இன்று சித்திரம் பேசுதடி திரைப்படத்தை முதல்முறையாக முழுதும் பார்த்தேன். வழக்கமாக எனக்கு மிஷ்கின் படமென்றால் கொஞ்சம் இஷ்டம். இந்த படத்தைத்தவிர அவரின் மற்ற படங்கள் அனைத்தையும் பார்த்திருக்கேன்.
இந்த படம் ரொம்ப பிடிச்சிருக்கு. மிஷ்கினின் அனைத்து படங்களிலும் கதாபாத்திரங்கள் எப்போதும் வேகமாகவும் கொஞ்சம் அதிக சத்தத்துடனும் வசனம் பேசுவார்கள். அது முதல் படம் தொடங்கி இப்போ வரைக்கும் நடந்து வருகிறது. “இடம் பொருள் பார்த்து” பாடல் அதிகம் கவர்ந்தது. வரிகளும் சரி, காட்சியமைப்பும் சரி. Reverse Shots அந்த பாடலில் நிறைய இருந்தது. அதுவும் ரசிக்கும்படியாக இருந்தது.
கதையும் நன்றாக இருந்தது. வழக்கமாக இடைவேளை, Interval, Intermission என்று போடாமல் “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்று பாரதியின் வரிகளை போட்டது நன்றாக இருந்தது. ஒரு சோகமான முடிவை தராமல் சுகமான முடிவை தந்திருக்கிறார் இயக்குனர். கானா உலகநாதனின் பாடலும் சரி, மற்ற பாடல்களும் சரி, பிண்ணனி இசையும் சரி, சுந்தர்.சி.பாபு அருமையாக விளையாடியிருக்கிறார். அறிமுக இசையமைப்பாளர் போலவே தெரியவில்லை.
படம் வெளிவந்து சில ஆண்டுகள் ஆனபின்பு விமர்சனம் எழுதுகிறேன். இருந்தால் என்ன, நான் இப்போதுதான் இந்த படத்தை பார்த்தேன்.
படத்தில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் உரக்கப் பேசுவதும், வேகமாய் பேசுவதும் தான் சற்று நெருடலாய் தெரிகிறது. மற்ற விஷயங்கள் எதார்த்தமாய் இருக்கும்போது, வசன உச்சரிப்பும் எதார்த்தமாய் இருக்கலாமே.
எல்லோரும் எப்போதும் இப்படி வேகமகவும் உரக்கமாகவும் பேசுவதில்லையே நிஜத்தில். ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு தனி ரசனை உண்டு. இது இவர் ரசனை போல.
படத்தில், காதலை மென்மையாக காட்டியிருக்கிறார். அடிதடி படம் என்றும் சொல்லிவிட முடியாது. கதாநாயகன் அடியாள் என்றாலும் அதிகம் சண்டை காட்சிகள் இல்லை. ஓரிரு சண்டை காட்சிகள் கதைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. படத்தில் வில்லன் என்று எவரும் இல்லை என்பது ஆறுதலான விஷயம். அப்படி இருந்திருந்தால், வழக்கமான கதையாக இருந்திருக்கும்.
எல்லாவற்றையும்விட, படம் முடிந்து அனைவரும் The End என்று தான் போடுவார்கள். இந்த திரைப்படத்தில் The Beginning..... என்று போட்டார்கள். அதுவே என்னை அதிகம் கவர்ந்தது. அதனால்தான் முதலில் இந்த படத்தை பற்றி கொஞ்சம் எழுதிவிடுவோம் என்று இங்கே வந்தேன். பொதுவாக ஒரு படம் பார்த்து முடித்துவிட்டால் அதை என் கணிணியில் இருந்து நீக்கிவிடுவேன். ஒருசில படங்களை மட்டும் நீக்காமல் தனியாக வைத்திருப்பேன். இப்போது அந்த இடத்தில் இந்த படமும் இடம்பிடித்திருக்கிறது, காரணம்...
எனக்கு இந்த படம் ரொம்பவும் பிடித்திருக்கிறது...
- தினேஷ்மாயா -
0 Comments:
Post a Comment