சமீபத்தில் தமிழக அரசியலில் “சமஸ்க்ருத வாரம்” தலைப்பு செய்தியாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சமஸ்க்ருத வாரம் கொண்டாட கூடாது என்றும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பல தமிழக அரசியல் கட்சிகளும், தமிழார்வ இயக்கங்களும் போர்க்கொடி உயர்த்தியுள்ளது.
நான் சமஸ்க்ருத மொழியை எதிர்ப்பவன் இல்லை. தமிழை உயிராய் மதிப்பதுபோல மற்ற இந்திய மொழிகளையும் சமமாக மதிக்கிறேன். எனக்கு மற்ற இந்திய மொழிகளை கற்க வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று பலமுறை வருந்தியதுண்டு.
சமஸ்க்ருதம் பற்றி சில கருத்துகளை நான் இங்கே நிச்சயம் பதிவு செய்தேயாக வேண்டும். தமிழுக்கு நிகரான பல விஷயங்கள் சமஸ்க்ருதத்தில் இருக்கிறது. சொல்லப்போனால் சமஸ்க்ருதம் தமிழை விட ஒரு விஷயத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது. என்னவென்று சொல்கிறேன், தொடர்ந்து படியுங்கள்.
சமஸ்க்ருத மொழி இன்று அதிக மக்களால் பின்பற்றப்படுவதில்லை. மாறாக இந்தி அனைவராலும் பரவலாக பேசப்படுகிறது. இதற்கு காரணம் உண்டு. இந்தி மொழியும் சரி, ஆங்கில மொழியும் சரி, பிற மொழி வார்த்தைகளை தம் மொழியினுள் ஏற்றுக்கொள்ளும் வல்லமை பெற்றிருக்கிறது. உதாரணமாக, தமிழ் மொழியில் கல்வெட்டு என்பதை ஆங்கிலத்தில் CULVERT என்று எளிதாக மொழிப்பெயர்க்கலாம், ஆனால் வேற்று மொழியினை சமஸ்க்ருத மொழி அவ்வளவு எளிதாக தன்னுள் ஏற்றுக்கொள்ளாது.
தமிழ் மொழியிலும், பிறமொழி சொற்கள் இன்றளவும் நடைமுறையில் இருக்கிறது. தமிழ் பேசும் நல்லுலகம் வெறும் தமிழ் ஆசிரியர்களை மட்டும் கொண்டதல்ல. சுமார் 10 கோடிக்கும் மேலான மக்கள் தமிழ் மொழியை பேசுகின்றனர். ஆனால் அதில் எத்தனைப்பேர் தூய தமிழ் வார்த்தைகளை பேச பயன்படுத்துகிறோம் சொல்லுங்கள். ஆங்கிலம் கலப்படம் இல்லாமல் நம்மால் 5 நிமிடம் தொடர்ச்சியாக பேசமுடிகிறதா சொல்லுங்கள். ஆங்கில வார்த்தை கலக்காமல் 2 நிமிடங்கள் பேசினாலே 1000 ரூபாய் பரிசு தரும் பல விளையாட்டுக்கள் இங்கே முளைத்துவிட்டன. அப்படியே ஒருவர் ஆங்கில வார்த்தை கலப்படமில்லாமல் பேசினாலும் அவர் வார்த்தையில் நிச்சயம் வடமொழி கலப்படம் இருந்தே தீரும். பரிட்சை என்பது வடமொழி, தேர்வு என்பது தமிழ் மொழி. ஆனால் பிற மொழியினை தமிழ் மொழி தனக்கு தகுந்தார்போல ஏற்றுக்கொள்ளும் தன்மையுடையது. அதனால் தான் இன்னமும் இத்தனை கோடி மக்கள் இம்மொழியை பேசுகின்றனர். ஆனால் சமஸ்க்ருதம் அப்படியல்ல. தன் மொழியுடன் வேற்று மொழியை கலக்க ஒருபோதும் அனுமதிப்பதில்லை.
இத்துனை சிறப்பு மிகுந்த சமஸ்க்ருத மொழியை நாம் ஏன் அந்நிய மொழியாக பார்த்து அதை கொண்டாடுவதை வெறுத்து ஒதுக்க வேண்டும்? அந்நிய மொழியான ஆங்கிலத்தை ஒதுக்குங்கள், நம் இந்திய மொழிகளை ஒதுக்காதீர்கள்.
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment