நீரின்றி அமையாது உலகு

Tuesday, July 07, 2020



நீரின்றி அமையாது உலகு என்கிறார் வள்ளுவர். கடவுள் வாழ்த்து அதிகாரத்திற்கு அடுத்து வான் சிறப்பு என்னும் அதிகாரம் வைக்கப்பட்டுள்ளது. இறைவனுக்கு அடுத்து வான் மழையே உயர்ந்ததாக கருதப்படுகிறது என்பதற்கு இதுவே ஒரு சிறந்த சான்று.

நீரில் இருந்துதான் உலகின் முதல் ஒற்றை செல் உயிரினம் தோன்றியது என்பதை அனைவரும் அறிந்ததே. நீரில்தான் உயிர் வளர தேவையான அமினோ அமிலங்களும், பிராண வாயுவும் இருப்பதை அறிவியல் உறுதிசெய்திருக்கிறது.

இந்த உலகமே முக்கால்வாசி நீரினால் சூழப்பட்டதே. நம் ஆதி தமிழர்கள் நீரினை கடவுளாகப் பார்த்தனர். பெண்களை தெய்வமாக வழிப்பட்ட நம் சமூகத்தினர், ஆறுகளுக்கு பெண்ணின் பெயரை வைத்து மகிழ்ந்தனர். காவிரி, கங்கை, கோதாவரி, யமுனை என்றெல்லாம் பெயர் சூட்டியுள்ளனர். காவிரித்தாய், கங்கைத்தாய் என்றெல்லாம் ஆற்றை தாயுடன் சமமாக பார்த்தனர்.

ஆனால், இன்று இந்த ஆறுகளின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை அந்த ஆற்றங்கரையில் வசிக்கும் மக்களைக் கேட்டால்தான் தெரியும். உலகமயமாக்கல் என்னும் பெயராலும், முதலாளித்துவ பொருளாதாரத்தாலும் பல தொழிற்சாலைகளை இந்த ஆற்றின் ஓரங்களில் அமைத்து, தத்தம் கழிவுகளை இந்த ஆறுகளில் கலக்கின்றனர். திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுகளின் பிரச்சனையை அங்கே வசிக்கும் மக்களிடம் கேளுங்கள். கங்கையில் கலக்கப்படும் கழிவுகளால் நீரின் தன்மை மாசுப்பட்டிருப்பதை பல அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கிறது.

இந்த மாசினால், விவசாயத்திற்கு செல்லும் இந்த மாசடைந்த நீர், விவசாய நிலத்தையும், மண்ணையும் பாழ்படுத்துகிறது. ஆற்றின் நீரை குடிநீருக்காக நம்பியிருக்கும் மக்கள் பல நோய்களுக்கு ஆளாகின்றனர். இதெல்லாம் விட, மழை குறைந்து ஆற்றில் நீர்வரத்து குறைந்தால் ஆற்றில் மணலை அள்ளி கொள்ளையடிக்க அரசாங்கமே அங்கீகாரம் அளித்துள்ளதை என்னவென்று சொல்வது ?

வெளிநாட்டு படங்கள் சிலவற்றில் பார்த்திருப்பீர்கள். ஜாம்பி வகை படங்களில் காரின் உள்ளே பாதிக்கப்படாத ஒரு நபர் இருப்பார், அவரை கொல்ல சுமார் நூறு பேர் அந்த காரை சுற்றி சூழ்ந்து அந்த காரை உடைத்து திறக்க முயன்றுக்கொண்டு இருப்பார்கள்.

அதேப்போன்ற நிலைமை, ஒரு வீட்டினுள்ளோ அல்லது ஒரு காரினுள்ளோ இருக்கும் ஒருவரிடம் ஒரு லிட்டர் தண்ணீர் இருக்கிறது, அந்த நீர் நமக்கு கிடைத்தால்தான் நாம் உயிர்வாழ முடியும் என்கிற சூழ்நிலை பிற்காலத்தில் வரலாம். ஆம். ஆழிசூழ் உலகம்தான் என்றாலும், நீர் நிச்சயம் நம் மனித சமுதாயத்தின் உயிர் என்பதை மறக்காமல் இருப்போம். நீர் சிக்கனம் காப்போம்.

விண்ணின் மழைத்துளி… மண்ணின் உயிர்த்துளி..

* தினேஷ்மாயா *

0 Comments: