மறைந்த முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களுக்கு மெரினாவில் நினைவிடம் கட்ட 2018 மே மாதம் பணிகள் துவங்கினாலும், தொய்வாகவே நடைப்பெற்று வந்தது. அதனை துரிதப்படுத்தவும், விரைந்து முடிக்கவும் மேலும் ரூபாய் 22 கோடி தமிழக அரசு ஒதுக்கி ஒரு அரசாணை வெளியிட்டதாக ஆகஸ்ட் 03, 2020 அன்று தினகரன் நாளிதழ் இணையதளத்தில் படித்தேன்.
ஏற்கெனவே நினைவிட கட்டுமானத்திற்கு ரூபாய் 50.08 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது இந்த ரூபாய் 22 கோடி நிதியை அரசு தனியாக ஒதுக்கீடு செய்யாமல் சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்டுமான பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபாய் 93 கோடியில் இருந்து மடைமாற்றம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், அவசரமாக முடிக்க வேண்டியிருப்பதால், இந்த நிதியை எடுத்து கொண்டதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மறைந்த உங்கள் கட்சி தலைவருக்கும், முன்னாள் முதல்வருக்கும் நீங்கள் காட்டும் விசுவாசம் எல்லாம் சரியே. ஆனால், என் கேள்வி என்னவென்றால், இறந்த ஒருவரின் நினைவிடம் அமைக்க பல மக்கள் வசிப்பதற்காக குடியிருப்பு கட்ட ஒதுக்கிய பணத்தை இங்கே உபயோகித்துக் கொள்ள எப்படி முடிகிறது. இறந்த அம்மையாருக்கு நினைவிடம் இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து கட்டினாலும் அவர் ஏன் எனக்கு தாமதமாக நினைவிடம் கட்டினீர்கள் என்று கேட்கப்போவதில்லை ( மீண்டும் தர்மயுத்தம் கனவில் வராமல் இருந்தால்). ஆனால், உங்களுக்கு மக்கள் மீது உண்மையாகவே அக்கறை இருக்கிறதென்றால், அரசு ஊழியர்களுக்கு குடியிருப்பு கட்டுவதற்கே முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும். அதுவே மறைந்த முன்னாள் முதல்வர் அவர்களுக்கு செய்யும் தொண்டு எனவும்கூட சொல்லலாம். தான் வாழும் காலத்தில் அவர் அரசு ஊழியர்களை அவ்வளவாக நேசிக்கவில்லை என்பது நிதர்சனம்தான் என்றாலும், அவர் மறைந்த பின்னரும் அரசு ஊழியர்களுக்கு கிடைப்பதை அவர் தடுப்பதுபோலவே எனக்கு தோன்றுகிறது. ஆட்சியாளர்கள் பொறுப்புடன் செயல்படலாம் !!
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment