கள்ளிக்காட்டு இதிகாசம்

Tuesday, July 07, 2020



நான் என் முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன். கள்ளிக்காட்டு இதிகாசம் நூலைப்பற்றி.

என் அலுவலக நண்பர் ஒருவர் ஒரு குறுஞ்செய்தியை பகிர்ந்தார். முதலில் அந்த பதிவை இங்கே உங்களுடன் பகிர்கிறேன்.

“வௌஞ்ச வெள்ளாமைய வேடிக்கை பார்கிறதவிட வெதச்சவனுக்கு வேற என்ன சொகம்.

சாமி எங்கேயோவா இருக்கு... இந்த வெள்ளாமக் காட்ல தான் இருக்கு!

இந்த காக்கா குருவிகமட்டும் இல்லாட்டி, காட்டுக்கே ஒரு கலகலப்பு வந்திருக்காது. தட்டைச்சிட்டுக சோளக் கருதக் கொத்தித் திங்கிறதே ஒரு அழகுதான். கொத்திட்டுப் போகுதுக பாவம்! வெவசாயம் பண்றது காக்கா குருவிக்கும் சேத்துத்தான்! நம்மளும் வெரட்டிட்டா அதுக எங்கிட்டுப் போகும்?

-கள்ளிக்காட்டு இதிகாசம்.”

இந்த வரிகள்தாம் அவை. இந்த வரிகளை படித்த அடுத்த நொடியே என் மனதில் இந்த புத்தகம் குடிசைப்போட்டு அமர்ந்துவிட்டது. உடனேயே இந்த நூலை பதிவிறக்கம் செய்து படிக்கத் துவங்கினேன்.

மொத்தம் 36 அத்தியாயங்கள் இருக்கிறது. ஒவ்வொரு அத்தியாத்தை படிக்கும்போது என்னை கவர்ந்த வரிகளையும், அதை படிக்கையில் என் மனதில் எழும்  எண்ணங்களையும் குறிப்புகளாய் எடுத்துக்கொண்டே வந்தேன்.

ஆனால், 31-ம் அத்தியாயம்வரை மட்டுமே என்னால் குறிப்புகள் எடுக்க முடிந்தது. மீதமுள்ள அத்தியாயங்களை படிக்கும்போது குறிப்புகள் எடுக்கும் மனம் இல்லை. அந்த கதையில் நான் மூழ்கிப்போயிருந்தேன். குறிப்புகள் எடுக்க மூலையின் உதவி தேவை. ஆனால் இந்த நூலை நான் கண் கொண்டும் இதயம் கொண்டும் படித்துக் கொண்டிருந்தமையால், மூலையின் உதவி தேவை படவில்லை.

இந்த நூலை படித்து முடிக்கையில் அந்த கள்ளிக்காட்டு வாசம் என் முகத்தில் பளீரென்று வந்து அடித்தது.

மனிதன் எதை எதையோ கண்டுபிடித்திருக்கிறான். ஆனால், அவனால் சில விடயங்களை இன்னும் கைகொள்ள முடியவில்லை. அதில் ஒன்று, ஒரு வாசத்தை பதிவு செய்து மீண்டும் அதே வாசனையை வேறொரு இடத்தில் உருவாக்குவது. புகைப்படம் என்பது ஒளியை கைது செய்து தேவைப்படும் போது வெளியிடுவது. ஆனால், வாசனையை பதிவு செய்யவோ, வேறொரு சமயத்தில் அதே வாசனையை மீட்டுருவாக்கம் செய்யவோ மனிதன் இன்னமும் கற்றிருக்கவில்லை.

ஆனால், அந்த கள்ளிக்காடுகளுக்கே உரிய ஒரு அழகான நெடியை இந்த நூலில் என்னால் நுகரமுடிந்தது. அந்த கள்ளிக்காட்டின் வாசத்தை வார்த்தைகளால் கைது செய்து நமக்கும் அதை கடத்தியிருக்கிறார் ஆசிரியர். இந்த நாவலுக்கு 2003-ம் ஆண்டின் சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.

நான் எப்போதும் ஒரு நூலை படித்துவிட்டு அந்த நூலை திறனாய்வு செய்ய மாட்டேன். அது திரைப்படமாக இருந்தாலும் சரி, வேறெந்த ஒரு கலை வடிவமாக இருந்தாலும் சரி, அதை விமர்சனம் செய்யவோ அல்லது திறனாய்வு செய்யவோ நான் விரும்பமாட்டேன். அதை இரசிக்கவே விரும்புவேன். நான் விரும்பியவற்றை உங்களுடன் பகிர்கிறேன். என் வலைப்பக்க வாசகர்களில் இதுவரை இந்த நூலை படித்திராதவர்கள்  உண்டென்றால் நிச்சயம் இந்த நூலை படிக்கும்படி கோரிக்கை விடுக்கிறேன்.

இதோ… அந்த கள்ளிக்காட்டின் வாசத்தை இங்கே பகிர்கிறேன். நீங்களும் நுகருங்கள்…

  • Ø  1: - பேயத்தேவரும், மொக்கராசுவும் – தேவர் பசுவுக்கு வைத்தியம் பார்க்கிறார்
  • Ø  மண்ணுதான் சாப்பாடு, மண்ணுதான் மருந்து நம்மளுக்கு
  • Ø  மவுனம் பேசினான்.
  • Ø  மவுனம் சம்மதம் என்பதெல்லாம் ஏடு போட்டவர்கள் செய்த இலக்கணம். மவுனம் என்பது ஒரு கேள்வி.
  • Ø  (விடைத்தெரியாதவர்கள் கேள்வி கேட்டவரை திருப்பிக் கேட்கும் ஒரு கேள்வியே மவுனம்)
  • Ø  தை ஒழவு அய்யாட்டுக் கெட
  • Ø  அந்தரங்க சுத்தி ! J
  • Ø  உப்பு? அந்த ஆடம்பரத்துக்கு அங்கெங்கே போவது ?
  •  
  • Ø  2: செல்லத்தாயி வந்திருக்கிறாள்
  • Ø  இயற்கைதான் மனிதனின் ஆசான். தன் இருப்பு அசைவு இரண்டிலும் அறிவு போதிக்கிறது அது.
  • Ø  வானமும் பூமியும் பாடம் நடத்திக்கொண்டேயிருக்கிறது. புத்தியுள்ளவன் புரிந்து கொள்கிறான். வலியுள்ளவன் அறிந்துகொள்கிறான்.
  • Ø  மனிதனின் படைப்பென்று பூமியில் எதுவுமில்லை. மனிதன் கண்டுபிடிப்பாளனே தவிர படைப்பாளி இல்லை.
  • Ø  வானம்பார்த்த சொட்டையன் கம்போடு சேர்த்து மூன்றுகை உயர்த்தினான்.
  • Ø  ஒரு மாடு குடும்பங்காக்கும், ஒன்பது மாடு குலங்காக்கும்.
  • Ø  எல்லா வாசனையையும் விட கெட்டவாசனை மனுசவாசனைதான். அத எந்தத் தண்ணில கழுவுவ? போடா போடா போக்கத்த பயலே.


  • Ø  3: செல்லத்தாயியின் குணங்கள்
  • Ø  சகிக்கமுடியாத அவலட்சணமுமில்லை. வியக்கமுடிந்த அழகுமில்லை.
  • Ø  பிறந்ததேதி குறித்து வைக்கும் மேட்டுக்குடித் தனமெல்லாம் தெரியாது அவர்களுக்கு.
  • Ø  தக்காளிக்கூடை ஓரணாவிற்கு விற்ற ஓர் அடைமழைக் காலத்தில் அவள் பிறந்ததாய் ஞாபகம் பேயத்தேவருக்கு.
  • Ø  ஈரமும் உண்டு அவளுக்கு. நெருப்பென்று தள்ளவும் முடியாது. இனிப்பென்று கொள்ளவும் முடியாது.
  • Ø  ஒரு பானை வெந்நீருக்கு ஒரு சொம்பு பதம்.
  • Ø  கிராமத்து இரவு ஆழமானது. நிஜமான நிசப்தம் நிலவுவது. பகலெல்லாம் தேய்ந்தவர்கள், பன்னிரெண்டு மணி நேரம் உழைத்தவர்கள், பகல் தூக்கத்தை தரித்திரமென்று சபிப்பவர்கள், இரவில் முற்றும் மறந்து தூங்குவார்கள் மூச்சுவிடும் பிணங்களாய்.
  • Ø  கிளைகளோடு காரசாரமாக விவாதிக்கும் காற்றின் பேரோசை
  • Ø  மௌனத்தின் கர்ப்பப்பைதான் கிராமத்தின் இரவு.
  •  
  • Ø  4,5: செல்லத்தாயியின் மறுமணம், மொக்கராசுவின் வேதனை
  • Ø  புயல் வந்து கேள்விகேட்டால் பூவரசஞ் சருகு என்ன சொல்லும்?
  • Ø  மனிதனுக்கு மனிதர்கள் மட்டுமே தேவை என்பது இரண்டு பருவத்தில். ஒன்று வாழத்தெரியாத இளம்பருவம். இன்னொன்று வாழ்ந்து முடிந்த முதுபருவம். இரண்டிலும் தனிமைப் படுத்தப்படுவதுதான் வாழ்வின் சாபம்.
  • Ø  வாழ்க்கை வெறுத்துப்போன மனிதர்கள் கடைசியாய் தண்ணீர் குடிப்பது அந்த கண்மாயில்தான்.
  • Ø  தற்கொலையின் முன் நிமிஷம் வரைக்கும்கூட மனிதனுக்கு சுகம் வேண்டியிருக்கிறது.


  • Ø  6,7: சின்னு - தேவரின் வீட்டின் முன் வந்து கத்துகிறான். சின்னுவின் குணங்கள்.
  • Ø  ஒரு வீட்டில் கோழிச்சாறு கொதிப்பதே ஒரு கவுரவம்தான்.
  • Ø  வேப்பமர இலையில் இருந்து தங்கம் வழிந்தது.
  • Ø  நண்டோட நெல் நடனும்
  • Ø  நரியோட கரும்பு நடனும்
  • Ø  வண்டியோட வாழை நடனும்
  • Ø  தேரோட தென்னை நடனும்
  • Ø  கல்யாணம் என்பது இன்னொரு உயிரின் மனசு – உடம்பு – வயிறு மூன்றையும் திருப்தி செய்வது


  • Ø  8: செல்லத்தாயி பெண்பிள்ளை பெற்றெடுக்கிறாள்.
  • Ø  மண்ணுந் தண்ணியுந் தாண்டா குடியானவன் கும்புடுற சாமி
  • Ø  மிளகாய்ச்செடி காய்க்க எழுபது நாள் ஆகும். வாரம் ஒரு தண்ணீர் கட்டி, மாதமொருமுறை களையெடுக்க வேண்டும்.
  • Ø  சீட்டு, தாயம் மட்டுமல்ல – விவசாயமும் ஒரு சூதாட்டம்தான். ஆட்டக்காரர்களில் எவனோ ஒருவன் தான் ஜெயிக்கிறான்.
  • Ø  மூணு தைப்பொங்கல் கண்டு நைந்துப்போன வேட்டி.
  • Ø  ஒடம்புல உசிர் இருக்கு.. ஒழைக்கத் தெம்பிருக்கு… உச்சில சாமி இருக்கு..


  • Ø  9, 10: நாயக்கரிடம் பணம் வாங்க செல்கிறார் தேவர். அழகம்மாள் இறக்கிறாள். பணம் வாங்காமல், நாயக்கருடன் ஊருக்கு வந்து சேர்கிறார் தேவர்.
  • Ø  நாங்க என்ன உங்கள மாதிரி நகத்துல அழுக்கு ஒட்டாத வேலையா செஞ்சிட்டு இருக்கோம்.
  • Ø  மாறிவரும் சமூகத்தில் மணவாழ்க்கை என்பது ஆணால் கிட்டும் சௌகரியங்களை பெண்ணும், பெண்ணால் கிட்டும் சௌகரியங்களை ஆணும் சட்டப்படி திருடிக்கொள்ளும் சம்பிரதாயமாக இருக்கிறது.
  • Ø  முழுச்சட்டியில் கஞ்சியிருந்தா மூடிவைக்க தெரியாது. ஊர் ஆளுகள கூப்பிட்டு ஊட்டி விடும்யா.
  • Ø  குழம்புவெச்ச பிறகும் மீனு குட்டிகிட்டி போடுமா?
  • Ø  கையில் கணவன் பெயர் பச்சைக்குத்தி அந்த கையையே தலையணையாய் வைத்து தூங்குவாள்.


  • Ø  11: அழகம்மாளின் இறுதிச்சடங்கு.
  • Ø  எல்லோரும் தங்கள் சோகங்களையும் கூட்டிக்கொண்டு வெளியேறினார்கள்.
  • Ø  தன் உடம்பையும் உசுரையும் அந்த கைத்தடிக்கு மாற்றி ஓசையில்லாமல் ஊர்ந்தார்.
  • Ø  தலைமாட்டில் வைக்கும் ஊதுவத்தி, குளித்த பிணத்தைவிட குளிக்காத பிணங்களின் கெட்டவாடையைத்தான் விரட்டுகிறது.
  • Ø  பிறந்தபோது குளிப்பாட்டுவதும் சீவாத்மாக்களுக்கு தெரிவதில்லை. இறந்தபிறகு குளிப்பாட்டுவதும் பரமாத்மாக்களுக்கு தெரிவதில்லை.
  • Ø  திரும்பி நின்னு தேரழகு பார்த்தா நானே ஏறிப்படுக்கலாம் போலிருக்கு. (தொழில் நேர்த்தி, தொழில் சுத்தம்)
  • Ø  ”போடியம்மா போ ! பின்னாலயே வாரேன் போ !” – பேயத்தேவர்.


  • Ø  12: புளியமரத்திற்காக மாட்டை பறிகொடுத்தார் பேயத்தேவர் – சின்னுவின் செயலால்.
  • Ø  பெற்றவர்கள் மறைந்துப்போக, உடன்பிறந்தவர்கள் அவரவர் பிழைப்புத்தேடி ஒதுங்கிப்போக, நல்லது கெட்டதுக்கு மட்டுமே சுற்றங்கள் வந்து சூழ்ந்து விலகிப்போக, பெற்று வளர்த்த பிள்ளைகள்  “கெழவன் கெழவி செத்தாச் சொல்லிவிடுங்க” என்று கண்ணுக்குத் தெரியாத தங்கள் இன்னொரு தொப்பூழ்க் கொடியையும் அறுத்துக் கொண்டோட, உடம்பிலுள்ள உறுப்புகள் ஒவ்வொன்றாய் “ஆளவிடு சாமி” என்று அதனதன் செயல்பாட்டை நிறுத்திக்கொள்ளும்போது மனைவியின் மடிசாய்கிறான் கணவன். கணவனின் மடிசாய்கிறாள் மனைவி..  (கணவன் மனைவி உறவினை மிக அழகாக ஆழமாக உரித்துக்காட்டி இருக்கிறார்)
  • Ø  மனசும் ஒரு சுடுகாடுதான். நினைவு வந்து இத்தன பேயாட்டம் ஆடுதே.


  • Ø  13: கவர்ந்து சென்ற மாடுகளின் நினைவுகள், மாடுகள் தேவரிடம் ஓடி வந்துவிடுகிறது.
  • Ø  இந்த அடி அடிச்சதுக்கு அந்த மாடு நீ மனுசந்தானான்னு பார்வையால கூட ஒரு கேள்வி கேக்கலையே !


  • Ø  14: மாடு பஞ்சாயத்து – ஊரே காசுப்போட்டு மாட்டை மீட்டுக்கொடுத்தது.
  • Ø  தவணைமுறையில் விடிந்துக்கொண்டிருந்தது வானம்.
  • Ø  எந்த காசிலும் சாதி ஒட்டியிருக்கவில்லை.


  • Ø  15: பேயத்தேவரின் முன்னோர்கள் வாழ்ந்த ஊரின் கதை. முத்துக்கண்ணியின் கதை


  • Ø  16: சீனு சாராயம் காய்ச்ச ஆரம்பித்தான். அவன் திருட்டு சாமர்த்தியம் பற்றி பேசுகிறது இந்த அத்தியாயம்.
  • Ø  தொட்டா ஒட்டிக்கிற மாதிரி இருட்டு


  • Ø  17: சீனு சாராயம் காச, மோக்கராசுவிடம் மனுச எலும்பு எடுத்துவர கேட்கிறான். முத்தாலம்மன் கோயில் திருவிழா.


  • Ø  18: எலும்புக்காக வெட்டியான் தொத்தனிடம் கேட்டு, அங்கே நடப்பவற்றை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
  • Ø  மனுச வாழ்க்கையில் நல்ல இடம் சுடுகாடுதான். மனசு மட்டுப்படுவது அங்கேதான்.
  • Ø  செத்துப்போனவனுக்கு நிரந்தரமான நிம்மதியும், வீடு திரும்புறவனுக்கு கொஞ்சம் ஞானமும் தரும் உலகின் பழைய பள்ளிக்கூடம் அது.
  • Ø  மனுசன எரிக்கிறது எப்படின்னு தொத்தன் ஒண்ணும் மனுசாஸ்திரம் படிக்கலை. தீ வைக்கிறது எப்படினு திருக்குறள்லயும் சொல்லல. எல்லாம் வழிவழியா வந்த அனுபவம்தான்.
  • Ø  ஒம்போது ஓட்ட கொண்ட தேகத்தை எரிக்க நாலு ஓட்டைப்போதும். நெஞ்சாங்குழி, வயிறு, இரண்டு முழங்கால்.
  • Ø  சுடுகாட்ட ஏன் வடக்கா வச்சாகன்னா, நம்மூர்ல தெக்கு வடக்காத்தான காத்தடிக்கிறது வழக்கம். பொணம் வேகிற பொக ஊருக்குள்ள வராம அப்படியே ஓடிப்போகட்டும்னுதான் வடக்க வச்சிருக்காக சுடுகாட்ட.
  • Ø  அவுக அவுக நெஞ்சுக்கூட்ல என்ன நெனப்புல சாகுறாகளோ, அதப் பொறுத்துதான் வேகுறதும் வேகாததும்.


  • Ø  19: அழகம்மாளின் சேலை சலவைக்கு தரப்பட்டதால் அதை மீட்க தேவர் செல்கிறார்.
  • Ø  குடல் தொங்கி சரிந்துக்கிடந்த கயித்துக்கட்டில் !
  • Ø  ராசாவுக்கு கிரீடம் மாதிரி அவள் சீல என் தலைக்கு.


  • Ø  20: வெள்ளாமை வெளஞ்சிருக்கு. அத ரசிச்சிட்டு இருக்கார் தேவர். அவரின் இரண்டாவது மகள் மின்னலு வாழ்விழந்து வருகிறாள்.
  • Ø  லாந்தரின் வயசான வெளிச்சத்தில்.
  • Ø  வெவசாயம் பண்றது காக்கா குருவிக்கும் சேர்த்துதான். நம்மளும் வெரட்டிட்டா அதுக எங்க போகும் பாவம்.


  • Ø  21: கருத்தக்கண்ணன் சூத்தப்பல்லானை வெட்டிவிடுகிறான்.
  • Ø  மாமியாருக்கு குடுக்குற மரியாதையை பூனைக்குட்டிக்கும் கொடுப்பா. ரெண்டு சீவன்களுக்கும் ஒரே தட்டு; ஒரே கஞ்சி.
  • Ø  பாதாளத்துல கெடக்கோம். இதுக்கு கீழ விழ எடமில்லே.
  • Ø  இந்த மஞ்சகெழங்கு மட்டும் இல்லனா தாலி கயித்துக்கு என்ன பண்ணியிருப்பாகளோ பொம்பளைக?


  • Ø  22: முருகாயியை இரு மகள்களும் வீட்டைவிட்டு துரத்துகிறார்கள்.
  • Ø  கடவுளுக்கு காது கேக்காம இருந்திருக்கலாம். அல்லது இங்க பகல் அங்க ராத்திரியா இருந்திருக்கலாம். ஒண்ணும் நடக்கல.
  • Ø  தல குளுந்துருக்கணும் பாதம் சூடாயிருக்கனும். அதான் நல்ல மனுச உடம்பு.
  • Ø  நான் முந்தி செத்தா நீ தூக்கிப்போடணும். நீ முந்தி செத்தா நான் தூக்கிப்போடணும்.


  • Ø  23, 24, 25: தேவருக்கும் முருகாயிக்குமான உறவு.
  • Ø  மனசு நாலா பக்கமும் திரும்புது. முதுகத் திருப்ப முடியல.
  • Ø  நாலு கால் மனசு
  • Ø  சுடுகாட்டை கடக்கிறவன் தன் பயத்தை மறக்க சத்தம்போட்டுக்கொண்டே நடப்பதுபோல, தம் குறைகளை மறைக்க அடுத்தவர்களின் குறைகளையே அசைபோடுகிறது மனுசக் கூட்டம்.
  • Ø  அவ உருவம் வட்டமா குறைஞ்சு, புள்ளியா தேஞ்சு, கடைசியா கண்ணவிட்டு கரைஞ்சு காணாமப் போச்சு.


  • Ø  26: சின்னுவை கரைசேர்க்க தேவர் நாயக்கரிடம் பணம் கேட்க செல்கிறார். பணம் வாங்கி திரும்ப வந்தார். வண்டி நாயக்கர் இறந்துவிடுகிறார்.
  • Ø  ஒரு மனுஷன் தானா ஒண்ணுக்கு போறவரைக்கும்தான் இருக்கனும். இடுப்புத் துணிய தானா கட்டிக்குற காலம் வரைக்குந்தான் உசுரோட இருக்கனும். என் கையை தூக்கிவிட இன்னொரு கை வேணுங்கிறப்ப நான் இருந்தா என்ன? போனா என்ன ?


  • Ø  27: தேவர் தன் ஊரடி தோட்டத்தை நாயக்கரின் வப்பாட்டிக்கு எழுதித்தர வற்புறுத்தப்படுகிறார். அவரும் கைநாட்டிக்கொடுக்கிறார்.


  • Ø  28: மொக்கராசுக்கு மார்க்க கல்யாணம். மொய்ப்பணத்தை சின்னு எடுத்துக்கொண்டு சென்றுவிடுகிறான்.
  • Ø  நாக்கும் மனசும் செத்து கெடக்கிறப்ப ருசி எப்படி தெரியும்?
  • Ø  ஆள் செத்துப்போனா மண்ணுக்குள்ள போயிரலாம். மண்ணு இல்லேன்னு போனா ஆளா சாக முடியும்?


  • Ø  29: கிணறு வெட்டுகிறார். மின்னலு பெண் கிணற்று வெடியில் இறக்கிறாள்
  • Ø  உடம்பு செத்துப்போனா மண்ணுக்குள்ள புதைக்கிறோம். இல்ல எரிக்கிறோம். மனசு செத்துப்போனா அவன் அவன் அத உடம்புக்குள்ளயே புதைச்சுக்கிறான்.


  • Ø  30: கிணற்றில் தண்ணீர் வந்து, வெள்ளாம வெளெஞ்சு. நிலத்தை அளவெடுக்க அதிகாரிகள் வந்திருக்கிறார்கள்.


  • Ø  31. அணை கட்டும் படலம்
  • Ø  நாங்க பாம்புக்குக்கூட பால் ஊத்துற சாதி.
  • Ø  சாவு நாளைக்கு வருதுன்னு தெரிஞ்சாலும் மூச்சு விடுறத இன்னைக்கு நிறுத்திடறோமா என்ன ?

 

இன்னமும் 5 அத்தியாயங்கள் இருக்கிறது. அதை படிக்கையில் குறிப்பேதும் எடுக்கவில்லை. அதற்கான காரணம் முன்னரே கூறிவிட்டேன்.

ஒவ்வொரு அத்தியாத்திலும் நான் இரசித்த வரிகளை இங்கே பதிவு செய்கிறேன். இந்த வரிகளை படிக்கும் ஒவ்வொருமுறையும் மனது ஏதோ செய்கிறது. இனம் புரியாத ஒருவித உணர்வு ஏற்படுகிறது. யாருக்குத் தெரியும்? இதுப்போன்ற ஒரு சந்தர்ப்பத்தை எதிர்கொண்டு அதிலிருந்து பிழைப்புக்காக ஊர்விட்டு வேறு ஊர் வந்து சேர்ந்த என் பாட்டனோ, பூட்டனோ இந்த நாவலை நான் படிக்கும்போது என்னுடன் சேர்ந்து என் உயிரணுக்கள் வாயிலாக அவர்களும் இந்த நாவலை படித்திருக்கலாம். அதனாலோ என்னவோ இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கும் வலியை என்னாலும் உணரமுடிகிறது.

வைரமுத்து அவர்களை கவிப்பேரரசு என்று அழைப்பதில் குற்றமும் இல்லை குறையுமில்லை. அந்த அடைமொழிக்கு அத்தனை பொருத்தம் வாய்ந்தவர் அவர் என்பதை இந்த ஒரு நாவல் உணர்த்திவிட்டது எனக்கு.

இயன்றால் இந்த நூலை வாங்கிப்படியுங்கள், அல்லது இணையத்தில் இருக்கிறது. பதிவிறக்கம் செய்து படியுங்கள். புத்தகம் தேடியும் கிடைக்காதவர்கள் என்னை அணுகலாம். நான் பகிர்கிறேன்.

மி: dhineshmaya@gmail.com

* தினேஷ்மாயா *

The Alchemist – இரஸவாதி



பல ஆண்டுகளாக நான் படிக்க வேண்டும் என்று நினைத்த ஒரு புத்தகத்தை இப்போதுதான் படிக்க நேர்ந்தது.

Paulo Coelho – அவர்கள் எழுதிய The Alchemist புத்தகம்தான் அது.

என் நண்பர் ஒருவர் மும்பையில் இருந்து தமிழகம் வந்தார். அவர் சென்னையில் ஒருவாரம் தனிமை முகாமில் இருக்க நேர்ந்தது. தனிமையில் இருக்கையில் படிக்க ஒரு சிறந்த புத்தகம் இருந்தால் சொல் என்று அவர் என்னிடம் கேட்டார். நான் இந்த புத்தகத்தை அவருக்கு படிக்க சொன்னேன்.

இணையத்தில் இருந்து இந்த புத்தகத்த பதிவிறக்கம் செய்தேன். காலச்சுவடு பதிப்பகத்தார் இதை தமிழில் வெளியிட்டுள்ளனர். மொழிபெயர்ப்பாளர் திரு.சி.முருகேசன்.

என் நண்பருக்கு இந்த நாவலை அனுப்பிவிட்டு அவரை இந்த நாவலை தவறாமல் படிக்க வேண்டும் என்றும் சொல்லினேன். அப்போதுதான் எனக்கு தோன்றியது, நானே இந்த புத்தகத்தை படித்ததில்லை ஆனால் பிறரை தவறாமல் படிக்கவேண்டும் என்று சொல்கிறேனே என்று. உடனேயே அனைத்து வேலைகளையும் ஓரங்கட்டிவிட்டு ”இரஸவாதி”யை படிக்க ஆரம்பித்தேன்.

ஒரே நாளில் படித்து முடித்துவிட்டேன். இதை படிக்க படிக்க மனதில் அவ்வளவு ஒரு ஆனந்தம். எங்குமே மனதிற்கு வலி தரக்கூடிய சூழல் இந்த புத்தகத்தில் இல்லை. இதை ஒரு இலக்கிய நாவல் என்பதைவிட ஒரு தத்துவ புதினம் எனலாம். இதில் பிரபஞ்சத்தின் தத்துவம் சொல்லப்பட்டிருக்கிறது, வாழ்வின் இரகசியம் சொல்லப்பட்டிருக்கிறது. மரணம், வலி, போராட்டம், தேடல், புதையல், இரசவாதம் இவை எல்லாவற்றையும் விட இந்த உலகை இயக்கிக்கொண்டு இருக்கும் காதல் அதிகம் பேசப்படுகிறது.

இந்த நாவலைப் பற்றிய திறனாய்வு நான் செய்யப்போவதில்லை. இந்த நாவலில் வரும் கதாப்பாத்திரங்களையோ, அதன் மூலக்கதையையோ சொல்லப்போவதில்லை. இந்த புதினத்தில் என்னை அதிகம் கவர்ந்த சில வரிகளை இங்கே உங்களுடன் பகிர்கிறேன்.

  • ·         நாம் வாழ்க்கையில் எப்போதும் மாற்றங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
  • ·         ஆனால், காலப்போக்கில் ஒரு மாயமான சக்தி அவர்கள் தம்முடைய இலக்கை அடைவதென்பது இயலாத காரியம் என்று அவர்களை நம்பவைக்கத் துவங்கிவிடும்.
  • ·         அந்த சக்தி பாதகமானது போலத் தோன்றும். ஆனால், உண்மையில் அதுதான் உன் இலக்கினை அடைவதற்கான வழியை காட்டும். உன்னுடைய ஆன்ம பலத்தையும் மனோ பலத்தையும் ஆயத்தப்படுத்துவதும் அதுதான்.
  • ·         நீ யாராக இருந்தாலும், நீ செய்வது எதுவாக இருந்தாலும், நீ ஏதேனும் ஒன்றை உண்மையாகவே விரும்புவாயானால், அதற்கு காரணம் அந்த விருப்பம் பிரபஞ்சத்தின் ஆன்மாவிலிருந்து உதித்தது என்பதுதான். இந்த பூமியின் மீதான உன் பிறப்பின் நோக்கமே அதுதான்.
  • ·         மக்கள் தங்களுடைய கனவை வாழ்க்கையின் எந்தப்பருவத்திலும் நிறைவேற்றக்கூடிய திறம்படைத்தவர்கள் என்பதை அவர்கள் உணர்ந்ததே கிடையாது.
  • ·         கிடைப்பதற்கு முன்கூட்டியே ஒரு பொருளைக் கொடுப்பதாக உறுதியளிக்க ஆரம்பித்தாயானால் அதை அடைவதற்கான வேலையை செய்வதில் ஆர்வம் போய்விடும்.
  • ·         சில விஷயங்களை அதன் போக்கிலேயே விட்டுவிடுவது நல்லது.
  • ·         காற்றின் சுதந்திரத்தை அறிவாய். அந்த சுதந்திரம் உனக்கும் கிடைக்கும்.
  • ·         உன்னைத் தவிர உன்னை பிடித்து நிறுத்தக் கூடியது வேறெதுவுமில்லை.
  • ·         உனக்கு போதும் என நீ நினைக்கும் அனைத்தும் உன் இலக்கை நோக்கிய பாதையின் உன் படிக்கற்கள் மட்டுமே.
  • ·         எப்பொழுதும் நேரடியான கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும்.
  • ·         உன் இலக்கினை அது நிறைவேறும் வரை மறந்துவிடாதே.
  • ·         ஒருவருடைய வீட்டைப்பற்றி தெரிந்து கொள்ளாமல் அந்த நபரை நீ நம்பக்கூடாது.
  • ·         உலகில் உள்ள அத்தனை அதிசயங்களையும் இரசிக்கனும், அதே சமயம் கரண்டியில் இருக்கிற எண்ணெய்த் துளிகளையும் மறந்துவிடக்கூடாது.
  • ·         ஒருவன் தன் இலக்கிலிருந்து தப்பி ஓடிவிடாமல் தடுப்பதற்காகக் கேள்வி கேட்கப்படக்கூடாத விஷயங்கள் சில இருக்கத்தான் இருக்கின்றன.
  • ·         உன்னுடைய முடிவுகளை நீயே எடு.
  • ·         உனது வாழ்க்கை என்ன என்பதில் தெளிவாக இரு.
  • ·         Principle of favorability
  • ·         Beginner’s Luck
  • ·         பலரும் இங்கே மாற்றங்களை விரும்புவதில்லை. ஏனென்றால், மாறிய சூழ்நிலையை எப்படி கையாள்வது என்பதில் இருக்கும் ஒருவித பயம்தான் அதற்குக் காரணம்.
  • ·         வரத்தை அலட்சியப்படுத்தினால் அது சாபமாகிவிடும்.
  • ·         கனவு காண்பதை விட்டுவிடாதே.
  • ·         நீ ஒன்றை விரும்பும்போது அதை அடைய இந்த பிரபஞ்சமே வழி வகுக்கும்.
  • ·         அனைவராலும் புரிந்துகொள்ளக் கூடிய பிரபஞ்ச மொழி ஒன்று இருந்தது.
  • ·         வார்த்தைகளற்ற பிரபஞ்ச மொழி – காற்று உணர்த்தும் செய்தி.
  • ·         எண்ணத்திற்குக் கூட ஆன்மா உண்டு.
  • ·         உலகத்திற்கென்று ஒரு ஆன்மா இருக்கிறது. அந்த ஆன்மாவை புரிந்துகொள்பவர்களால் எல்லாவற்றிற்குமான ஒரு பொது மொழியை புரிந்துகொள்ள முடியும்.
  • ·         வாழ்வு என்பதை ஒரு பெரிய விழாவாக, கோலாகலமான கொண்டாட்டமாக கருதவேண்டும். ஏனென்றால், நாம் ஜீவித்திருக்கிற இந்த தருணம்தான் வாழ்வென்பது.
  • ·         உலகம் பல மொழிகளில் பேசுகிறது. ஒட்டகத்தின் சப்தம் பயத்தை ஊட்டலாம். ஈச்ச மரத்தின் காட்சி அற்புதமாக தெரியலாம், காலைநேர பாலைவனத்தின் காற்றும் அமைதியும் மனதிற்குள் இலயத்தை தரலாம். உலகம் பல மொழிகளில் நம்முடன் பேசுகிறது.
  • ·         மனித சமூதாயத்திற்கெல்லாம் மூத்தது – காதல் !
  • ·         சோசியம் பார்த்து, எதிர்காலத்தில் நல்லது நடக்குமென்றால் அது இன்ப அதிர்ச்சியாக இருக்கும். நடக்கப்போவது தீயதாக இருக்குமானால், முன்கூட்டியே தெரிந்துபோனமையால் அது நிகழ்வதற்கு முன்பிருந்தே வருத்தப்பட நேரிடும்.
  • ·         எதிர்காலம் இறைவனுக்குரியது. எதிர்காலத்தை மறந்துவிடு. நிகழ்காலத்தில்தான் இரகசியமே இருக்கிறது. நிகழ்காலத்தை உன்னிப்பாக கவனித்தால் அதை நீ மேம்படுத்திக்கொள்ளலாம்.
  • ·         நாளைக்கு இறப்பது என்பது பின்னொரு நாளில் இறப்பதைக்காட்டிலும் மோசமானது அல்ல.
  • ·         வாழ்வதற்காகவோஅல்லது இந்த உலகத்தைவிட்டு புறப்படுவதற்காகவோதான் ஒவ்வொரு நாளும் விடிகிறது. எல்லாம் ஒரே வார்த்தையில் அடக்கம். “மக்தூப்”.
  • ·         சாவைப் பற்றி கவலைப்பட ஏதுமில்லை. உலகத்தின் ஆன்மா இவனுக்காக காத்திருக்கிறது. விரைவில், அதிலொரு பகுதியாகப் போகிறான்.
  • ·         வாயினுள்ளே போவது எதுவும் பாவம் இல்லை. வாயிலிருந்து வெளியே வருவதில்தான் இருக்கிறது.
  • ·         உன் இதயம் எங்கிருக்கிறதோ அங்கேதான் புதையலும் இருக்கிறது.
  • ·         நீ உனது புதையலை அடைந்தே தீர வேண்டும். அப்பொழுதுதான் உனது பாதை நெடுகிலும் நீ கற்றுக்கொண்ட ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளவையாகும்.
  • ·         உயிர் உயிரை ஈர்க்கும்.
  • ·         தன்னுடைய இலக்கை தேடி அடைவதற்கு ஒருவனின் காதல் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. காதலால் ஒருவன் தன்னுடைய தேடலைக் கைவிடுவானேயானால் அதற்குக் காரணம் அது உண்மையான காதலாக, உலக மொழியைப் பேசக் கூடிய காதலாக இருக்காது.
  • ·         கற்றுக்கொள்வதற்கு ஒரேயொரு வழிதான் இருக்கிறது. அதுதான் செயல்முறை.
  • ·         சொர்க்கத்தினுடைய நகலும் படிவமுமாகத்தான் இயற்கையான உலகம் இருக்கிறது என்பதை அறிவாளிகள் புரிந்து கொண்டார்கள்.
  • ·         உன்னுடைய இதயத்தைக் கவனி, அதற்கு எல்லாம் தெரியும். ஏனென்றால், அது உலக ஆன்மாவிலிருந்து வந்தது. ஒருநாள் அங்கேயே திரும்பப் போய்விடும்.
  • ·         துன்பம் பற்றிய பயம் துன்புறுவதைக் காட்டிலும் மிக மோசமானது என்று உன் இதயத்திடம் சொல்.
  • ·         கனவுகளைத் தேடிப் புறப்பட்ட இதயம் ஒருபோதும் துன்பத்திற்கு ஆளானதில்லை.
  • ·         இந்த மண்ணில் வாழும் ஒவ்வொருவரும் தேடி அடைவதற்காக ஒரு புதையல் காத்துக்கிடக்கிறது.
  • ·         உன் இதயம் சொல்வதை எப்போது சரியாக கேட்கிறாயோ அப்போது உலக ஆன்மாவிடம் உன் இதயம் திரும்பிவிட்டது என்று உணர்ந்துக்கொள்.
  • ·         வாழ்க்கையில், வெற்றியாளன் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே தேர்ந்தெடுக்கப்படுகிறான்.
  • ·         உன்னிடம் பெரும் புதையலை வைத்துக்கொண்டு அதை பிறரிடம் சொல்ல முற்பட்டால் அவர்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள்.
  • ·         ஆன்மாவின் வலிமையை கண்கள் காட்டும்.
  • ·         மற்றவருடைய இலக்கில் குறுக்கிடும் எவரும் தன்னுடைய இலக்கை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும்.
  • ·         ஒரு சங்கை எடுத்து காதில் வைத்தால் அதில் கடலின் அலையோசை கேட்கும். ஏனென்றால், கடல்தான் அதன் இலக்கு. அதிலிருந்துதான் சங்கு பிறப்பெடுத்து வந்தது. மீண்டும் அதிலேயே சென்று சேர எப்போதும் துடித்துக்கொண்டிருக்கிறது.
  • ·         கனவை அடையவிடாமல் தடுப்பது ஒன்றே ஒன்றுதான். தோற்றுவிடுவோமோ என்கிற பயம்.
  • ·         சாகப் போகிறோம் என்கிற பயமே வாழ்க்கையைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள செய்வது வழக்கம்.
  • ·         காற்றுக்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை.
  • ·         பிரபஞ்சத்தில் தோன்றிய அனைத்தும், பரிணமித்த அனைத்தும் உன்னுள் இருக்கிறது என்பது எப்போது உணரப்போகிறாய் ?
  • ·         ஒருமுறை நிகழ்ந்தது மறுமுறை ஒருபோதும் நிகழாது. ஆனால், இருமுறை நிகழ்ந்ததோ மூன்றாவது முறையும் கண்டிப்பாக நிகழும்.
  • ·         ஒருவன் என்ன தொழில் செய்கிறான் என்பது பொருட்டல்ல. ஆனால், பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் உலக வரலாற்றில் முக்கிய பாத்திரம் வகிக்கிறான். சாதாரண நிலையில் அது அவனுக்கு புரிவதில்லை.
  • ·         இலக்கை தேடிச் செல்பவர்களுக்கு வாழ்க்கை பெருந்தன்மையாகத்தான் நடந்துக்கொண்டிருக்கிறது. அதை உணர பொறுமை அவசியம்.

 இன்னும் எத்தனையோ வரிகள் என்னை அதிகம் கவர்ந்தது. அதில் சிலவற்றையே இங்கே பதிவு செய்கிறேன். முன்பெல்லாம் ஒரு நூலை படித்தால் வெறுமனே படித்துவிட்டு அதை மனதில் வைத்துக்கொள்வேன். இப்போதெல்லாம், எந்த ஒரு நூலாக இருந்தாலும்சரி, அதை படிக்க ஆரம்பிக்கும் முன்னரே அதிலிருந்து குறிப்புகளை எடுக்க ஆரம்பித்துவிடுகிறேன். அது எனக்கு பின்னாளில் உதவலாம் என்பதற்காகவும், உங்களுடனும் பகிரலாம் என்றும். மேலே நான் பதிந்த வரிகளை மீண்டும் படித்து முடிக்கையில் அந்த நாவலை முழுவதுமே படித்த ஒரு திருப்தி ஏற்படுகிறது.

ஒருமுறை குறுஞ்செய்தி ஒன்றை படித்தேன். அதில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் எனும் நூலில் இருந்து ஒருசில வரிகளை அதில் பதிவிட்டிருந்தார்கள். அந்த வரிகளை படித்த அடுத்த நொடியே, எனக்கு அந்த நூலை படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வந்தது. உடனே அதை பதிவிறக்கம் செய்து 3 நாட்களில் அதை படித்து முடித்துவிட்டேன்.

அதுபோல, இங்கே நான் பதிவிடும் சில வரிகள் உங்களை ஒருவேளை ஈர்க்கும். உடனே அந்த நாவலை நீங்களும் தேடிச்சென்று படிக்க விரும்புவீர்கள். அதனாலேயே நான் படிக்கும் நூலில் நான் இரசித்த சில வரிகளை இனி என் வலையில் பதிந்து உங்களோடு பகிரப்போகிறேன்.

இன்னொரு விடயத்தை சொல்ல மறந்தேன். இந்த நாவலை நான் தமிழில் படிப்பதை பார்த்துவிட்டு என் மனைவி கேட்டாள். ஏன் இதை தமிழில் படிக்கிறாய், ஆங்கிலத்தில் படித்தால்தான் அருமையாக இருக்கும் என்றார். அதற்கு நான் சொன்னேன், இந்த நூல் முதலில் போர்ச்சுகீசிய மொழியில்தான் வெளியானது. ஆங்கிலத்தில் ஒருவர் மொழிபெயர்த்து வெளியிட்டார். ஆங்கில நூலே மூலநூலில் இருந்து மொழியாக்க செய்யப்பட்டதுதான். எந்த மொழியில் படிக்கிறோம் என்பது முக்கியமல்ல. அந்த நூலை நான் படிக்கும்போது நம் இதயத்தோடு தொடர்பு படுத்திக்கொள்ள எந்த மொழி நமக்கு உதவுகிறதோ அந்த மொழியில் படிக்கலாம்.

உங்களில் எவருக்காவது ”The Alchemist – இரஸவாதி” நூல் தமிழில் படிக்க விரும்பினால், இணையத்தில் தேடுங்கள். தேடி கிடைக்காவிட்டால் எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும் நான் உங்களுக்கு இந்த நூலை பகிர்கிறேன்..     மி: dhineshmaya@gmail.com

* தினேஷ்மாயா *

மனித நேயம்



அமெரிக்காவில் ஒரு நபரை காவலர் ஒருவர் கொன்றதற்கு ஒட்டுமொத்த நாடும் ஒன்று சேர்ந்து போராடியது. ஆனால், இங்கே சாத்தான்குளத்தில் நடத்தப்பட்ட சிறை மரணத்திற்கு குறைந்தபட்ச எதிர்ப்பைக்கூட மக்கள் வெளிப்படுத்தாது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

என்னை நேரடியாக பாதிக்காத எந்தவொரு விடயத்திற்காகவும் நான் ஏன் போராட வேண்டும் என்கிற மனநிலையை இந்தியர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். அனைவரின் உரிமைக்காக ஒன்றிணைந்து ஒற்றுமையாய் குரக் கொடுக்க வேண்டும். 

அதுவரை, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி, மக்களை பிரித்தாளவே செய்வார்கள், அப்பாவிகளை வஞ்சிப்பார்கள்.

* தினேஷ்மாயா *

வாழ்வின் ஆதாரம் - உயிர்



“பீகாரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - செய்தி”

இதுதான் இந்தியா. 

50 பேருக்குமேல் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என்று அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்தாலும் அதை மக்கள் கேட்பதாக இல்லை. இப்படிப்பட்ட மக்களை வைத்துக்கொண்டுதான் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய தேதியில் உலகில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது இந்தியா. சுமார் 7 இலட்சம் மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். மக்களின் வாழ்வாதாரம் மிக முக்கியம். ஆனால், உயிர்தான் வாழ்வின் ஆதாரம் என்பதை இந்த மக்களும் அரசாங்கமும் என்று உணரப் போகிறார்கள் ?

* தினேஷ்மாயா *

ஆயுத எழுத்து...



சமீபத்தில் ஐதராபாத்தில் நான்கு பேரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றதை பெரும்பாலானோர் கொண்டாடினர். நீதி நிலை நாட்டப்பட்டது என்றனர். அந்த காவல்துறையினருக்கு மலர்கள் தூவி வாழ்த்தினர்.

குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்தாக வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அது சட்டப்படி கிடைத்திருக்க வேண்டும். காவல்துறையினருக்கு தண்டனை கொடுக்கும் அதிகாரம் இல்லை என்று அன்று சொன்னோம். ஆனால், அன்று காவல்துறையினரின் செயலை மெச்சிய மக்கள்தான் இன்று சாத்தான்குளத்தில் நடத்தப்பட்ட சிறை மரணத்தில் காவல்துறையினருக்கு எதிராக கொதிக்கின்றனர்.

காவல்துறையினருக்கு அதிகாரத்தோடு ஆயுதமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆயுதங்கள் மக்களை காக்க பயன்படாமல் மக்களை தாக்கவே அதிகம் பயன்படுவதால் அதிகம் பாதிப்பு அப்பாவி பொதுமக்களுக்கே..

* தினேஷ்மாயா *

வாழ்க பணநாயகம்



22-05-2018

இரண்டு ஆண்டுகள் ஆகியும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கே இன்னமும் நீதி கிடைக்கவில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் சாத்தான்குளத்தில் நடத்தப்பட்ட சிறை மரணத்துக்காக நீதியை கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

நிதி மட்டுமல்ல, நீதியும் ஏழைகளுக்கு என்றும் எட்டாக்கனியே..


வாழ்க பணநாயகம்..
வீழ்க சனநாயகம்..

* தினேஷ்மாயா *

*சோறு - சாதம்*



இந்த சொற்களுக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. நம்மில் எத்தனைப் பேர் பொதுவெளியில் சோறு என்ற சொல்லை பயன்படுத்துகிறோம். கல்யாண விருந்தில் சத்தமாக "சோறு கொண்டு வாங்க" என்று நாம் கூப்பிடுகிறோமா? கூப்பிடுவதில்லை.
காரணம், நம்மை அறியாமல் சோறு என்ற சொல்லை ஒரு தாழ்ச்சிக்குரிய ஒன்றாக மாற்றி வைத்திருக்கிறார்கள். 

நகைச்சுவைத் துணுக்குகளில், திரைப்படங்களின் நகைச்சுவைக் காட்சிகளில் பிச்சைக்காரர் கதாபாத்திரம் "அம்மா, தாயே சோறு போடு தாயீ" என்று கூறுவதாக வரும். எந்த பிச்சைக்காரராவது "அம்மா தாயே சாதம் போடுங்க" என்று வருகிறதா? 
அது ஏன்?

திட்டமிட்டுச் சோறு கீழான ஒன்றாக காட்டப்படுகிறது; சாதம் உயர்வான ஒன்றாக மாற்றப்படுகிறது. 

சோறு என்பது சங்க இலக்கிய காலத்தில் இருந்து நம்முடன்  வருகிறது.

"பெருஞ்சோற்று உதியன்" என்ற அடைமொழியுடன் புறநானூற்றில் வேந்தர்கள் வந்து போகிறார்கள். 
"வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்" என்று பாரதி பாடியுள்ளான். 

இழிவு செய்யும் இடங்களில் மறக்காமல் சோறு எனக் குறிப்பிடப்படுகிறது. "சோத்துக்கு வழியில்லாத நாயி" என்று திரைப்படங்களில் பேசப்படுவதை பார்க்கிறோம். "சாதத்துக்கு வழியில்லாத நாயி" என்று எழுதப்படுகிறதா? காரணம்? 
அதன் பின்னால் உள்ள அரசியல். 
"கல்யாண சமையல் சாதம்" என்று புகழ்ந்து பாடல் வரும்.
"எச்ச சோறு" என்று இகழ்ந்து வசனம் வரும். இதில் இருந்தே இதன் பின்னுள்ள அரசியலை புரிந்து கொள்ளலாம்.

உச்சக்கட்டமாக வீடுகளில் பிள்ளைகளை திட்ட "தண்டச் சோறு" என்ற இடம் வரை வந்து நிற்கிறது. எங்காவது "தண்ட சாதம்" என்று சொல்வதுண்டா?

சாதம் என்ற சொல், பிரசாதம் என்ற சொல்லின் விகுதி. பிரசாதம் என்பது உயர்வான ஒன்றாக பார்க்கப்படுகிறது. கோயில்களில் பூசைகளுக்குப் பிறகு வழங்கப்படும் தேங்காய் - பழம் போன்றவற்றுக்கு பிரசாதம் என்று பெயரிடப்பட்டுள்ளது. மதிப்பிற்குரிய ஒன்றாக பொது இடங்களில் பிரசாதம் பயன்படுத்தப்படுகிறது. அந்த சொல்லின் சரிபாதி சாதம் என்பது ஏதோ ஒரு நன்னாளில் பெயர்சூட்டுவிழா கண்டுள்ளது.

உணவு விடுதிகளில் புளியஞ்சோறு, எலுமிச்சைச் சோறு, தக்காளிச் சோறு என்பது இடமாறி, புளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம் என்று பட்டியல் நீள்கிறது. குழந்தைகளுக்கு பருப்புச் சோறு ஊட்டப்பட்டது போய் பருப்பு சாதம் கொடுப்பது உயர்வாக மாறி நிற்கிறது.
இதுவெறும் வடமொழிச் சொல் - தமிழ்ச் சொல் வேறுபாட்டை அறிவதற்கான பதிவல்ல. தமிழ்ச் சொற்கள் தாழ்வான ஒன்றாக நம் மனத்திலே பதிய வைத்து நம்மையே அச்சொல்லை சொல்ல முடியாமல் போகும் அளவுக்கு மாற்றுவதற்கு பின்னுள்ள அரசியலை விவரிக்கும் பதிவே.

தாய்மொழியில் பேசவும் முடியாத ஒருவன், எப்படி தாய்மொழிக்காக சிந்திக்க செய்வான்? சாதம் என்பதற்கு பதிலாக சோறு என்பதையே பயன்படுத்துவோம்.

Shared from Twitter id: @RAKESH48763046
  
* தினேஷ்மாயா * 

விழிப்புணர்வுடன் இருப்போம்

Sunday, June 07, 2020



இந்த கொடிய கொரோனாவால் உயிரிழப்பு அதிகமாகி கொத்து கொத்தாக மக்கள் மடியும் நேரம் வந்தால், இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் சவப்பெட்டிகளை உற்பத்தி செய்யும் தொழிலை கையில் எடுத்துக்கொள்வார்கள்.

அவர்களுக்கு எப்போதும் சந்தை தங்கள் கைகளிலேயே இருக்க வேண்டும் என்பதே ஒரே குறிக்கோள். சில நேரங்களில் எது தேவையோ அதை சந்தைப்படுத்துவார்கள், அல்லது செயற்கையாக ஒரு தேவையை உருவாக்கிவிடுவார்கள்.

மக்கள்மீது அக்கறை ஏதுமின்றி சந்தை பொருளாதாரம் என்று முன்னிலைப் பெற்றதோ அன்றே நமக்கான சவக்குழிகளை இந்த கார்ப்பரேட்கள் தோண்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

அதில் விழுவதை கூடுமானவரை தவிர்ப்பதே நமது தலையாய கடமை..

இதைப்பற்றி விரிவாக மற்றொரு பதிவில் எழுதுகிறேன்.

* தினேஷ்மாயா *

உன் உயிர் உன் கையில்



செய்தி:  உணவகங்களில் பார்சல் வாங்க வருபவர்களும், உணவு அருந்த வருபவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

என் கேள்வி : சாப்பிடும்போது எப்படி முகக்கவசம் அணிந்திருக்க முடியும் ? குறைந்தது பத்து அல்லது இருபது நிமிடமாவது முகக்கவசம் தவித்தாக வேண்டும். அது ஆபத்தில்லையா ?

மக்கள் வாழ்வாதாரத்தைப் பற்றி கவலைப்படும் அரசாங்கம், மக்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாதது ஏன் ?

உன் வாழ்க்கை மட்டுமல்ல, உன் உயிரும் உன் கையில்தான் இருக்கிறது..

தன்னம்பிக்கையோடு இருப்போம்.. விலகி இருப்போம்..

* தினேஷ்மாயா *


வாழ்க்கையின் முரண்


அவனிடம் வம்பு வைத்துக்கொள்ளாதே. அவன் எது சொன்னாலும் அப்படியே நடந்துவிடும். அவன் என்ன நினைத்தாலும் அது அப்படியே நடந்துவிடும். நமக்கேன் வம்பு. அவனிடமிருந்து கொஞ்சம் தள்ளியே இருப்போம்.

இப்படி ஒரு சிலர் பேச நாம் கேட்டிருப்போம்.

இதுபோல சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எது சொன்னாலும், எது நினைத்தாலும் அப்படியே நடந்துவிடும். கருநாக்கு உடையவன் என்றெல்லாம் சொல்வார்கள்.

எனக்கிருக்கும் ஒரே கேள்வி என்னவென்றால். இப்படி ஒரு அறிய சக்தி இருக்கும் இவர்கள், ஏன் அதை நல்ல விடயத்திற்கு பயன்படுத்தாமல் இருக்கிறார்கள். ஏன் எப்போதும் நல்லதையே நினைத்துக்கொண்டும் நல்லவற்றையே சொல்லிக்கொண்டும் இருக்கலாமே.

இதுதானோ வாழ்க்கையின் முரண் ??

* தினேஷ்மாயா *

எங்கள் ஊர் FRCS

Friday, June 05, 2020




அவள் புத்தகம் படித்து பார்த்ததில்லை. அவளுக்கு படிக்கவும் தெரிந்ததில்லை. ஆனால், அவள் சொல்லும் செய்தி எந்த புத்தகத்திலும் வந்ததில்லை. அவள் சொல்லும் ஒவ்வொரு தகவலும் ஆச்சரியமூட்டும். அத்தனையும் உண்மையாக இருக்கும்.

தலைவலிக்குது என்று சென்றால் ஆயிரம் பரிசோதனைகளை செய்துவிட்டு ஒன்றுமில்லை இதை சாப்பிடு சரியாகிடும் என்று நான்கு சத்து மாத்திரைகளை கொடுத்தனுப்பும் மருத்துவர்களுக்கிடையே, பள்ளிக்கூடமே போகாமல், கை வைத்தியத்தால் எங்கள் குடும்பம் மட்டுமல்ல, ஊரில் பலர குடும்பங்களுக்கு வைத்தியம் பார்க்கும் எங்கள் ஊர் FRCS அவள்.

முன் குறிப்பு: நான் அவள் பேரன்தான். 
அவள் சிறு வயதில் தென்னை மரம் ஏறுவாள். நீச்சல் அடிப்பாள்.
பின்குறிப்பு. இவையிரண்டும் எனக்கு இன்றுவரை தெரியாது.

சிறுசேமிப்பு என்றாலும் அதில் தெரியும் அவளின் பொருளாதார ஆளுமை. தண்ணீரையும் காசு போலவே சிக்கனமாய் செலவு செய்ய சொல்லிக்கொடுத்தவள்.

அவள் போடும் காபியின் சுவையை இன்றுவரை வேறெங்கும் சுவைத்ததில்லை.

அவள் வைக்கும் கறிக்குழம்பிற்கு இந்திய புவிசார் குறியீடே கொடுக்கலாம்.

சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், துக்கம் நெஞ்சை அடைக்கை வார்த்தைகளும் அடைப்பட்டுப் போகிறது.

இறப்பு எல்லோருக்கும் வருவதுதான். எனக்கும் வரும். உங்களுக்கும் வரும். ஆனால், நம் மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு அது வரும்போதுதான் இதுவரை நாம் கற்ற தத்துவங்கள் மண்ணோடு புதைந்துவிடுகிறது – அவளைப்போல !


* தினேஷ்மாயா *

கலப்படமில்லாத பேரன்பு




எலேய்.. எந்திரிச்சு வெறும் வயிரா கிடக்க. எதாச்சும் குடி..

நல்லா அள்ளி தின்னு. அப்பத்தான் குடலு பெருசாகும். இப்படி கம்மியா அள்ளி தின்னா எப்பிடி?

வெயில்ல வெளியே போகாதடா.. உச்சி வெயிலு.. ஒடம்புக்கு ஆகாது..

என்னடா சுருண்டு உக்காந்திருக்க. கால் வலியா. ஏண்டி அந்த வெளக்கெண்ணய்ய எடுத்துனு வா. சுளுக்கு கிளுக்கு பிடிச்சிருக்கும்.. நீவி விட்டா சரியாயிரும்..

எத்துக்குடா ஆஸ்பத்திரி போற. செத்த இரு. மாமன அனுப்பி ஆத்துல நண்டு பிடிச்சார சொல்றேன். ஆவி புடிச்சுட்டு நண்டு ரசம் தின்னா சளி பறந்துரும்..

இந்தா பிடி.. ஆயாகிட்ட 40 ரூவாதான் கன்னு இருக்கு. கைசெலவுக்கு வெச்சுக்கோ ..

இப்படி இன்னும் ஏராளம் ஏராளம்.. இந்த கலப்படமில்லாத பேரன்பு, அவளுடன் சேர்த்தே புதைக்கப்பட்டது அந்த சுடுகாட்டில்..

என் பாட்டி இறந்தாள், என் நினைவில் வளர்ந்தாள் !!


* தினேஷ்மாயா *

இடப்பெயர்ச்சி




ஓரிடத்தில் வளர்ந்த செடியை பிடுங்கி வேறொரு இடத்தில் நட்டுவைத்தால் அது செழிப்பாக வளரும் என்பதில் நிச்சயம் இல்லை. அது இருக்கும் இடத்திலேயே விட்டிருந்தால் தனக்கான நீரை தானே எப்படியாவது தேடிக்கொண்டிருக்கும், அல்லது நீரின்றி வெயிலில் வாடி இறந்திருக்கும். அதை வேறொரு இடத்திற்கு மாற்றுவதால், அதன் வேர் மயிர்களில் உள்ள அதன் உயிர் பாதி பிரிந்துவிடுகிறது. வேரறுப்பது என்பது இதுதானோ !?

அப்படி வேரறுக்கப்பட்டு வேறொரு இடத்தில் நடப்பட்ட செடிகள் நன்றாக வளர ஒரு கைப்பிடி மண்ணை அது வளர்ந்த இடத்தில் இருந்து எடுத்துவந்து புது இடத்தில் போடுவார்கள்.
ஒரு செடிக்கு இத்தனை செய்கிறோம்.

ஆனால், தன் தாய்நாட்டை விட்டு அகதிகளாய் வெளியேறும் மக்களுக்காக யார் என்ன செய்கிறார்கள் ? அவர்களை வேற்றுகிரக மனிதர்களைப் போல் பார்ப்பது ஒன்றைத்தவிர !?

* தினேஷ்மாயா *


மாயநதி !



           
  ஒரு நதியின் மரணத்தில்தான் கடலில் பிறப்பு இருக்கிறது. மனம் என்னும் மாயநதியை அணைக்கட்டி வைக்காமல், அதை இந்த பிரபஞ்சம் என்னும் பெருங்கடலோடு கலக்கவிடுவோம். அப்பெருங்கடலில் மூழ்கிப்போவோம்.


* தினேஷ்மாயா *

அதுக எங்கிட்டுப் போகும்?



வௌஞ்ச வெள்ளாமைய வேடிக்கை பார்கிறதவிட வெதச்சவனுக்கு வேற என்ன சொகம்.

சாமி எங்கேயோவா இருக்கு... இந்த வெள்ளாமக் காட்ல தான் இருக்கு!

இந்த காக்கா குருவிகமட்டும் இல்லாட்டி, காட்டுக்கே ஒரு கலகலப்பு வந்திருக்காது. தட்டைச்சிட்டுக சோளக் கருதக் கொத்தித் திங்கிறதே ஒரு அழகுதான். கொத்திட்டுப் போகுதுக பாவம்! வெவசாயம் பண்றது காக்கா குருவிக்கும் சேத்துத்தான்! நம்மளும் வெரட்டிட்டா அதுக எங்கிட்டுப் போகும்?

- வைரமுத்து அவர்களின்  “கள்ளிக்காட்டு இதிகாசம்” நூலில் இருந்து..

* தினேஷ்மாயா *