நான் என் முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன். கள்ளிக்காட்டு
இதிகாசம் நூலைப்பற்றி.
என் அலுவலக நண்பர் ஒருவர் ஒரு குறுஞ்செய்தியை பகிர்ந்தார்.
முதலில் அந்த பதிவை இங்கே உங்களுடன் பகிர்கிறேன்.
“வௌஞ்ச வெள்ளாமைய
வேடிக்கை பார்கிறதவிட வெதச்சவனுக்கு வேற என்ன சொகம்.
சாமி எங்கேயோவா
இருக்கு... இந்த வெள்ளாமக் காட்ல தான் இருக்கு!
இந்த காக்கா குருவிகமட்டும்
இல்லாட்டி, காட்டுக்கே ஒரு கலகலப்பு வந்திருக்காது. தட்டைச்சிட்டுக சோளக் கருதக் கொத்தித்
திங்கிறதே ஒரு அழகுதான். கொத்திட்டுப் போகுதுக பாவம்! வெவசாயம் பண்றது காக்கா குருவிக்கும்
சேத்துத்தான்! நம்மளும் வெரட்டிட்டா அதுக எங்கிட்டுப் போகும்?
-கள்ளிக்காட்டு
இதிகாசம்.”
இந்த வரிகள்தாம் அவை. இந்த வரிகளை படித்த அடுத்த நொடியே என்
மனதில் இந்த புத்தகம் குடிசைப்போட்டு அமர்ந்துவிட்டது. உடனேயே இந்த நூலை பதிவிறக்கம்
செய்து படிக்கத் துவங்கினேன்.
மொத்தம் 36 அத்தியாயங்கள் இருக்கிறது. ஒவ்வொரு அத்தியாத்தை
படிக்கும்போது என்னை கவர்ந்த வரிகளையும், அதை படிக்கையில் என் மனதில் எழும் எண்ணங்களையும் குறிப்புகளாய் எடுத்துக்கொண்டே வந்தேன்.
ஆனால், 31-ம் அத்தியாயம்வரை மட்டுமே என்னால் குறிப்புகள்
எடுக்க முடிந்தது. மீதமுள்ள அத்தியாயங்களை படிக்கும்போது குறிப்புகள் எடுக்கும் மனம்
இல்லை. அந்த கதையில் நான் மூழ்கிப்போயிருந்தேன். குறிப்புகள் எடுக்க மூலையின் உதவி
தேவை. ஆனால் இந்த நூலை நான் கண் கொண்டும் இதயம் கொண்டும் படித்துக் கொண்டிருந்தமையால்,
மூலையின் உதவி தேவை படவில்லை.
இந்த நூலை படித்து முடிக்கையில் அந்த கள்ளிக்காட்டு வாசம்
என் முகத்தில் பளீரென்று வந்து அடித்தது.
மனிதன் எதை எதையோ கண்டுபிடித்திருக்கிறான். ஆனால், அவனால்
சில விடயங்களை இன்னும் கைகொள்ள முடியவில்லை. அதில் ஒன்று, ஒரு வாசத்தை பதிவு செய்து
மீண்டும் அதே வாசனையை வேறொரு இடத்தில் உருவாக்குவது. புகைப்படம் என்பது ஒளியை கைது
செய்து தேவைப்படும் போது வெளியிடுவது. ஆனால், வாசனையை பதிவு செய்யவோ, வேறொரு சமயத்தில்
அதே வாசனையை மீட்டுருவாக்கம் செய்யவோ மனிதன் இன்னமும் கற்றிருக்கவில்லை.
ஆனால், அந்த கள்ளிக்காடுகளுக்கே உரிய ஒரு அழகான நெடியை இந்த
நூலில் என்னால் நுகரமுடிந்தது. அந்த கள்ளிக்காட்டின் வாசத்தை வார்த்தைகளால் கைது செய்து
நமக்கும் அதை கடத்தியிருக்கிறார் ஆசிரியர். இந்த நாவலுக்கு 2003-ம் ஆண்டின் சாகித்திய
அகாதெமி விருது கிடைத்தது.
நான் எப்போதும் ஒரு நூலை படித்துவிட்டு அந்த நூலை திறனாய்வு
செய்ய மாட்டேன். அது திரைப்படமாக இருந்தாலும் சரி, வேறெந்த ஒரு கலை வடிவமாக இருந்தாலும்
சரி, அதை விமர்சனம் செய்யவோ அல்லது திறனாய்வு செய்யவோ நான் விரும்பமாட்டேன். அதை இரசிக்கவே
விரும்புவேன். நான் விரும்பியவற்றை உங்களுடன் பகிர்கிறேன். என் வலைப்பக்க வாசகர்களில்
இதுவரை இந்த நூலை படித்திராதவர்கள் உண்டென்றால்
நிச்சயம் இந்த நூலை படிக்கும்படி கோரிக்கை விடுக்கிறேன்.
இதோ… அந்த கள்ளிக்காட்டின் வாசத்தை இங்கே பகிர்கிறேன். நீங்களும்
நுகருங்கள்…
- Ø
1: - பேயத்தேவரும்,
மொக்கராசுவும் – தேவர் பசுவுக்கு வைத்தியம் பார்க்கிறார்
- Ø மண்ணுதான் சாப்பாடு, மண்ணுதான் மருந்து நம்மளுக்கு
- Ø மவுனம்
பேசினான்.
- Ø மவுனம்
சம்மதம் என்பதெல்லாம் ஏடு போட்டவர்கள் செய்த இலக்கணம். மவுனம் என்பது ஒரு கேள்வி.
- Ø (விடைத்தெரியாதவர்கள்
கேள்வி கேட்டவரை திருப்பிக் கேட்கும் ஒரு கேள்வியே மவுனம்)
- Ø தை ஒழவு
அய்யாட்டுக் கெட
- Ø அந்தரங்க சுத்தி ! J
- Ø உப்பு?
அந்த ஆடம்பரத்துக்கு அங்கெங்கே போவது ?
- Ø 2: செல்லத்தாயி
வந்திருக்கிறாள்
- Ø இயற்கைதான்
மனிதனின் ஆசான். தன் இருப்பு அசைவு இரண்டிலும் அறிவு போதிக்கிறது அது.
- Ø வானமும்
பூமியும் பாடம் நடத்திக்கொண்டேயிருக்கிறது. புத்தியுள்ளவன் புரிந்து கொள்கிறான். வலியுள்ளவன்
அறிந்துகொள்கிறான்.
- Ø மனிதனின்
படைப்பென்று பூமியில் எதுவுமில்லை. மனிதன் கண்டுபிடிப்பாளனே தவிர படைப்பாளி இல்லை.
- Ø வானம்பார்த்த
சொட்டையன் கம்போடு சேர்த்து மூன்றுகை உயர்த்தினான்.
- Ø ஒரு
மாடு குடும்பங்காக்கும், ஒன்பது மாடு குலங்காக்கும்.
- Ø எல்லா
வாசனையையும் விட கெட்டவாசனை மனுசவாசனைதான். அத எந்தத் தண்ணில கழுவுவ? போடா போடா போக்கத்த
பயலே.
- Ø 3: செல்லத்தாயியின்
குணங்கள்
- Ø சகிக்கமுடியாத
அவலட்சணமுமில்லை. வியக்கமுடிந்த அழகுமில்லை.
- Ø பிறந்ததேதி
குறித்து வைக்கும் மேட்டுக்குடித் தனமெல்லாம் தெரியாது அவர்களுக்கு.
- Ø தக்காளிக்கூடை
ஓரணாவிற்கு விற்ற ஓர் அடைமழைக் காலத்தில் அவள் பிறந்ததாய் ஞாபகம் பேயத்தேவருக்கு.
- Ø ஈரமும்
உண்டு அவளுக்கு. நெருப்பென்று தள்ளவும் முடியாது. இனிப்பென்று கொள்ளவும் முடியாது.
- Ø ஒரு
பானை வெந்நீருக்கு ஒரு சொம்பு பதம்.
- Ø கிராமத்து
இரவு ஆழமானது. நிஜமான நிசப்தம் நிலவுவது. பகலெல்லாம் தேய்ந்தவர்கள், பன்னிரெண்டு மணி
நேரம் உழைத்தவர்கள், பகல் தூக்கத்தை தரித்திரமென்று சபிப்பவர்கள், இரவில் முற்றும்
மறந்து தூங்குவார்கள் மூச்சுவிடும் பிணங்களாய்.
- Ø கிளைகளோடு
காரசாரமாக விவாதிக்கும் காற்றின் பேரோசை
- Ø மௌனத்தின்
கர்ப்பப்பைதான் கிராமத்தின் இரவு.
- Ø 4,5:
செல்லத்தாயியின் மறுமணம், மொக்கராசுவின் வேதனை
- Ø புயல்
வந்து கேள்விகேட்டால் பூவரசஞ் சருகு என்ன சொல்லும்?
- Ø மனிதனுக்கு
மனிதர்கள் மட்டுமே தேவை என்பது இரண்டு பருவத்தில். ஒன்று வாழத்தெரியாத இளம்பருவம்.
இன்னொன்று வாழ்ந்து முடிந்த முதுபருவம். இரண்டிலும் தனிமைப் படுத்தப்படுவதுதான் வாழ்வின்
சாபம்.
- Ø வாழ்க்கை
வெறுத்துப்போன மனிதர்கள் கடைசியாய் தண்ணீர் குடிப்பது அந்த கண்மாயில்தான்.
- Ø தற்கொலையின்
முன் நிமிஷம் வரைக்கும்கூட மனிதனுக்கு சுகம் வேண்டியிருக்கிறது.
- Ø 6,7:
சின்னு - தேவரின் வீட்டின் முன் வந்து கத்துகிறான். சின்னுவின் குணங்கள்.
- Ø ஒரு
வீட்டில் கோழிச்சாறு கொதிப்பதே ஒரு கவுரவம்தான்.
- Ø வேப்பமர
இலையில் இருந்து தங்கம் வழிந்தது.
- Ø நண்டோட
நெல் நடனும்
- Ø நரியோட
கரும்பு நடனும்
- Ø வண்டியோட
வாழை நடனும்
- Ø தேரோட
தென்னை நடனும்
- Ø கல்யாணம்
என்பது இன்னொரு உயிரின் மனசு – உடம்பு – வயிறு மூன்றையும் திருப்தி செய்வது
- Ø 8: செல்லத்தாயி
பெண்பிள்ளை பெற்றெடுக்கிறாள்.
- Ø மண்ணுந்
தண்ணியுந் தாண்டா குடியானவன் கும்புடுற சாமி
- Ø மிளகாய்ச்செடி
காய்க்க எழுபது நாள் ஆகும். வாரம் ஒரு தண்ணீர் கட்டி, மாதமொருமுறை களையெடுக்க வேண்டும்.
- Ø சீட்டு,
தாயம் மட்டுமல்ல – விவசாயமும் ஒரு சூதாட்டம்தான். ஆட்டக்காரர்களில் எவனோ ஒருவன் தான்
ஜெயிக்கிறான்.
- Ø மூணு
தைப்பொங்கல் கண்டு நைந்துப்போன வேட்டி.
- Ø ஒடம்புல
உசிர் இருக்கு.. ஒழைக்கத் தெம்பிருக்கு… உச்சில சாமி இருக்கு..
- Ø 9,
10: நாயக்கரிடம் பணம் வாங்க செல்கிறார் தேவர். அழகம்மாள் இறக்கிறாள். பணம் வாங்காமல்,
நாயக்கருடன் ஊருக்கு வந்து சேர்கிறார் தேவர்.
- Ø நாங்க
என்ன உங்கள மாதிரி நகத்துல அழுக்கு ஒட்டாத வேலையா செஞ்சிட்டு இருக்கோம்.
- Ø மாறிவரும்
சமூகத்தில் மணவாழ்க்கை என்பது ஆணால் கிட்டும் சௌகரியங்களை பெண்ணும், பெண்ணால் கிட்டும்
சௌகரியங்களை ஆணும் சட்டப்படி திருடிக்கொள்ளும் சம்பிரதாயமாக இருக்கிறது.
- Ø முழுச்சட்டியில்
கஞ்சியிருந்தா மூடிவைக்க தெரியாது. ஊர் ஆளுகள கூப்பிட்டு ஊட்டி விடும்யா.
- Ø குழம்புவெச்ச
பிறகும் மீனு குட்டிகிட்டி போடுமா?
- Ø கையில்
கணவன் பெயர் பச்சைக்குத்தி அந்த கையையே தலையணையாய் வைத்து தூங்குவாள்.
- Ø 11:
அழகம்மாளின் இறுதிச்சடங்கு.
- Ø எல்லோரும்
தங்கள் சோகங்களையும் கூட்டிக்கொண்டு வெளியேறினார்கள்.
- Ø தன்
உடம்பையும் உசுரையும் அந்த கைத்தடிக்கு மாற்றி ஓசையில்லாமல் ஊர்ந்தார்.
- Ø தலைமாட்டில்
வைக்கும் ஊதுவத்தி, குளித்த பிணத்தைவிட குளிக்காத பிணங்களின் கெட்டவாடையைத்தான் விரட்டுகிறது.
- Ø பிறந்தபோது
குளிப்பாட்டுவதும் சீவாத்மாக்களுக்கு தெரிவதில்லை. இறந்தபிறகு குளிப்பாட்டுவதும் பரமாத்மாக்களுக்கு
தெரிவதில்லை.
- Ø திரும்பி
நின்னு தேரழகு பார்த்தா நானே ஏறிப்படுக்கலாம் போலிருக்கு. (தொழில் நேர்த்தி, தொழில்
சுத்தம்)
- Ø ”போடியம்மா
போ ! பின்னாலயே வாரேன் போ !” – பேயத்தேவர்.
- Ø 12:
புளியமரத்திற்காக மாட்டை பறிகொடுத்தார் பேயத்தேவர் – சின்னுவின் செயலால்.
- Ø பெற்றவர்கள்
மறைந்துப்போக, உடன்பிறந்தவர்கள் அவரவர் பிழைப்புத்தேடி ஒதுங்கிப்போக, நல்லது கெட்டதுக்கு
மட்டுமே சுற்றங்கள் வந்து சூழ்ந்து விலகிப்போக, பெற்று வளர்த்த பிள்ளைகள் “கெழவன் கெழவி செத்தாச் சொல்லிவிடுங்க” என்று கண்ணுக்குத்
தெரியாத தங்கள் இன்னொரு தொப்பூழ்க் கொடியையும் அறுத்துக் கொண்டோட, உடம்பிலுள்ள உறுப்புகள்
ஒவ்வொன்றாய் “ஆளவிடு சாமி” என்று அதனதன் செயல்பாட்டை நிறுத்திக்கொள்ளும்போது மனைவியின்
மடிசாய்கிறான் கணவன். கணவனின் மடிசாய்கிறாள் மனைவி.. (கணவன் மனைவி உறவினை மிக அழகாக ஆழமாக உரித்துக்காட்டி
இருக்கிறார்)
- Ø மனசும்
ஒரு சுடுகாடுதான். நினைவு வந்து இத்தன பேயாட்டம் ஆடுதே.
- Ø 13:
கவர்ந்து சென்ற மாடுகளின் நினைவுகள், மாடுகள் தேவரிடம் ஓடி வந்துவிடுகிறது.
- Ø இந்த
அடி அடிச்சதுக்கு அந்த மாடு நீ மனுசந்தானான்னு பார்வையால கூட ஒரு கேள்வி கேக்கலையே
!
- Ø 14:
மாடு பஞ்சாயத்து – ஊரே காசுப்போட்டு மாட்டை மீட்டுக்கொடுத்தது.
- Ø தவணைமுறையில்
விடிந்துக்கொண்டிருந்தது வானம்.
- Ø எந்த
காசிலும் சாதி ஒட்டியிருக்கவில்லை.
- Ø 15:
பேயத்தேவரின் முன்னோர்கள் வாழ்ந்த ஊரின் கதை. முத்துக்கண்ணியின் கதை
- Ø 16:
சீனு சாராயம் காய்ச்ச ஆரம்பித்தான். அவன் திருட்டு சாமர்த்தியம் பற்றி பேசுகிறது இந்த
அத்தியாயம்.
- Ø தொட்டா
ஒட்டிக்கிற மாதிரி இருட்டு
- Ø 17:
சீனு சாராயம் காச, மோக்கராசுவிடம் மனுச எலும்பு எடுத்துவர கேட்கிறான். முத்தாலம்மன்
கோயில் திருவிழா.
- Ø 18:
எலும்புக்காக வெட்டியான் தொத்தனிடம் கேட்டு, அங்கே நடப்பவற்றை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
- Ø மனுச
வாழ்க்கையில் நல்ல இடம் சுடுகாடுதான். மனசு மட்டுப்படுவது அங்கேதான்.
- Ø செத்துப்போனவனுக்கு
நிரந்தரமான நிம்மதியும், வீடு திரும்புறவனுக்கு கொஞ்சம் ஞானமும் தரும் உலகின் பழைய
பள்ளிக்கூடம் அது.
- Ø மனுசன
எரிக்கிறது எப்படின்னு தொத்தன் ஒண்ணும் மனுசாஸ்திரம் படிக்கலை. தீ வைக்கிறது எப்படினு
திருக்குறள்லயும் சொல்லல. எல்லாம் வழிவழியா வந்த அனுபவம்தான்.
- Ø ஒம்போது
ஓட்ட கொண்ட தேகத்தை எரிக்க நாலு ஓட்டைப்போதும். நெஞ்சாங்குழி, வயிறு, இரண்டு முழங்கால்.
- Ø சுடுகாட்ட
ஏன் வடக்கா வச்சாகன்னா, நம்மூர்ல தெக்கு வடக்காத்தான காத்தடிக்கிறது வழக்கம். பொணம்
வேகிற பொக ஊருக்குள்ள வராம அப்படியே ஓடிப்போகட்டும்னுதான் வடக்க வச்சிருக்காக சுடுகாட்ட.
- Ø அவுக
அவுக நெஞ்சுக்கூட்ல என்ன நெனப்புல சாகுறாகளோ, அதப் பொறுத்துதான் வேகுறதும் வேகாததும்.
- Ø 19:
அழகம்மாளின் சேலை சலவைக்கு தரப்பட்டதால் அதை மீட்க தேவர் செல்கிறார்.
- Ø குடல்
தொங்கி சரிந்துக்கிடந்த கயித்துக்கட்டில் !
- Ø ராசாவுக்கு
கிரீடம் மாதிரி அவள் சீல என் தலைக்கு.
- Ø 20:
வெள்ளாமை வெளஞ்சிருக்கு. அத ரசிச்சிட்டு இருக்கார் தேவர். அவரின் இரண்டாவது மகள் மின்னலு
வாழ்விழந்து வருகிறாள்.
- Ø லாந்தரின்
வயசான வெளிச்சத்தில்.
- Ø வெவசாயம்
பண்றது காக்கா குருவிக்கும் சேர்த்துதான். நம்மளும் வெரட்டிட்டா அதுக எங்க போகும் பாவம்.
- Ø 21:
கருத்தக்கண்ணன் சூத்தப்பல்லானை வெட்டிவிடுகிறான்.
- Ø மாமியாருக்கு
குடுக்குற மரியாதையை பூனைக்குட்டிக்கும் கொடுப்பா. ரெண்டு சீவன்களுக்கும் ஒரே தட்டு;
ஒரே கஞ்சி.
- Ø பாதாளத்துல
கெடக்கோம். இதுக்கு கீழ விழ எடமில்லே.
- Ø இந்த
மஞ்சகெழங்கு மட்டும் இல்லனா தாலி கயித்துக்கு என்ன பண்ணியிருப்பாகளோ பொம்பளைக?
- Ø 22:
முருகாயியை இரு மகள்களும் வீட்டைவிட்டு துரத்துகிறார்கள்.
- Ø கடவுளுக்கு
காது கேக்காம இருந்திருக்கலாம். அல்லது இங்க பகல் அங்க ராத்திரியா இருந்திருக்கலாம்.
ஒண்ணும் நடக்கல.
- Ø தல குளுந்துருக்கணும்
பாதம் சூடாயிருக்கனும். அதான் நல்ல மனுச உடம்பு.
- Ø நான்
முந்தி செத்தா நீ தூக்கிப்போடணும். நீ முந்தி செத்தா நான் தூக்கிப்போடணும்.
- Ø 23,
24, 25: தேவருக்கும் முருகாயிக்குமான உறவு.
- Ø மனசு
நாலா பக்கமும் திரும்புது. முதுகத் திருப்ப முடியல.
- Ø நாலு
கால் மனசு
- Ø சுடுகாட்டை
கடக்கிறவன் தன் பயத்தை மறக்க சத்தம்போட்டுக்கொண்டே நடப்பதுபோல, தம் குறைகளை மறைக்க
அடுத்தவர்களின் குறைகளையே அசைபோடுகிறது மனுசக் கூட்டம்.
- Ø அவ உருவம்
வட்டமா குறைஞ்சு, புள்ளியா தேஞ்சு, கடைசியா கண்ணவிட்டு கரைஞ்சு காணாமப் போச்சு.
- Ø 26:
சின்னுவை கரைசேர்க்க தேவர் நாயக்கரிடம் பணம் கேட்க செல்கிறார். பணம் வாங்கி திரும்ப
வந்தார். வண்டி நாயக்கர் இறந்துவிடுகிறார்.
- Ø ஒரு
மனுஷன் தானா ஒண்ணுக்கு போறவரைக்கும்தான் இருக்கனும். இடுப்புத் துணிய தானா கட்டிக்குற
காலம் வரைக்குந்தான் உசுரோட இருக்கனும். என் கையை தூக்கிவிட இன்னொரு கை வேணுங்கிறப்ப
நான் இருந்தா என்ன? போனா என்ன ?
- Ø 27:
தேவர் தன் ஊரடி தோட்டத்தை நாயக்கரின் வப்பாட்டிக்கு எழுதித்தர வற்புறுத்தப்படுகிறார்.
அவரும் கைநாட்டிக்கொடுக்கிறார்.
- Ø 28:
மொக்கராசுக்கு மார்க்க கல்யாணம். மொய்ப்பணத்தை சின்னு எடுத்துக்கொண்டு சென்றுவிடுகிறான்.
- Ø நாக்கும்
மனசும் செத்து கெடக்கிறப்ப ருசி எப்படி தெரியும்?
- Ø ஆள்
செத்துப்போனா மண்ணுக்குள்ள போயிரலாம். மண்ணு இல்லேன்னு போனா ஆளா சாக முடியும்?
- Ø 29:
கிணறு வெட்டுகிறார். மின்னலு பெண் கிணற்று வெடியில் இறக்கிறாள்
- Ø உடம்பு
செத்துப்போனா மண்ணுக்குள்ள புதைக்கிறோம். இல்ல எரிக்கிறோம். மனசு செத்துப்போனா அவன்
அவன் அத உடம்புக்குள்ளயே புதைச்சுக்கிறான்.
- Ø 30:
கிணற்றில் தண்ணீர் வந்து, வெள்ளாம வெளெஞ்சு. நிலத்தை அளவெடுக்க அதிகாரிகள் வந்திருக்கிறார்கள்.
- Ø 31.
அணை கட்டும் படலம்
- Ø நாங்க
பாம்புக்குக்கூட பால் ஊத்துற சாதி.
- Ø சாவு
நாளைக்கு வருதுன்னு தெரிஞ்சாலும் மூச்சு விடுறத இன்னைக்கு நிறுத்திடறோமா என்ன ?
இன்னமும் 5 அத்தியாயங்கள் இருக்கிறது. அதை படிக்கையில் குறிப்பேதும்
எடுக்கவில்லை. அதற்கான காரணம் முன்னரே கூறிவிட்டேன்.
ஒவ்வொரு அத்தியாத்திலும் நான் இரசித்த வரிகளை இங்கே பதிவு
செய்கிறேன். இந்த வரிகளை படிக்கும் ஒவ்வொருமுறையும் மனது ஏதோ செய்கிறது. இனம் புரியாத
ஒருவித உணர்வு ஏற்படுகிறது. யாருக்குத் தெரியும்? இதுப்போன்ற ஒரு சந்தர்ப்பத்தை எதிர்கொண்டு
அதிலிருந்து பிழைப்புக்காக ஊர்விட்டு வேறு ஊர் வந்து சேர்ந்த என் பாட்டனோ, பூட்டனோ
இந்த நாவலை நான் படிக்கும்போது என்னுடன் சேர்ந்து என் உயிரணுக்கள் வாயிலாக அவர்களும்
இந்த நாவலை படித்திருக்கலாம். அதனாலோ என்னவோ இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கும் வலியை
என்னாலும் உணரமுடிகிறது.
வைரமுத்து அவர்களை கவிப்பேரரசு என்று அழைப்பதில் குற்றமும்
இல்லை குறையுமில்லை. அந்த அடைமொழிக்கு அத்தனை பொருத்தம் வாய்ந்தவர் அவர் என்பதை இந்த
ஒரு நாவல் உணர்த்திவிட்டது எனக்கு.
இயன்றால் இந்த நூலை வாங்கிப்படியுங்கள், அல்லது இணையத்தில்
இருக்கிறது. பதிவிறக்கம் செய்து படியுங்கள். புத்தகம் தேடியும் கிடைக்காதவர்கள் என்னை
அணுகலாம். நான் பகிர்கிறேன்.
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment