The Alchemist – இரஸவாதி

Tuesday, July 07, 2020



பல ஆண்டுகளாக நான் படிக்க வேண்டும் என்று நினைத்த ஒரு புத்தகத்தை இப்போதுதான் படிக்க நேர்ந்தது.

Paulo Coelho – அவர்கள் எழுதிய The Alchemist புத்தகம்தான் அது.

என் நண்பர் ஒருவர் மும்பையில் இருந்து தமிழகம் வந்தார். அவர் சென்னையில் ஒருவாரம் தனிமை முகாமில் இருக்க நேர்ந்தது. தனிமையில் இருக்கையில் படிக்க ஒரு சிறந்த புத்தகம் இருந்தால் சொல் என்று அவர் என்னிடம் கேட்டார். நான் இந்த புத்தகத்தை அவருக்கு படிக்க சொன்னேன்.

இணையத்தில் இருந்து இந்த புத்தகத்த பதிவிறக்கம் செய்தேன். காலச்சுவடு பதிப்பகத்தார் இதை தமிழில் வெளியிட்டுள்ளனர். மொழிபெயர்ப்பாளர் திரு.சி.முருகேசன்.

என் நண்பருக்கு இந்த நாவலை அனுப்பிவிட்டு அவரை இந்த நாவலை தவறாமல் படிக்க வேண்டும் என்றும் சொல்லினேன். அப்போதுதான் எனக்கு தோன்றியது, நானே இந்த புத்தகத்தை படித்ததில்லை ஆனால் பிறரை தவறாமல் படிக்கவேண்டும் என்று சொல்கிறேனே என்று. உடனேயே அனைத்து வேலைகளையும் ஓரங்கட்டிவிட்டு ”இரஸவாதி”யை படிக்க ஆரம்பித்தேன்.

ஒரே நாளில் படித்து முடித்துவிட்டேன். இதை படிக்க படிக்க மனதில் அவ்வளவு ஒரு ஆனந்தம். எங்குமே மனதிற்கு வலி தரக்கூடிய சூழல் இந்த புத்தகத்தில் இல்லை. இதை ஒரு இலக்கிய நாவல் என்பதைவிட ஒரு தத்துவ புதினம் எனலாம். இதில் பிரபஞ்சத்தின் தத்துவம் சொல்லப்பட்டிருக்கிறது, வாழ்வின் இரகசியம் சொல்லப்பட்டிருக்கிறது. மரணம், வலி, போராட்டம், தேடல், புதையல், இரசவாதம் இவை எல்லாவற்றையும் விட இந்த உலகை இயக்கிக்கொண்டு இருக்கும் காதல் அதிகம் பேசப்படுகிறது.

இந்த நாவலைப் பற்றிய திறனாய்வு நான் செய்யப்போவதில்லை. இந்த நாவலில் வரும் கதாப்பாத்திரங்களையோ, அதன் மூலக்கதையையோ சொல்லப்போவதில்லை. இந்த புதினத்தில் என்னை அதிகம் கவர்ந்த சில வரிகளை இங்கே உங்களுடன் பகிர்கிறேன்.

  • ·         நாம் வாழ்க்கையில் எப்போதும் மாற்றங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
  • ·         ஆனால், காலப்போக்கில் ஒரு மாயமான சக்தி அவர்கள் தம்முடைய இலக்கை அடைவதென்பது இயலாத காரியம் என்று அவர்களை நம்பவைக்கத் துவங்கிவிடும்.
  • ·         அந்த சக்தி பாதகமானது போலத் தோன்றும். ஆனால், உண்மையில் அதுதான் உன் இலக்கினை அடைவதற்கான வழியை காட்டும். உன்னுடைய ஆன்ம பலத்தையும் மனோ பலத்தையும் ஆயத்தப்படுத்துவதும் அதுதான்.
  • ·         நீ யாராக இருந்தாலும், நீ செய்வது எதுவாக இருந்தாலும், நீ ஏதேனும் ஒன்றை உண்மையாகவே விரும்புவாயானால், அதற்கு காரணம் அந்த விருப்பம் பிரபஞ்சத்தின் ஆன்மாவிலிருந்து உதித்தது என்பதுதான். இந்த பூமியின் மீதான உன் பிறப்பின் நோக்கமே அதுதான்.
  • ·         மக்கள் தங்களுடைய கனவை வாழ்க்கையின் எந்தப்பருவத்திலும் நிறைவேற்றக்கூடிய திறம்படைத்தவர்கள் என்பதை அவர்கள் உணர்ந்ததே கிடையாது.
  • ·         கிடைப்பதற்கு முன்கூட்டியே ஒரு பொருளைக் கொடுப்பதாக உறுதியளிக்க ஆரம்பித்தாயானால் அதை அடைவதற்கான வேலையை செய்வதில் ஆர்வம் போய்விடும்.
  • ·         சில விஷயங்களை அதன் போக்கிலேயே விட்டுவிடுவது நல்லது.
  • ·         காற்றின் சுதந்திரத்தை அறிவாய். அந்த சுதந்திரம் உனக்கும் கிடைக்கும்.
  • ·         உன்னைத் தவிர உன்னை பிடித்து நிறுத்தக் கூடியது வேறெதுவுமில்லை.
  • ·         உனக்கு போதும் என நீ நினைக்கும் அனைத்தும் உன் இலக்கை நோக்கிய பாதையின் உன் படிக்கற்கள் மட்டுமே.
  • ·         எப்பொழுதும் நேரடியான கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும்.
  • ·         உன் இலக்கினை அது நிறைவேறும் வரை மறந்துவிடாதே.
  • ·         ஒருவருடைய வீட்டைப்பற்றி தெரிந்து கொள்ளாமல் அந்த நபரை நீ நம்பக்கூடாது.
  • ·         உலகில் உள்ள அத்தனை அதிசயங்களையும் இரசிக்கனும், அதே சமயம் கரண்டியில் இருக்கிற எண்ணெய்த் துளிகளையும் மறந்துவிடக்கூடாது.
  • ·         ஒருவன் தன் இலக்கிலிருந்து தப்பி ஓடிவிடாமல் தடுப்பதற்காகக் கேள்வி கேட்கப்படக்கூடாத விஷயங்கள் சில இருக்கத்தான் இருக்கின்றன.
  • ·         உன்னுடைய முடிவுகளை நீயே எடு.
  • ·         உனது வாழ்க்கை என்ன என்பதில் தெளிவாக இரு.
  • ·         Principle of favorability
  • ·         Beginner’s Luck
  • ·         பலரும் இங்கே மாற்றங்களை விரும்புவதில்லை. ஏனென்றால், மாறிய சூழ்நிலையை எப்படி கையாள்வது என்பதில் இருக்கும் ஒருவித பயம்தான் அதற்குக் காரணம்.
  • ·         வரத்தை அலட்சியப்படுத்தினால் அது சாபமாகிவிடும்.
  • ·         கனவு காண்பதை விட்டுவிடாதே.
  • ·         நீ ஒன்றை விரும்பும்போது அதை அடைய இந்த பிரபஞ்சமே வழி வகுக்கும்.
  • ·         அனைவராலும் புரிந்துகொள்ளக் கூடிய பிரபஞ்ச மொழி ஒன்று இருந்தது.
  • ·         வார்த்தைகளற்ற பிரபஞ்ச மொழி – காற்று உணர்த்தும் செய்தி.
  • ·         எண்ணத்திற்குக் கூட ஆன்மா உண்டு.
  • ·         உலகத்திற்கென்று ஒரு ஆன்மா இருக்கிறது. அந்த ஆன்மாவை புரிந்துகொள்பவர்களால் எல்லாவற்றிற்குமான ஒரு பொது மொழியை புரிந்துகொள்ள முடியும்.
  • ·         வாழ்வு என்பதை ஒரு பெரிய விழாவாக, கோலாகலமான கொண்டாட்டமாக கருதவேண்டும். ஏனென்றால், நாம் ஜீவித்திருக்கிற இந்த தருணம்தான் வாழ்வென்பது.
  • ·         உலகம் பல மொழிகளில் பேசுகிறது. ஒட்டகத்தின் சப்தம் பயத்தை ஊட்டலாம். ஈச்ச மரத்தின் காட்சி அற்புதமாக தெரியலாம், காலைநேர பாலைவனத்தின் காற்றும் அமைதியும் மனதிற்குள் இலயத்தை தரலாம். உலகம் பல மொழிகளில் நம்முடன் பேசுகிறது.
  • ·         மனித சமூதாயத்திற்கெல்லாம் மூத்தது – காதல் !
  • ·         சோசியம் பார்த்து, எதிர்காலத்தில் நல்லது நடக்குமென்றால் அது இன்ப அதிர்ச்சியாக இருக்கும். நடக்கப்போவது தீயதாக இருக்குமானால், முன்கூட்டியே தெரிந்துபோனமையால் அது நிகழ்வதற்கு முன்பிருந்தே வருத்தப்பட நேரிடும்.
  • ·         எதிர்காலம் இறைவனுக்குரியது. எதிர்காலத்தை மறந்துவிடு. நிகழ்காலத்தில்தான் இரகசியமே இருக்கிறது. நிகழ்காலத்தை உன்னிப்பாக கவனித்தால் அதை நீ மேம்படுத்திக்கொள்ளலாம்.
  • ·         நாளைக்கு இறப்பது என்பது பின்னொரு நாளில் இறப்பதைக்காட்டிலும் மோசமானது அல்ல.
  • ·         வாழ்வதற்காகவோஅல்லது இந்த உலகத்தைவிட்டு புறப்படுவதற்காகவோதான் ஒவ்வொரு நாளும் விடிகிறது. எல்லாம் ஒரே வார்த்தையில் அடக்கம். “மக்தூப்”.
  • ·         சாவைப் பற்றி கவலைப்பட ஏதுமில்லை. உலகத்தின் ஆன்மா இவனுக்காக காத்திருக்கிறது. விரைவில், அதிலொரு பகுதியாகப் போகிறான்.
  • ·         வாயினுள்ளே போவது எதுவும் பாவம் இல்லை. வாயிலிருந்து வெளியே வருவதில்தான் இருக்கிறது.
  • ·         உன் இதயம் எங்கிருக்கிறதோ அங்கேதான் புதையலும் இருக்கிறது.
  • ·         நீ உனது புதையலை அடைந்தே தீர வேண்டும். அப்பொழுதுதான் உனது பாதை நெடுகிலும் நீ கற்றுக்கொண்ட ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளவையாகும்.
  • ·         உயிர் உயிரை ஈர்க்கும்.
  • ·         தன்னுடைய இலக்கை தேடி அடைவதற்கு ஒருவனின் காதல் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. காதலால் ஒருவன் தன்னுடைய தேடலைக் கைவிடுவானேயானால் அதற்குக் காரணம் அது உண்மையான காதலாக, உலக மொழியைப் பேசக் கூடிய காதலாக இருக்காது.
  • ·         கற்றுக்கொள்வதற்கு ஒரேயொரு வழிதான் இருக்கிறது. அதுதான் செயல்முறை.
  • ·         சொர்க்கத்தினுடைய நகலும் படிவமுமாகத்தான் இயற்கையான உலகம் இருக்கிறது என்பதை அறிவாளிகள் புரிந்து கொண்டார்கள்.
  • ·         உன்னுடைய இதயத்தைக் கவனி, அதற்கு எல்லாம் தெரியும். ஏனென்றால், அது உலக ஆன்மாவிலிருந்து வந்தது. ஒருநாள் அங்கேயே திரும்பப் போய்விடும்.
  • ·         துன்பம் பற்றிய பயம் துன்புறுவதைக் காட்டிலும் மிக மோசமானது என்று உன் இதயத்திடம் சொல்.
  • ·         கனவுகளைத் தேடிப் புறப்பட்ட இதயம் ஒருபோதும் துன்பத்திற்கு ஆளானதில்லை.
  • ·         இந்த மண்ணில் வாழும் ஒவ்வொருவரும் தேடி அடைவதற்காக ஒரு புதையல் காத்துக்கிடக்கிறது.
  • ·         உன் இதயம் சொல்வதை எப்போது சரியாக கேட்கிறாயோ அப்போது உலக ஆன்மாவிடம் உன் இதயம் திரும்பிவிட்டது என்று உணர்ந்துக்கொள்.
  • ·         வாழ்க்கையில், வெற்றியாளன் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே தேர்ந்தெடுக்கப்படுகிறான்.
  • ·         உன்னிடம் பெரும் புதையலை வைத்துக்கொண்டு அதை பிறரிடம் சொல்ல முற்பட்டால் அவர்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள்.
  • ·         ஆன்மாவின் வலிமையை கண்கள் காட்டும்.
  • ·         மற்றவருடைய இலக்கில் குறுக்கிடும் எவரும் தன்னுடைய இலக்கை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும்.
  • ·         ஒரு சங்கை எடுத்து காதில் வைத்தால் அதில் கடலின் அலையோசை கேட்கும். ஏனென்றால், கடல்தான் அதன் இலக்கு. அதிலிருந்துதான் சங்கு பிறப்பெடுத்து வந்தது. மீண்டும் அதிலேயே சென்று சேர எப்போதும் துடித்துக்கொண்டிருக்கிறது.
  • ·         கனவை அடையவிடாமல் தடுப்பது ஒன்றே ஒன்றுதான். தோற்றுவிடுவோமோ என்கிற பயம்.
  • ·         சாகப் போகிறோம் என்கிற பயமே வாழ்க்கையைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள செய்வது வழக்கம்.
  • ·         காற்றுக்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை.
  • ·         பிரபஞ்சத்தில் தோன்றிய அனைத்தும், பரிணமித்த அனைத்தும் உன்னுள் இருக்கிறது என்பது எப்போது உணரப்போகிறாய் ?
  • ·         ஒருமுறை நிகழ்ந்தது மறுமுறை ஒருபோதும் நிகழாது. ஆனால், இருமுறை நிகழ்ந்ததோ மூன்றாவது முறையும் கண்டிப்பாக நிகழும்.
  • ·         ஒருவன் என்ன தொழில் செய்கிறான் என்பது பொருட்டல்ல. ஆனால், பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் உலக வரலாற்றில் முக்கிய பாத்திரம் வகிக்கிறான். சாதாரண நிலையில் அது அவனுக்கு புரிவதில்லை.
  • ·         இலக்கை தேடிச் செல்பவர்களுக்கு வாழ்க்கை பெருந்தன்மையாகத்தான் நடந்துக்கொண்டிருக்கிறது. அதை உணர பொறுமை அவசியம்.

 இன்னும் எத்தனையோ வரிகள் என்னை அதிகம் கவர்ந்தது. அதில் சிலவற்றையே இங்கே பதிவு செய்கிறேன். முன்பெல்லாம் ஒரு நூலை படித்தால் வெறுமனே படித்துவிட்டு அதை மனதில் வைத்துக்கொள்வேன். இப்போதெல்லாம், எந்த ஒரு நூலாக இருந்தாலும்சரி, அதை படிக்க ஆரம்பிக்கும் முன்னரே அதிலிருந்து குறிப்புகளை எடுக்க ஆரம்பித்துவிடுகிறேன். அது எனக்கு பின்னாளில் உதவலாம் என்பதற்காகவும், உங்களுடனும் பகிரலாம் என்றும். மேலே நான் பதிந்த வரிகளை மீண்டும் படித்து முடிக்கையில் அந்த நாவலை முழுவதுமே படித்த ஒரு திருப்தி ஏற்படுகிறது.

ஒருமுறை குறுஞ்செய்தி ஒன்றை படித்தேன். அதில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் எனும் நூலில் இருந்து ஒருசில வரிகளை அதில் பதிவிட்டிருந்தார்கள். அந்த வரிகளை படித்த அடுத்த நொடியே, எனக்கு அந்த நூலை படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வந்தது. உடனே அதை பதிவிறக்கம் செய்து 3 நாட்களில் அதை படித்து முடித்துவிட்டேன்.

அதுபோல, இங்கே நான் பதிவிடும் சில வரிகள் உங்களை ஒருவேளை ஈர்க்கும். உடனே அந்த நாவலை நீங்களும் தேடிச்சென்று படிக்க விரும்புவீர்கள். அதனாலேயே நான் படிக்கும் நூலில் நான் இரசித்த சில வரிகளை இனி என் வலையில் பதிந்து உங்களோடு பகிரப்போகிறேன்.

இன்னொரு விடயத்தை சொல்ல மறந்தேன். இந்த நாவலை நான் தமிழில் படிப்பதை பார்த்துவிட்டு என் மனைவி கேட்டாள். ஏன் இதை தமிழில் படிக்கிறாய், ஆங்கிலத்தில் படித்தால்தான் அருமையாக இருக்கும் என்றார். அதற்கு நான் சொன்னேன், இந்த நூல் முதலில் போர்ச்சுகீசிய மொழியில்தான் வெளியானது. ஆங்கிலத்தில் ஒருவர் மொழிபெயர்த்து வெளியிட்டார். ஆங்கில நூலே மூலநூலில் இருந்து மொழியாக்க செய்யப்பட்டதுதான். எந்த மொழியில் படிக்கிறோம் என்பது முக்கியமல்ல. அந்த நூலை நான் படிக்கும்போது நம் இதயத்தோடு தொடர்பு படுத்திக்கொள்ள எந்த மொழி நமக்கு உதவுகிறதோ அந்த மொழியில் படிக்கலாம்.

உங்களில் எவருக்காவது ”The Alchemist – இரஸவாதி” நூல் தமிழில் படிக்க விரும்பினால், இணையத்தில் தேடுங்கள். தேடி கிடைக்காவிட்டால் எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும் நான் உங்களுக்கு இந்த நூலை பகிர்கிறேன்..     மி: dhineshmaya@gmail.com

* தினேஷ்மாயா *

0 Comments: