இன்றைய கனவு கொஞ்சம் புதிதாய் இருந்தது. நான் ஒரு கல்யாணத்தில் இருக்கிறேன். யார் கல்யாணம் என்று தெரியவில்லை, எனக்கு தெரிந்த முகங்கள் ஒருவரும் இல்லை. ஆனால் கனவில் கிட்டத்தட்ட 100 பேருக்கு மேல் இருக்கிறார்கள். கனவு எவ்வளவு நேரம் நீடித்தது என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் கனவில் நான் கிட்டத்தட்ட 30 நிமிடங்களாவது வாழ்ந்திருப்பேன். அந்த 30 நிமிடம் நிஜத்தில் மிகக்குறைவான நேரமாக இருக்கக்கூடம். ஏனென்றால் அந்த கனவில் நான் யாருடனும் பேசவில்லை, வெறுமனே இங்கேயும் அங்கேயும் திரிந்துக்கொண்டிருக்கிறேன். இதைவைத்து பார்க்கும்போது நான் எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத ஒருவரின் கல்யாணத்திற்கு சென்றிருக்கிறேன் என்று யோசிக்கத் தோன்றுகிறது. தெரிந்தவர் கல்யாணமென்றால் நிச்சயம் ஓடியாடி வேலை செய்திருப்பேனே. அப்புறம் அந்த கல்யாணம் ஒரு வீட்டில் நடக்கிறது. அதுவும் கிராமத்து வீடு. எப்படி கிராமம் என்று சொல்கிறேன் என்றால் அதில் இருந்த பெரும்பாலான பெண்கள் தாவணி அணிந்திருந்தார்கள். இந்த கனவிலேயே மிகவும் ஆச்சர்யமான விஷயம் என் மனதை கவர்ந்த அவள் இந்த கனவின் கடைசியில் வந்தாள். என் கல்லூரி காலங்களை பசுமையாக்கிய அந்த தேவதை கனவில் தோன்றினாள். அவளும் தாவணி அணிந்திருந்தாள். அவள் என்னைப்பார்த்ததும் என்னை தெரியாததுப்போல விலகி ஓடினாள். நான் அவளை பின்தொடர்ந்து ஓடினேன். அவள் பெயரை அழைத்து நில்லு என்று சொல்லி என் கையை நீட்டினேன், அவள் கூந்தள் முடி இரண்டு மட்டும் என் கையில் சிக்கிக்கொண்டது. அவள் அதைப்பொருட்படுத்தாமல் ஓடிவிட்டாள். தொலைவில் சென்று நின்று என்னைப்பார்த்தாள். நான் அவள் கூந்தள் முடியை என் கைகளில் இருந்து எடுத்து அதை பத்திரமாக மடித்து என் இதயத்தின் பக்கத்தில் இருக்கும் சட்டைப்பையில் வைத்துக்கொண்டேன். அவள் கண்களைப்பார்த்தேன். அவளும் ஓரமாய் மறைந்திருந்து பார்த்துவிட்டு சிரித்தாள். அப்புறம் அவ்வளவுதான். அந்த கனவு முடிந்தது. ஆனால் கனவு முடியும் முன்பு இரண்டு நபர்கள் என் காதில் இரண்டு வார்த்தைகளை சொல்லினார்கள். அது, Honey Bee, Bee Hive. யார் அவர்கள் எதற்காக இந்த இரண்டு வார்த்தைகளை எனக்கு சொன்னார்கள் என்று புரியவில்லை. சரி பார்ப்போம். இந்த கனவை என் வாழ்நாளின் எதாவது ஒரு நாளோடு தொடர்பு படுத்த முடிகிறதா என்று பொறுத்திருந்து பார்க்கிறேன்.
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment