என் அலுவலகத்தில் என்னுடன் பணியாற்றும் நபர் ஒருவர் ஓய்வு பெற்றார். அன்றைய தினம், அலுவலகத்தில் அவரின் கடைசி தினம். நானும் அவரும் இன்னும் இரண்டு பேரும் சேர்ந்துதான் எப்போதும் மதிய உணவை சாப்பிடுவோம். அன்றும் வழக்கம்போல நாங்க நான்குபேரும் சாப்பிட அமர்ந்தோம். வழக்கம்போல அனைவரின் உணவையும் அனைவரும் பகிர்ந்துக்கொண்டோம். நன்றாக பேசிக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அவர் எங்கள் அனைவரிடம் இருந்தும் ஒரு வாய் உணவு கொடுங்கள் என்று கைகளை நீட்டினார். நாங்கள் அனைவரும் அவர் கையில் ஒரு கைபிடி உணவை வைத்தோம். அதை அவர் உண்ணும் போது அவரையும் அறியாமல் கண்ணீர் வடித்துவிட்டார். அவர் அருகில் நான்தான் அமர்ந்திருந்தேன். என்னால் எதுவும் அவருக்கு சொல்ல முடியவில்லை. அவரை சமாதானப்படுத்தவும் முடியவில்லை.
அப்போதுதான் நினைத்துக்கொண்டேன். பிரிவு என்பது எவ்வளவு வலியை கொடுக்கிறது என்று. 39 வருடங்களாக பணியாற்றியிருக்கிறார் அவர். இத்துனை வருடம், தினமும் காலையில் எழுந்ததும் குளித்து முடித்து அவசர அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்புவது, மனைவியிடம் மதிய உணவை கட்டியாச்சா என கேட்பது, கிளம்பும் அவசரத்தில் வண்டி சாவியை மறந்துவிட்டு கிளம்பி மனைவி அதை தேடிக்கொண்டு வந்து நம்மிடம் தருவது, சென்று வருகிறேன் என்று மனைவியிடம் சொல்வது, மாலையில் களைப்புடன் வீடு திரும்பி அன்று முழுவதும் அலுவலகத்தில் நடந்ததையெல்லாம் அவளிடன் தேநீர் பருகிக்கொண்டே பகிர்வது, விடுமுறை நாட்களென்றால் மிகவும் மகிழ்ச்சியாய் இருப்பது, இப்படி இனி இருக்க முடியாதே !
இனி நாட்கள் வெறுமையாய் கழியும். நேரம் போக்குவது எப்படி என்று தெரியாது. அதிகம் உடம்பின்மீது கவனம் செலுத்த வேண்டும். அதிகம் வங்கிக்கும் மருத்துவமனைக்கும் நடையாய் நடக்க வேண்டியிருக்கும். இப்படி பல விஷயங்கள் நம் வாழ்வில் பணிஓய்வுக்கு பிறகு மாறும். அந்த மாற்றத்தையும் மனஉறுதியோடு எதிர்கொள்வோம்...
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment