Made in China

Sunday, July 26, 2020



 சீனப் பொருட்கள் இந்த உலகமெங்கும் பரவிக்கிடக்கிறது. ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர் என் அக்கா என்னிடம் ஒரு நகைச்சுவை துணுக்கு சொன்னார். ஒரு விண்கலத்தில் இருந்து பூமியை பார்த்தால் அதில் Made in China என்றே தெரிந்ததாம். அது எனக்கு முதலில் புரியவில்லை. பின்னர் அவரே விளக்கினார். இந்த உலகில் இருக்கும் 90% பொருட்கள் சீனாவில் தயாரானதே அதனால்தான் இந்த உலகமே சீனாவில் தயாரிக்கப்பட்டது என்று விண்வெளியில் இருந்தே தெரிகிறது என்றார். நகைச்சுவைதான் என்றாலும் அதில் பொதிந்துள்ள கருத்து ஆழமானது.

 சீனர்கள் தங்களுடைய மக்கள்தொகையை ஒரு பாரமாக பார்க்காமல், வரமாக கையாண்டு உலகில் பல்வேறு துறைகளுக்கு தேவையான மூலப்பொருட்களையும், மேலும் பல்வேறு பொருட்களையும் உற்பத்தி செய்து தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்து வருகின்றனர்.

சமீபத்தில், இந்தியா பல்வேறு சீன மென்பொருட்களுக்கு தடை விதித்தது. மேலும், சீனப்பொருட்களுக்கும் தடை விதிக்க பல்வேறு தரப்பினரிடம் இருந்து பரிந்துரைகள் வந்தவண்ணம் உள்ளது. இதை இந்திய அரசாங்கம் எப்படி கையாளப்போகிறது என்பதை விடுங்கள். நாம் கொஞ்சம் இதைப்பற்றி சிந்திப்போமே.

நேற்று ஒரு Nail Cutter வாங்க போனேன். அது குழந்தைகளுக்கானது. விலை ரூ.245/- மற்றும் அது Made in China. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. விலை அதிகம் என்று முதலில் நினைத்தேன். Born Babies கடையில் வாங்கியதால் அந்த கடை நிர்வாகமே கொஞ்சம் அதிக விலை வைத்து விற்றிருக்கலாம் என்று விட்டுவிட்டேன். ஆனால் நான் ஆச்சரியப்பட்ட ஒரு விஷயம் என்னவென்றால், ஒரு Nail Cutter-ஐ கூட இந்தியாவில் உற்பத்தி செய்யாமல், சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய காரணம் என்ன ? அங்கே ஒரு பொருளின் உற்பத்தி விலை மிக மிக குறைவு. உதாராணமாக இதே Nail Cutter-ஐ இரண்டு அல்லது மூன்று Container-களில் இறக்குமதி செய்தால், அதன் மொத்த விலை என்பது இறக்குமதி வரியையும் சேர்த்தாலும் மிகவும் குறைவாகவே இருக்கும். அப்படி பார்த்தால் ஒரு Nail Cutter-ன் விலை என்பது வெறும் ரூ.30 முதல் ரூ.50-ஐ தாண்டாது. ஆனால், மொத்தமாக இறக்குமதி செய்து இங்கே அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்க்கின்றனர் இந்திய தொழில்முனைவோர்.

அவர்களை, இந்திய பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது நியாயமும் இல்லை. ஏனென்றால், இங்கே ஒரு பொருளை உற்பத்தி செய்து, அதை சந்தையில் விற்க ஆகும் செலவு என்பது, சீனாவில் இருந்து ஒரு பொருளை இறக்குமதி செய்து அதற்கான வரியையும் செலுத்தி விற்பனை செய்வதைவிடவும் அதிகம். அதனாலேயே வியாபாரிகளும் இந்திய பொருட்களை விடுத்து சீனப் பொருட்களை வாங்க முற்படுகின்றனர்.

சீனப் பொருட்களை தடை செய்வதென்பது, இந்திய பொருட்களை சீனாவில் தடை செய்ய சொல்வது போன்றது. எந்தவொரு நாட்டின் பொருளையும் வேறெந்தவொரு நாட்டிலும் விற்பனை செய்யலாம். இதுவே உலகமயமாக்கலின் அடிப்படை தத்துவம். 

சீனப் பொருட்கள் தரமற்றது, ஆனாலும் அதன் மலிவான விலையால் மக்கள் அதிகம் அதை நாடுகின்றனர். இதுவே மக்களின் மனநிலை. இதை முதலில் அரசாங்கம் உணர வேண்டும்.

இந்தியாவில் ஒரு நிறுவனத்தை தொடங்கி அதில் உற்பத்தி செய்து அந்த பொருளை சந்தைப்படுத்துவதில் பல சிரமங்கள் உள்ளது. பல நிலைகளில், இலஞ்சமும் ஊழலும் வரி ஏய்ப்பும் அதிகம் உள்ளது. அதனால், மக்களுக்கு மலிவான விலையில் ஒரு பொருளை கொண்டுவந்து சேர்க்க முடிவதில்லை. இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணாமல், சீனப்பொருட்களுக்கு தடை விதித்தால் அது வேறு வகையில் இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும். 

இந்திய இளைஞர்களின் உழைப்பை நம் அரசாங்கம் சரிவர பயன்படுத்தாதவரை, Make In India வெறும் கனவாக இருக்கும், Made in China மட்டுமே நிரந்தரமாக இருக்கும்.

* தினேஷ்மாயா *

0 Comments: