நாங்கள் என்ன பாவம் செய்தோம்?

Tuesday, August 24, 2010





பீகார் மாநிலத்தில் உள்ளது கல்யாண்பட்டி என்ற கிராமம். இங்கு, ஒரு அரசுப் பள்ளி உள்ளது. ஆரம்பத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் காலனியில் இந்தப் பள்ளி இருந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு உயர் ஜாதி மக்கள் வசிக்கும் பகுதிக்கு பள்ளி இடம் மாறியது.


அப்போதிருந்து தாழ்த்தப்பட்ட குழந்தைகள், பள்ளி வளாகத்துக்கு உள்ளேயே அனுமதிக்கப் படவில்லை. பள்ளிப் பதிவேட்டில் அந்தக் குழந்தைகளின் பெயர் உள்ளது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட குழந்தைகளை பள்ளிக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர். 


இன்றாவது பள்ளிக்குள் அனுமதிப்பார்கள்; பாடம் படிக்கலாம் என ஆசையோடு செல்வோம். ஆனால், அங்கு அடி, உதைதான் கிடைக்கும். பள்ளிக்குள் நுழைய விடாமல் துரத்தி அடித்து விடுவார்கள். நாங்கள் என்ன பாவம் செய்தோம்?... இது, பிரபாஷ் குமார் என்ற சிறுவனின் அழுகுரல். 


இருப்பது ஒரே பள்ளி. எங்கள் வாழ்க்கைதான் சீரழிந்துவிட்டது. எங்கள் குழந்தைகளாவது படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால், ஜாதி வெறி இங்கு தலை விரித்து ஆடுகிறது. இந்த பள்ளியில் எங்கள் குழந்தைகள் படிப்பது சாத்தியமில்லை. 


எங்கள் குழந்தைகளை ஆசிரியர்களே அடித்து, உதைத்து, அவமானப்படுத்தி, கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகின்றனர். எங்கு போய் சொல் வது இந்தக் கொடுமையை?... குமுறுகிறார் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த நந்த்லால். 


பள்ளியை மீண்டும் தங்கள் காலனிக்கு மாற்றிவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடும் என தாழ்த்தப்பட்ட மக்கள் கருதுகின்றனர். அப்படி செய்தால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்று மிரட்டுகின்றனர் உயர் ஜாதியினர்.கல்யாண்பட்டி கிராமம் போல பீகாரில் பல கிராமங்களில் ஜாதி வெறி தலை விரித்து ஆடுகிறது. ஆனால், பீகார் அரசோ, கண்டும் காணாமல் இருக்கிறது.

நன்றி: தினகரன்


அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: