செய்யாத தவறுக்காக நாம் வசவு வாங்குவதும், தண்டனை பெறுவதும் ஆகப்பெரிய கொடுமை என்பேன் நான்.
அது என்னவோ தெரியவில்லை, என்ன மாயமோ தெரியவில்லை என் வாழ்வில் மட்டும் இதுப்போன்ற சம்பவம் எனக்கு நிறைய நடந்திருக்கிறது, நடந்துக்கொண்டும் இருக்கிறது..
சிறு வயதில் யாரோ ஒருவன் தள்ளிவிட என் அருகில் இருந்த உடன்பயிலும் மாணவன் கீழே விழுந்து அவன் கை முறிய நான்தான் தள்ளிவிட்டேன் என்று எல்லோரும் சொல்ல, நான் அவன் இல்லை என்று எவ்வளவு சொல்லியும் நம்புவதற்கு எவரும் இல்லை என்னையும் ஆண்டவனையும் தவிர..
எட்டாவது படிக்கும்போது, ஒரு மாலை வேளையில் என் நண்பன் ஒருவனுடன் நானும் விளையாடிக் கொண்டிருந்தேன். அன்று எங்கள் பக்கத்துத் தெருவில் இருக்கும் ஒருவர் வீட்டில் ஒரு கை கடிகாரம் களவு போய்விட்டது என்றும், நான் விளையாடி கொண்டிருக்கும் என் நண்பன் மதியம் அவர்கள் வீட்டிற்கு சென்றான் என்றும், அதனால் அவனே அதை எடுத்திருப்பான் என்றும் அவர்கள் அவனை குற்றம் சாட்டினார்கள். நான் அவனுடன் விளையாட ஆரம்பித்ததோ மாலையில் தான். ஆனால், அந்த களவில் நானும் உடந்தை என்று பொய்யாக என்னை குற்றம் சாட்டிய போது, நான் அவன் இல்லை என்று சொல்ல அதை அவர்கள் நம்ப தயாராக இல்லை. பிறகு என் களங்கம் போக்க சில ஆதாரங்களை இறைவன் எனக்காக கொடுத்தான். ஆனாலும், செய்யாத தவறுக்காக குற்றம் சாட்டப்பட்டு நாணித் தலைகுனிய நேர்ந்ததை என்னவென்று சொல்ல ?
பன்னிரெண்டாவது படிக்கும்போது என் நண்பன் ஒருவன் செய்த தவறுக்காக, அவனும் நானும்தான் மாலையில் ஒன்றாக வீட்டிற்கு செல்வோம் என்கிற ஒரே காரணத்துக்காக, அவனோடு சேர்ந்து என்னையும் குற்றம் சாட்டி, ஒரு மணி நேரம் பள்ளி முதல்வர் அறைக்கு வெளியே நின்றிருந்தபோது, நான் அவன் இல்லை என்று என் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்/
இவை எல்லாவற்றிற்கும் மகுடம் வைப்பதுபோல, கல்லூரி விடுதியில் நடந்த நிகழ்வை சொல்லலாம். எனக்கு தொடர்பே இல்லாத ஒரு செயலில் என்னையும் தொடர்புப்படுத்தி, என்னை இந்த சென்னை மீதும், கல்லூரி மீதும், என் வாழ்க்கை மீதும் என்னுடைய ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இழக்க செய்த சம்பவம் அது. அந்த சம்பவத்தின்போது சுற்றி இருந்த 100 மாணவர்களில் ஒருவன்கூட என் பக்கம் இல்லை. நான் அவன் இல்லை என்று உள்ளத்தில் குமுறல் இருக்கிறது. அதை எவரிடம் சொல்ல. ஆனாலும், இங்கே இறைவன் என்னை கீழே விடாமல் பிடித்துக்கொண்டான். அந்த செயலில் எனக்கு தொடர்பில்லை என்று அதில் சம்பந்தப்பட்ட மாணவனே தெரிவித்தான். வாழ்க்கையை வெறுத்து முட்டாள்தனமான முடிவை எடுக்கவும் இந்த சம்பவம் என்னை தள்ளியது. இருப்பினும் இறையருளால் இவற்றை எல்லாம் கடந்து வந்தேன். இதுப்போன்ற சம்பங்களும், இவை தந்த வலிகளுமே என்னை பக்குவப்படுத்தியது. வாழ்க்கை மீதும், மனிதர்கள் மீதும் எனக்கு தெளிவான புரிதலை கொடுத்தது.
திருமணத்திற்குப் பிறகும் இது தொடர்கிறது.. ஆம்.. என் பெற்றோர், உறவினர்கள், நண்பர்களின் செயலுக்கும், சொல்லுக்கும் நான் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். தவறு என் பக்கம் இல்லையென்றாலும், நான் அவன் இல்லை என்று சொன்னாலும் என் விதி என்னை விட்டபாடில்லை.
செய்யாத தவறுக்காக வருந்துவதும், மன்னிப்பு கேட்பதும், தண்டனை அனுபவிப்பதும் வாழ்க்கையின் மிகப்பெரும் கொடுமைகளில் ஒன்றென்பதை வாழ்க்கை நன்றாக எனக்கு உணர்த்திவிட்டது..
அதனால்தான் என்னவோ, யார் எந்த தவறு செய்தாலும் அதை நான் பெரிதாய் பொருட்படுத்த மாட்டேன். அந்த தவறை உண்மையாகவே அவர்தான் செய்தாரா, அல்லது சூழ்நிலையால் அவர் செய்யாத தவறுக்காக அவர் குற்றம் சுமத்தப்படுகிறாரா என்றெல்லாம் தெரியாமல், ஒருவரை குற்றம் சொல்வது பாவம் என்றே கருதுகிறேன்.
நான் ஏசுநாதர் போல, மற்றவர்களின் பாவத்தை என் முதுகில் சுமந்து வருகிறேன். போதும்.. மேலும் மேலும் புது புது ஏசுநாதர்களை நான் உருவாக்க விரும்பவில்லை.
ஏனென்றால்...
நான் அவன் இல்லை...
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment