ஒரு நாளில் குறைந்தது அரைமணி நேரமாவது ஒரு அமைதியான இடத்தில் சென்று அமருங்கள். அது வெட்டவெளியாக இருந்தால் சிறப்பு. மொட்டை மாடிக்கு வாருங்கள். கண்களை நன்கு திறந்து பாருங்கள். இதுவரை நீங்கள் சரிவர கவனிக்காத அற்புதமான இயற்கையை கவனியுங்கள். தினமும்தான் காற்று உங்களை வந்து வருடிவிட்டு செல்லும். இப்போது அந்த காற்று எந்த திசையிலிருந்து உங்களை வந்து வருடுகிறது என்று உணருங்கள். அதன் குளிர்ச்சியை உணருங்கள். மேலே பறக்கும் பறவையை பாருங்கள். அது வானில் வெறுமனே வட்டம் மட்டும் அடிக்கவில்லை. அங்கும் இங்கும் பறக்கும். அதன் அழகை அதன் போக்கிலேயே இரசியுங்கள். அதோ அந்த மேகத்தை பாருங்கள். சில சமயம் மேகங்களில் பல உருவங்கள் தென்படும். அதை உற்று நோக்கி அந்த உருவங்களை கண்டுபிடித்து இரசியுங்கள். நிலவும் சூரியனும் ஒரு சேர வானில் காட்சி தருவார்கள். மேகங்களை இரசிக்கும் இடையில் இவர்களையும் இரசியுங்கள். தொலைவில் ஒலிக்கும் சப்தத்தை கண்கள் மூடி கூர்ந்து கவனியுங்கள். அருகில் இருக்கும் மரக்கிளை அசைகிறதே அதை பொறுமையாக பாருங்கள். அது காற்றுக்கு அசையும் அழகை இரசியுங்கள். அந்த இலைகள் மட்டும் அசையாமல் கிளைகளும் அசைவதை கவனியுங்கள். எறும்பு அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கும். அதை இரசியுங்கள். மல்லாக்க படுத்து வானத்தை இரசியுங்கள். நம் ஞாலம் எத்துனை பெரியது என்பதை நீங்கள் கண்டு வியப்பீர்கள். தொலைத்தொடர்பு அதிகம் வளர்ந்துவிட்ட காலமிது. ஆனால், நாம் நம்மை ஒருபோதும் இயற்கையோடு தொடர்புபடுத்திக்கொள்ள விரும்புவதே இல்லை. இயற்கைதான் எல்லாம். இயற்கையோடு இயைந்திருக்க பழகுவோம். மனமும் சரி நம் வாழ்வும் சரி நிச்சயம் செழிக்கும்.
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment