எங்கள் ஊர் FRCS

Friday, June 05, 2020




அவள் புத்தகம் படித்து பார்த்ததில்லை. அவளுக்கு படிக்கவும் தெரிந்ததில்லை. ஆனால், அவள் சொல்லும் செய்தி எந்த புத்தகத்திலும் வந்ததில்லை. அவள் சொல்லும் ஒவ்வொரு தகவலும் ஆச்சரியமூட்டும். அத்தனையும் உண்மையாக இருக்கும்.

தலைவலிக்குது என்று சென்றால் ஆயிரம் பரிசோதனைகளை செய்துவிட்டு ஒன்றுமில்லை இதை சாப்பிடு சரியாகிடும் என்று நான்கு சத்து மாத்திரைகளை கொடுத்தனுப்பும் மருத்துவர்களுக்கிடையே, பள்ளிக்கூடமே போகாமல், கை வைத்தியத்தால் எங்கள் குடும்பம் மட்டுமல்ல, ஊரில் பலர குடும்பங்களுக்கு வைத்தியம் பார்க்கும் எங்கள் ஊர் FRCS அவள்.

முன் குறிப்பு: நான் அவள் பேரன்தான். 
அவள் சிறு வயதில் தென்னை மரம் ஏறுவாள். நீச்சல் அடிப்பாள்.
பின்குறிப்பு. இவையிரண்டும் எனக்கு இன்றுவரை தெரியாது.

சிறுசேமிப்பு என்றாலும் அதில் தெரியும் அவளின் பொருளாதார ஆளுமை. தண்ணீரையும் காசு போலவே சிக்கனமாய் செலவு செய்ய சொல்லிக்கொடுத்தவள்.

அவள் போடும் காபியின் சுவையை இன்றுவரை வேறெங்கும் சுவைத்ததில்லை.

அவள் வைக்கும் கறிக்குழம்பிற்கு இந்திய புவிசார் குறியீடே கொடுக்கலாம்.

சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், துக்கம் நெஞ்சை அடைக்கை வார்த்தைகளும் அடைப்பட்டுப் போகிறது.

இறப்பு எல்லோருக்கும் வருவதுதான். எனக்கும் வரும். உங்களுக்கும் வரும். ஆனால், நம் மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு அது வரும்போதுதான் இதுவரை நாம் கற்ற தத்துவங்கள் மண்ணோடு புதைந்துவிடுகிறது – அவளைப்போல !


* தினேஷ்மாயா *

0 Comments: