீனகால அறிவியல் நிலவை தொட்டுவிட்டாலும், மனிதநேயத்தை இழந்துதானே தவிக்கிறது இன்றைய உலகம். மனிதனுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்யாமல் நீங்கள் அசுரவேகத்தில் முன்னேறிக்கொண்டிருப்பதால் யாருக்கு என்ன பயன்?
வெறும் பணக்காரர்களை மட்டுமே மையமாகக்கொண்டு உங்கள் கண்டுபிடிப்புகள் இருக்கின்றனவே, என் ஏழை மக்கள் என்ன பாவம் செய்தனர் அவர்களை ஏன் நீங்கள் தள்ளிவைத்து பார்க்கிறீர்கள். பட்டினியால் செத்துக்கொண்டிருப்போர் ஒருபுறம் இருக்க கிடைத்த உணவு சுகாதாரமாக இல்லாமல் நோய்வாய்ப்பட்டு இறப்பவர்களும் இருக்கிறார்கள். நீங்கள் குளிர்சாதன அறையில் குடித்தனம் நடத்துகையில் நடைபாதையே வீடாய் வாழ்கின்றனர் பலர்.
கண்டுபிடிப்புகள் அனைத்தும் பணமாக மாற்றப்படுகிறது. மக்களின் நலனுக்காக கண்டுபிடிக்கிறார்கள் என்று யாரும் நினைத்துவிடவேண்டாம். பணம் இருப்பவர்கள் எங்கள் கண்டுபிடிப்புகளை வாங்கி பயன் பெறட்டும் என்றுதான் நினைக்கின்றனர் அவர்கள்.
உடலில் அனைத்து பகுதிகளும் வளர்ந்தால் அதுதான் வளர்ச்சி. சில பகுதிகள் மட்டும் வளர்ந்தால் அதன்பெயர் வீக்கம். அதுபோல, உலகில் அனைத்து மக்களும் சமமாக வளர்ந்தால் மட்டுமே அதன் பெயர் வளர்ச்சி. இன்று நடந்துக்கொண்டிருப்பது என்னவென்றே சொல்லமுடியாமல் தவிக்கிறேன் நான். இந்த அவலநிலையை மாற்றிக் காட்டுவதுதான் அறிவியலின் உண்மையான சாதனை.
* தினேஷ்மாயா *