பல நாட்கள் கழித்து
என் தோழி
ஒருவரிடம் பேசினேன்.
கருணாநிதி அவர்களின் நினைவு நாளான அன்று அவர் என்னை தொலைபேசியில் அழைத்திருந்தார். அன்றுதான் என்னுடைய வாட்ஸ் அப்பில் கலைஞர் கருணாநிதி
அவர்களைப் பற்றி ஒரு தகவல் பதிவிட்டிருந்தேன். அந்த தகவலை இங்கே இந்த வலைப்பக்கத்திலும்
கடவுள் ஏற்பு என்கிற தலைப்புல் பதிவிட்டிருக்கிறேன்.
அவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் ஒரு கிராமத்தில் இருப்பவர். அவரின் பள்ளி பருவத்தில் கருணாநிதி அவர்கள் ஆட்சியில் இருக்கும் பொழுது இலவசமாக சீருடை, புத்தகங்கள் இவையெல்லாம் வழங்கப்பட்டது. ஆனால் அந்த இலவச பொருட்கள் அனைத்தும் தாழ்த்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இவர்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு குடும்பம் என்று அன்றுதான் அந்த தோழி என்னிடம் சொன்னார். அதனால்,
அவர்களுக்கு அரசின் எந்தவொரு சலுகையும் கிடைக்கவில்லை, அதனால் பள்ளிப் பருவத்தில் பல
இன்னல்களை சந்தித்ததாக சொன்னார்.
மேலும் சில விஷயங்களையும்
பகிர்ந்தார். அவர்களுடைய
தாத்தா (அப்பாவின்
அப்பா) ஊரில் மிகப்பெரிய நிலக்கிழார்.நிறைய ஏக்கரில் நிலங்கள் உள்ளது. அவர்களின் அப்பா அவரின் தாத்தாவுடன் சண்டை போட்டுக்கொண்டு பிரிந்து வந்ததால் அந்த தாத்தா இவர்களுக்கு எந்த ஒரு சொத்தையும் தரவில்லை. அதனால் இவர்கள் குடும்பம் பொருளாதாரரீதியாக
கொஞ்சம் கஷ்டப்பட்டது.
இவர்கள் குடும்பத்தில் மூன்று பெண்கள். அவருடைய
அக்கா பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுது சீருடைகள் வாங்க, புத்தகங்கள் வாங்க பணம் இருக்காது. ஆனால் அதே பள்ளிக்கூடத்தில் படிக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அரசாங்கம் இலவசமாக சீருடை புத்தகங்கள் அளித்தது. அவர் சொல்வதற்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர், இப்போது இல்லை.
ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு அனைத்து சமூக மக்களுக்கும் இலவசமாக புத்தகம் வழங்கினார். எங்கள் ஊரிலேயே ஜெயலலிதா அவர்கள் அனைவருக்கும் இலவசமாக புத்தகம் வழங்கியதால்தான் நிறைய பெண்கள் படிக்க முடிந்தது. எங்கள் குடும்பத்தில் அனைத்து பெண்களும் பள்ளிக் கல்வியை முடித்து கல்லூரி கல்வி படிக்கும் வாய்ப்பு கூட ஜெயலலிதா அவர்களால் தான் ஏற்பட்டது. அதனால் எனக்கு ஜெயலலிதா அவர்களைப் பிடிக்கும். கருணாநிதி அவர்களை இந்த காரணத்தினாலேயே பிடிக்காது என்றார்.
அதற்கு நான் சொன்னேன் உங்களுக்கு பல விஷயங்கள் தெரியவில்லை. தெரியாத விஷயங்களை வைத்தும், உங்களுக்கு தெரிந்த விஷயங்களை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு முடிவுக்கு வரக்கூடாது என்றேன். என்ன விஷயம் என்பதைத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லத் துவங்கினேன்.
நீங்கள் சொல்கிறீர்கள், உங்கள் தாத்தா நிறைய நிலம் வைத்திருப்பவர் பல சொத்துக்களுக்கு அதிபதி ஆனால் உங்கள் அப்பா அவருடன் சண்டை போட்டுவிட்டு வந்ததால் உங்களுக்கு எந்த சொத்தும் இல்லை. அதனால் நீங்கள் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்ட குடும்பத்தை சார்ந்தவர்கள்.
ஆனால் கருணாநிதி அவர்கள் ஏன் மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் மாணவர்களுக்கு இலவசமாக அனைத்தையும் வழங்கினார் என்றால், உங்களுக்கு உங்கள் தாத்தாவிடமிருந்த குடும்பப் பிரச்சினையால் உங்களுக்கு அந்த நிலம், சொத்து வந்து சேரவில்லையே தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை.
ஆனால் மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு நிலம் என்பதே கிடையாது. அவர்களுக்கு சொந்தமாக நிலம் எதுவும் கிடையாது, அவர்கள் நிலத்தில் கூலிக்காக வேலை செய்த கூலி ஆட்கள் தான். தினக்கூலியாக வேலை செய்தவர்களை வேலையை விட்டு போ என்றால் அவர்களுக்கு வேலை கிடையாது கூலி கிடையாது எதுவும் கிடையாது. அவர்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும்.
நிலம் வைத்துக் கொண்டு குடும்ப பிரச்சனையால் பொருளாதார ரீதியாக பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுவதா? அல்லது நிலமே இல்லை, எந்த ஒரு சொத்தும் இல்லை அதனால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட சமூக மக்களுக்கு உதவுவதா என்றால் ஒரு அரசாங்கம் நிச்சயமாக இந்த மக்களுக்கு தான் அதிகமாக உதவ முன்வரும். அதைத்தான் முதல்வர் கருணாநிதி அவர்கள் செய்தார். ஆனால் பின்னாளில் அனைத்து சமூக மக்களுக்கும் அரசு பள்ளிக்கூடத்தில் இலவசமாக சீருடை புத்தகம் எல்லாம் வழங்க முடிவெடுத்தார்கள்.
அவருடைய எண்ணம் உயர் சமூக மாணவர்களை
ஒதுக்கிவிட்டு மற்ற
சமூக மாணவர்களை மட்டுமே வளர்ப்பது அல்ல.
உயர்ந்த ஜாதி என்று சொல்லிக் கொண்டு இருக்கும் மக்களுக்கு இணையாக அவர்களாலேயே கீழ்ஜாதி என்று ஒதுக்கப்படும் மக்களுக்கு அனைத்து சலுகைகளும் சென்று சேர்ந்து அவர்களும் இவர்களுக்கு இணையாக வளர வேண்டும் என்ற ஒரே தொலைநோக்கு மற்றூம் சமூக நோக்கு பார்வையால் செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் அது என்றேன்.
என்றைக்குமே கருணாநிதி என்பவர் சமூக நீதி காத்த கருணாநிதி.
என் தோழியும் நான் சொன்ன கருத்தை
பிறகு ஆமோதித்தார்.
என் கருத்திற்கு
உங்கள் கருத்து என்ன ?
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment