நாட்டுக்கோழி

Wednesday, August 12, 2020

 


நாட்டுக்கோழி என்பதை கேட்ட மாத்திரத்தில் பெரும்பாலும் அனைவருக்கும் நினைவில் வருவது, ஞாயிற்றுகிழமைகளில் நம் வீட்டில் வாங்கி சமைக்கும் அந்த சுவையான, ருசியான நாட்டுக்கோழி குழம்பு, வறுவல் இதுதானே. ஆனால், இந்த பதிவு அதைப்பற்றியது அல்ல.

 

என் சிறுவயதில் பள்ளி முழு ஆண்டு தேர்வின் விடுமுறையில் எங்கள் கிராமத்திற்கு செல்வோம். அங்கே ஆயாவும் தாத்தாவும் கோழி வளர்ப்பார்கள். ஆடும் வளர்த்திருக்கிறார்கள். பெரும்பாலும் கோழியை முனீசுவரனுக்கு நேர்ந்து விடுவார்கள். அப்படியென்றால், ஒரு கோழியை வாங்கி, மனதில் எதாவது வேண்டிக்கொண்டு அந்த வேண்டுதல் நிறைவேறியதும் முனீசுவரன் கோயிலுக்கு சென்று அதை படையலிடுவார்கள். இது அவர்கள் காலம் காலமாக பின்பற்றிவரும் நம்பிக்கை.

ஆனால் இந்த பதிவு அதைப்பற்றியதும் அல்ல. அப்படியானால் வேறு எதைப்பற்றியது என்றுதானே கேட்கிறீர்கள். பொறுமை பொறுமை. இதோ கதைக்கு வந்துவிட்டேன்.

இந்த பதிவு தவம் பற்றியது.

என்னடா இது. நாட்டுக்கோழி என்று பெயர் வைத்துவிட்டு தவம் பற்றி எழுதுகிறானே என்றா பார்க்கிறீர்கள். இந்த பதிவை முழுவதும் படித்து முடியுங்கள். உங்களுக்கே புரியும்.

என்னோடு வாருங்கள், எங்கள் ஊருக்கு அழைத்து செல்கிறேன்.

மெயின் ரோட்டில் இருந்து இறங்கி ஒரு கிலோமீட்டர் நடக்கனும். இரயில்வே பாலம், ஆத்துப்பாலம், சோழர் கால நடுகல், சுடுகாடு, தென்னந்தோப்பு, ஊர்க்கிணறு, பஞ்சாயத்து ஆபீஸ், நூலகம், அப்புறம் என் தாத்தா சிறுவயதில் ஊஞ்சல் கட்டி ஆடிய அந்த முதிர்ந்த ஆனாலும் பட்டுப்போகாத அந்த புளியமரம் இவற்றையெல்லாம் கடந்து வந்தால், என் ஆயாவும் தாத்தாவும் வசிக்கும் அந்த மாடிவீட்டிற்கு வந்து சேரலாம். வீட்டின் எதிரில் மிகப்பெரிய தென்னந்தோப்பு, நடுவே எப்போதும் தண்ணீர் இருக்கும் மிகப்பெரிய கிணறு, தோப்பின் இடையிடையே வாழை மரங்கள்.

வீட்டை சுற்றி மரங்களாய் இருக்கும். ஆறு தென்னை, இரண்டு பப்பாளி, ஒரு கொய்யா, ஒரு எலுமிச்சை மரம், ஒரு மாமரம், ஊதா மற்றும் மஞ்சள் நிற போகன்வில்லா (அப்போது அதை காகிதப்பூ என்போம்), ஒரு மாதுளை மரம், ஒரு நெல்லிக்காய் மரம். இவற்றின் நடுவில் ஒரு கொட்டாய் போட்ட ஒரு சிறிய அறை. அதில்தான் கோழியை வளர்ப்பார்கள். ஒரு சேவல், ஒரு கோழி அப்புறம் ஒரு எட்டு பத்து குஞ்சுகளுக்கு அந்த கொட்டாய் தான் எல்லாமே. சிறியது முதல் மிகப்பெரியது வரை நான்கைந்து கூடைகள் அங்கே இருக்கும். கோழியை இரவில் அந்த கூடைகளுக்குள்தான் அடைத்து வைப்பார்கள்.

நான் ஆறாவது படிக்கும்போது முழுஆண்டு தேர்வு முடிந்து விடுமுறைக்கு அங்கே சென்றிருந்தேன். அப்போது அந்த கோழி முட்டை ஈன்றிருந்தது. குஞ்சு பொறிக்கும் சமயம் போல. ஏற்கெனவே இருந்த கொஞ்சம் வளர்ந்த குஞ்சுகளையும் சேவலையும் வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, இந்த தாய் கோழியை மட்டும் அந்த கொட்டாயில் வைத்திருந்தார்கள். நிறைய வைக்கோலை போட்டி, அதில் அந்த முட்டைகளை வைத்து இந்த கோழி அடைகாக்க தோதாய் எல்லாம் தயார் செய்து கொடுத்திருந்தார்கள்.

அந்த இருபது நாளும் இந்த தாய் கோழிக்கு ஒரேயொரு வேலைதான். அது அடை காப்பது மட்டுமே. தன் எண்ணம் செயல் அனைத்தையும் தன் குஞ்சுகளுக்காக மடைமாற்றி அவற்றை இந்த பூமிக்கு கொண்டு வர முயல்வதே அதன் தலையாய கடமை.

அந்த முட்டைகளின் மீது அந்த கோழி அமர்ந்து அடைகாப்பதை பார்க்கையில் ஒரு வாழ்நாள் தவம் போல தெரியும். ஆறரிவு மனிதனுக்கும்கூட இல்லாத மன வலிமை, இந்த நாட்டுக்கோழிக்கு இருப்பதை காண்கையில், தவ வலிமையில் மனிதர்களைவிட சிறந்த உயிரினங்கள் பல உள என்பதை உணர்கிறேன்..

* தினேஷ்மாயா *

0 Comments: