சமர்ப்பணம் : என் தோழி பாரதிக்கு
மனசு வலிக்குது என்று என் தோழி சொல்லியிருந்தார். வேலை அதிகமாய் இருப்பதால் அவருடன் தொடர்புகொள்ளவும் மின்னஞ்சல் அனுப்பவும் நேரம் கிடைக்காமையால் என் கருத்துகளை அவருக்காக இங்கே பதிவு செய்கிறேன்.
மனசு வலிக்குது என்று இந்த உலகத்தில் இருக்கும் அனைவரும் ஏதாவது ஒரு நேரத்தில் நிச்சயம் சொல்லியிருப்பார்கள். சமீபத்தில் புத்தரின் அறிவுரைகள் அடங்கிய புத்தகம் ஒன்றை படித்தேன். எதேச்சையாக அவரின் வாழ்க்கை வரலாறு சம்பந்தபட்ட ஒரு குறும்படத்தையும் பார்க்க நேர்ந்தது. அது கொஞ்சம் என்னை புரட்டிப்போட்டது. வாழ்க்கை மற்றும் உலகம் பற்றிய எனது பார்வையை இன்னும் விசாலமாக்கியது. அவர் சொன்னது எவ்வளவு உண்மை என்று நன்கு உணர்ந்துக்கொண்டேன். ஆசைகள்தான் மனிதனின் அத்தனை துன்பங்களுக்கும் காரணம் என்று.
ஆம். ஆசைகள் என்பது வேறொன்றுமில்லை, எதிர்பார்ப்புகள்தான். எதிர்பார்ப்பு என்று ஒன்று இருந்தால் ஏமாற்றம் என்று ஒன்று நிச்சயம் இருக்கும். எதையும் எதிர்பார்க்காமல் இருப்பவர்க்கு வாழ்வில் நடக்கும் எதுவும் ஏமாற்றமாய் இருக்காது அனைத்தும் ஆச்சர்யமூட்டும் விஷயங்களாகவே இருக்கும். சில நேரங்களில் பகவத்கீதையும் நினைவுக்கு வருகிறது. எதை நாம் இங்கே கொண்டு வந்தோம் அதை இழப்பதற்கு. இந்த உலகமே நிலையற்றதுதான். அதில் பந்தம், பாசம், காதல், நட்பு, அன்பு, துரோகம், எதிரி இப்படி எதுவும் நிலையில்லாததுதான். அப்படியிருக்கையில் எதற்காக நாம் வருந்தவேண்டும். வருத்தம் கொண்டிருப்பதால் மட்டும் இங்கு எதையும் மாற்றிவிட முடியாது. எதையும் நீங்கள் மாற்றவும் வேண்டாம். நடப்பதெல்லாம் நன்மைக்கே நடந்துக்கொண்டிருக்கிறது. உங்களை படைத்தவனுக்கு தெரியும் எது உங்களுக்கு தேவை எது உங்களுக்கு தேவையில்லை என்பது. நீங்கள் நினைத்திருக்கலாம் ஒரு விஷயம் நமக்கு இந்த வாழ்நாள் முழுதும் தேவை என்று, ஆனால் இறைவன் அதை உங்களிடமிருந்து பறித்துக்கொள்வான். அதற்காக இறைவன் மீது கோபம் கொள்ளவேண்டாம். அது உங்கள் வாழ்க்கை வரை உங்களுடன் வருவதற்கு தகுதியில்லை என்றோ, அல்லது அது உங்கள் வாழ்க்கை முழுதும் தேவையில்லை என்றோ அல்லது அதைவிட சிறந்ததை உங்களுக்கு தருவதற்காகவோ அவன் அதை பறித்திருப்பான்.
வாழ்க்கையை எந்தவித எதிர்பார்ப்புமின்றி கையாளவேண்டும். எதிர்பார்க்காத விஷயங்கள் நடந்தாலும் கலங்காமல் இருக்க வேண்டும். இந்த பக்குவப்பட்ட நிலையை அடைய பல வருட அனுபவம் இருக்க வேண்டும் என்றில்லை. எதாவது பிரச்சனை என்றால் உடனே முடிவெடுக்காமல் ஒரு பத்து நிமிஷம் அமைதியாக இருந்துவிட்டு கொஞ்சம் யோசித்து முடிவெடுங்கள். எடுக்கும் முடிவு சிறந்ததாக இருக்கும். அதுபோலதான் அனைத்து பிரச்சனையும். எதற்காகவும் உடனே கலங்காதீர்கள். எல்லாம் ஒரு காரணத்துக்காகவே உங்கள் வாழ்வில் நடக்கிறது என்பதை முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். ஒரு காதல் தோல்விதான் என்னை இப்படி மாற்றியிருக்கிறது என்று மட்டும் நான் சொல்லிட மாட்டேன். காதல் என்பதும் காதல் தோல்வி என்பதும் என் வாழ்வில் ஒரு பகுதிதான். அதையும் தாண்டி பல உலக விஷயங்கள்தான் என்னை பக்குவப்படுத்தி இந்த நிலைக்கு கொண்டுவந்திருக்கிறது. எனக்கு இன்றுவரை ஆசான் என்று சொல்லிக்கொள்ள எவரும் இல்லை. உங்கள் வாழ்க்கையை இன்னொருத்தர் உங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். பிறரின் வாழ்க்கையை பார்த்து அதிலிருக்கும் பாடங்களை படித்து நம் முன் அனுபவத்தையும் கொஞ்சம் மனதில் வைத்து சிந்தித்து செயல் பட்டால் நம் வாழ்க்கைக்கு நாமே ஆசான்.
“உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை, அச்சமென்பதில்லையே” என்றான் நம் பாரதி. அதையேதான் என் தோழி பாரதிக்கும் நான் சொல்ல விரும்புகிறேன். எது நடந்தாலும் கலங்காதிருக்க வேண்டும். உலக்த்தில் எல்லாம் மாற்றம் என்னும் மந்திரத்திற்கு கட்டுபட்டவையே. இந்த நிலையும் மாறும் என்று மனதில் தைரியத்தை மட்டும் தொலையாமல் பத்திரமாய் வைத்திருங்கள். மேலும் இதுபோன்ற நிலையில் உங்கள் மனம் எதற்கும் கலங்ககூடாது. அது உங்களை மட்டும் பாதித்தால் பரவாயில்லை, இன்னொரு உயிரையும் பாதிக்கும் என்பதை மறவாதீர்கள். உங்களுக்கு என்னால் முடிந்த ஒரு யோசனை சொல்கிறேன். கல்கி எழுதிய, இதுவரை நீங்கள் படித்திராத சரித்திர நாவல் ஒன்றை படியுங்கள். பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, கிவகாமியின் சபதம், இல்லையென்றால் வைரமுத்துவின் தண்ணீர்தேசம், கருவாச்சி காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம், மூன்றாம் உலகப்போர், சுஜாதா நாவல்கள், சொல்ல இன்னும் நிறைய இருக்கு. உங்களுக்கு எது பிடிக்குமோ அதை படியுங்கள். குறிப்பாக நாவலை படியுங்கள். சிறுகதை, கவிதைகள் இப்போதைக்கு வேண்டாம். மனதை போட்டு குழப்பாமல், மனதை எப்போதும் லேசாக வைத்திருக்க வேண்டும். இன்னும் வாழ்க்கையில் பார்க்க எவ்வளவோ விஷயங்கள் இருக்கு. இதெல்லாம் என்ன சொல்லுங்க. உயிர் நட்பு என்று யாரும் இல்லை என்று வருந்த வேண்டாம். நான் மேலே சொன்னதுபோல அந்த நட்பு உங்கள் உயிர் நட்பாக இருப்பதை இறைவன் விரும்பவில்லையோ என்னவோ. விட்டுவிடுங்கள். மனதை அமைதியாக வைத்திருங்கள். எதற்கும் கலங்காமல் எப்போதும் மற்றவரை மகிழ்வித்து மகிழ்ச்சியாய் இருங்கள்.
- அன்புடன்
****தினேஷ்மாயா****
1 Comments:
படிக்கும் போது கண்ணீரோடு கலக்கமும் கரைந்துவிட்டது.
நன்றியுடன்
பாரதி
Post a Comment