வாங்கைய்யா வாங்க... ஏமாற வாங்க !!

Monday, August 10, 2020

 

      சமீபத்தில் மேலே நீங்கள் காணும் ஒரு குறுஞ்செய்தியை என் நண்பர் ஒருவர் ஒரு குழுவில் பகிர்ந்தார். இதை படித்த உடனேயே அந்த நண்பரிடம் சொல்லி அந்த பதிவை அழிக்க சொன்னேன். மேலும், அதை வேறு எவருக்கும் பகிராமல் இருக்கும்படி கேட்டுக்கொண்டேன்.

இந்த குறுஞ்செய்தியில் சொல்லப்பட்டிருக்கும் தகவல் என்னவென்றால், மத்திய அரசு ஒருவழியாக இந்திய குடிமக்கள் அனைவருக்கும் 2000 ரூபாய் இலவசமாக தர ஒப்புதல் அளித்திருக்கிறது. 

அதை நீங்களும் பெற கீழே இருக்கும் இணைப்பில் செல்லுங்கள். நான் இப்போதுதான் என் பணத்தைப் பெற்றேன். இது குறைந்தபட்ச மக்களுக்கு மட்டுமே எனவே முந்துங்கள் - என்பது போன்ற ஒரு விளம்பரம் இது.

முதலில் எனக்கு என்ன கோபம் வந்ததென்றால், படித்த அவரே இப்படிப்பட்ட ஒரு பொய்யான தகவலை பரப்பலாமா ?

அந்த குழுவில் இருந்து வந்து, அவரிடம் தனியே குறுஞ்செய்தி அனுப்பி பேசினேன். ஏன் இப்படி போலியான தகவல்களை பரப்புகிறீர்கள், அது தவறான தகவல் என்று உங்களுக்கு தெரியாதா?

எல்லாவற்றையும் விடுங்கள். கொஞ்சம் அறிவை பயன்படுத்தி இருக்கலாமே !
மத்திய அரசு அனைத்து குடிமக்களுக்கும் எதையாவது இலவசமாக தர நினைத்தால் அது நியாய விலை கடைகளின் வாயிலாகவோ அல்லது, நேரடியாக மக்களின் வங்கி கணக்கில் வரவு வைப்பதன் வாயிலாகவோ அல்லது ஒரு முகாம் நடத்தியோ அல்லது முன் களப்பணியாளர்கள் வாயிலாகவோ மட்டுமே செயல்படுத்தும். 

அப்படியில்லாமல், கீழே இருக்கும் இணைப்பில் செல்லுங்கள் உங்கள் பணம் உங்கள் வங்கியில் வரவு வைக்கப்படும் என்பது எவ்வளவு பெரிய மோசடி என்பதை ஏன் உணரவில்லை ?

இதை நம்பி, எவராவது அந்த இணைப்பில் சென்றால், அவரின் தொலைப்பேசியில் இருக்கும் தகவல்கள் களவாடப்படும். அந்த தகவல்களை வைத்து உங்கள் வங்கி கணக்கின் எண், உங்கள் ஆதார் எண்,  உங்கள் வங்கி ஏ,டி,எம்மின் கடவு எண் இப்படி எதைவேண்டுமானாலும் திருட முடியும். 

சதுரங்கவேட்டை திரைப்படத்தில் சொல்வதுபோல, ஒருவனை ஏமாற்ற வேண்டுமென்றால் முதலில் அவன் ஆசையை தூண்ட வேண்டும். 

இந்திய மக்களின் பெரும்பான்மையினர் இலவசம் என்றால் அதற்காக எதையும் செய்யும் மனநிலை கொண்ட மாந்தர்களாகவே இருக்கின்றனர்.

ஏழை பணக்காரர் வித்தியாசமின்றி இலவசம் என்னும் வார்த்தை ஒரு காந்தம் போல அவர்களை ஈர்க்கிறது. 

இந்த இலவசம் என்னும் மோகத்தால் நம் மக்கள் பெற்றதைவிட இழந்ததுதான் அதிகம். அரசியலானாலும் சரி, அரிசி கடையானாலும் சரி. இலவசமென்றால் உடனே நாம் மயங்கிவிடுவோம். 

உங்களுக்கு ஒரு விழிப்புணர்வு பதிவு எழுத, மேலே சொன்ன அந்த இணைப்பிற்கு சென்று என்னதான் செய்கிறார்கள் என்று பார்த்தேன். மூன்று கேள்விகள் கேட்கப்பட்டது. 


இதுதான் முதல் கேள்வி. நீங்கள் உண்மையான ஒரு இந்திய குடிமகனா?

நான் - இல்லை என்ற பதிலை தேர்வு செய்தேன். ஆனால், அடுத்த கேள்விக்கு என்னை இட்டு சென்றது. அப்படியானால், ஆம் என்றாலோ இல்லை என்றாலோ நீங்கள் எந்த பதிலை தேர்வு செய்தாலும் அடுத்த பக்கத்திற்கு உங்களை கொண்டு செல்லும். ஏனென்றால், இவர்களின் எண்ணம் உங்களுக்கு பணத்தை வழங்க வேண்டும் என்பதில்லை. உங்கள் பணத்தை திருட வேண்டும் என்பதே. 




இரண்டாம் கேள்வி, உங்களால் இந்த ஊரடங்கு காலத்தில் எவ்வளவு பணம் இருந்தால் சமாளிக்க முடியும்? 
அதற்கு மூன்று விடை இருந்தது. ரூ.2000, ரூ.5000 (இருப்பு இல்லை), ரூ.10000 (இருப்பு இல்லை).
நான் வேண்டுமென்றே, ரூ.10000( இருப்பு இல்லை) என்கிற விடையை தேர்வு செய்தேன். என்ன ஆச்சரியம். என்னை அடுத்த கேள்விக்கு கொண்டு சென்றது. அதாவது, இருப்பு இல்லாவிட்டாலும், 10000 ரூபாய் எனக்கு வேண்டும் என்று தேர்வு செய்திருக்கிறேன். என்னை அடுத்த பக்கத்திற்கு கொண்டு செல்கிறது. ஏன் தெரியுமா ? அவர்களின் நோக்கமே, உங்கள் தகவல்களை திருடுவதுதான்.



இதுதான் மூன்றாவது கேள்வி. இந்த இலவச 2000 ரூபாயை எதற்கு பயன்படுத்துவீர்கள்? 
இணையம், உணவு, உடுப்பு.

நான் வேண்டுமென்றே இணையத்திற்கு செலவு செய்வேன் என்பதை தேர்வு செய்தேன். அப்போதும் அசராமல் என்னை அடுத்த பக்கத்திற்கு கொண்டு சென்றது. 

உண்மையாகவே கஷ்டப்படும் மக்களுக்கு உதவுவது அரசாங்கத்தின் நோக்கமென்றால், இந்த பணத்தை தன் உணவுக்காகவோ அல்லது உடுப்புக்காகவோ செலவு செய்பவனுக்கு தராமல், இணையத்திற்கு செலவு செய்வேன் என்று விடையளிக்கும் ஒருவருக்கு தருவதை என்னவென்று சொல்ல ?!

சரி. மூன்று கேள்விகளுக்கும் விடையளித்துவிட்டேன். அடுத்து நம் கணக்கில் பணம் வந்துவிடும் என்று நினைக்கிறீர்களா.

ஹா ஹா..


அந்த மூன்று கேள்விகளுக்கும் சரியாகவோ அல்லது தவறாகவோ விடையளித்தால், உங்களை இந்த பக்கத்திற்கு கொண்டு வந்து நிறுத்தும். 

இது என்னவென்றால், நீங்கள் இந்த செய்தியை வாட்சப்பில் இருக்கும் 7 குழுக்களுக்கு பகிர வேண்டும். அப்படி செய்தால், உங்கள் வங்கி கணக்கில் உடனடியாக 2000 ரூபாய் செலுத்தப்படும் என்கிறார்கள்.

எப்படி எப்படி ?
மத்திய அரசு இந்திய குடிமக்களுக்கு இலவசமாக பணம் தருகிறது என்று சொல்லி உங்களை உள்ளே அழைத்து வந்து, ஒரு ஒப்புக்கு ஏதேதோ கேள்விகளை கேட்டுவிட்டு, கடைசியில் இந்த தகவலை 7 குழுக்களுக்கு பகிரவும் என்கிறார்கள். அதெல்லாம்கூட இருக்கட்டும். உங்கள் வங்கி கணக்கு எண் என்ன என்பதை ஒரு இடத்திலாவது கேட்டார்களா? அப்படியிருக்கையில் எப்படி உங்களுக்கு பணம் அனுப்புவார்கள் என்ற கேள்வி உங்களுக்குள் எழவில்லையா !?

இதன் பின்னால் இருக்கும் பகீர் பிண்ணனி என்ன என்பதை உங்களுக்கு விளக்கட்டுமா ?

நீங்கள் எந்தவொரு இணையதளத்தை பார்த்துக்கொண்டிருந்தாலும் அதில்
Ctrl + U  இரண்டையும் சேர்த்து அழுத்தினால் அந்த பக்கத்தின் Source Code-ஐ பார்க்கலாம். அதில்தான் அந்த பக்கத்திற்கு பின்னால் என்னென்ன தில்லாலங்கடி இருக்கிறது என்பதை நாம் அறியலாம்.

அப்படி இந்த பக்கத்தின் Source Code-ஐ நான் பார்த்தேன். அதில் என்ன இருந்தது என்பதை இங்கே பகிர்கிறேன். பார்த்துவிட்டு நீங்களே புரிந்துக்கொள்ளுங்கள்.


இந்த இணையதளத்தில் சில நபர்களின் Profile-ஐ மறைத்து வைத்திருக்கிறார்கள். நீங்கள் எந்த விடையை தேர்ந்தெடுத்தாலும், அது பின்பக்கமாக அவர்களின் Profile-க்கு செல்லும்.

அந்த Profile என்னவென்று அதையும் தேடிச்சென்றேன். இதோ அது உங்கள் பார்வைக்கு..





அந்த Profile-ல் இருப்பவர்கள் வேறென்ன வலைத்தளங்கள் வைத்திருக்கிறார்கள் என்று நீங்களே பாருங்களேன்.

Hacking,
Uganda New,
Kenya 1000 Funds,
Kenya Funds Linked,
M India Funds Linked,
Pakistan Funds Linked

இப்படி அனைத்துமே மக்களின் பணத்தையும் தகவல்களையும் கொள்ளையடிக்கும் வலைப்பக்கங்களே. இந்த வலைப்பக்கங்களை வைத்திருப்பவர்கள்தான் மேலே நான் சொன்ன மத்திய அரசு இலவசமாக பணம் தருகிறது என்கிற வலைப்பக்கத்தையும் வடிவமைத்து உங்களையும் அந்த குழியில் விழவைக்க விரும்புகிறார்கள்.

நீங்கள் என்னதான் 7 குழுக்களுக்கும் இந்த தகவலை பகிர்ந்தாலும் எதுவும் நடக்காது. ஏனென்றால், Source Code-ல், 7 குழுக்கு நீங்கள் பகிர்ந்தபின்னர், ஏதோ ஒரு விளம்பரம் தொடர்பான பக்கத்திற்கு உங்களை இட்டு செல்லும்படியாகவே இந்த வலைப்பக்கம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.





நீங்கள் அந்த விளம்பர பக்கத்திற்கு செல்வதால், இந்த பக்கத்தை வடிவமைத்தவர்களுக்கு பணம் செல்லும். எப்படியென்றால், எத்தனைப்பேர் அந்த விளம்பரத்தை பார்க்கிறார்களோ அதற்கேற்றால் போல பணம் அவர்களுக்கு செலுத்தப்படும்.

ஆக, பிறர் பணம் சம்பாதிக்க உங்கள் பேராசையை பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை உணருங்கள்.

இதைவிட முக்கியமான விஷயம் ஒன்று. இந்த பக்கத்தில் ஒரு செயலியை மறைத்து வைத்திருக்கிறார்கள். அந்த செயலி உங்கள் தனிப்பட்ட தகவல்களை உங்களுக்கே தெரியாமல் திருடக்கூடியது.



"widget.supercounters.com/ssl/online_i.js" இதுதான் அந்த விஷமத்தனமான செயலி. நீங்கள் அந்த பக்கத்தில் எங்கு தொட்டாலும் இந்த Javascript செயல்பட துவங்கி விடும். அப்படி அது செயல்பட்டால் என்னவாகும் என்பதையும் பாருங்கள்.



நான் இந்த Javascript-ஐ செயல்படுத்தி பார்த்தேன். என் கணிணியில் இருக்கும் Antivirus என்ன சொல்கிறதென்றால்,

"Blocked an advertisement website or a URL that can be used by criminals to damage your computer or personal data"

அதாவது, என் கணிணியை முடக்கும் அல்லது என் தனிப்பட்ட தகவல்களை திருடக்கூடிய ஒரு விளம்பர வலைப்பக்கத்தை இந்த Antivirus முடக்கிவிட்டது.

ஒருவேளை, இதைப்பற்றி எதையும் அறியாமல் பொய்யான இலவச பணத்திற்காக ஆசைப்பட்டு இந்த இணைப்பை பின் தொடர்ந்து சென்றீர்களேயானால், உங்கள் தகவல்கள் இப்போது அவர்கள் கணிணியில் சேமிக்கப்பட்டு இருக்கும் !!

 “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.”

அறிவுடன் இருப்பது பற்றி திருவள்ளுவர் என்றைக்கோ சொல்லிவிட்டார். நாம்தான் யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பி பலவற்றை இழக்கிறோம்..

வாங்கைய்யா வாங்க. ஏமாற வாங்க என்று இவர்கள் உங்களை மறைமுகமாக அழைக்கிறார்கள்.

உஷாரய்யா... உஷாரு...

* தினேஷ்மாயா *

1 Comments:

Anonymous said...

Thanks for the awareness