NOTA

Friday, April 18, 2014


      NOTA - None Of The Above என்னும் ஒரு உரிமையை நமக்கு உச்ச நீதிமன்றம் தந்திருக்கிறது. இதுநாள் இருந்துவந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது மாண்புமிகு உச்ச நீதிமன்றம். 

     இந்தமுறை பல இளைஞர்கள் தங்கள் வாக்குகளை NOTA-விற்கு அளிக்கப்போவதாக பரவலாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதைப்பற்றி கொஞ்சம் இங்கே விவாதிக்கவே வந்திருக்கிறேன்.

     இதுநாள் வரை, நம் தொகுதியில் போட்டியிடும் எவர்க்கும் எனக்கு வாக்களிக்க விருப்பமில்லை என்றால், 49-O என்னும் படிவம் ஒன்று தேர்தல் நடக்கும் மையத்தில் வைத்திருப்பார்கள். நாம் அதைவாங்கி பூர்த்தி செய்து தரவேண்டும். இது ஜனநாயகத்தின் அடிப்படைக்கு எதிரானதாக இருந்தது. ஜனநாயகத்தில் நாம் யாருக்கு ஓட்டு போடுகிறோம் என்று எவர்க்கும் தெரியாமல் பார்த்துக்கொள்வது தேர்தல் ஆணையத்தின் கடமை. ஆனால் யாராவது ஒரு நபர் 49-O படிவம் பூர்த்தி செய்கிறார் என்றால் அவர் எவர்க்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை அங்கு இருப்பவர்கள் அனைவருக்கும் தெரியும். இந்த நிலையை மாற்ற, பல ஆண்டுகால போராட்டங்களுக்குப்பிறகு உச்ச நீதிமன்றம் ஒரு சரித்திர சிறப்பு வாய்ந்த தீர்ப்பை அளித்தது. அது, 49-O படிவத்தை பூர்த்தி செய்வதற்கு பதிலாக எவர்க்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை மற்ற வேட்பாளர்களை தேர்வு செய்யும் இயந்திரத்திலோ அல்லது ஓட்டு சீட்டிலோ இருக்க வேண்டும் என்பதுதான் அது.


   இனி நாம் எவர்க்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை மறைவாக இருக்கும் இயந்திரத்திலேயே பதிவு செய்யலாம். இது அனைவராலும் வெகுவாக வரவேற்கப்பட்ட ஒரு விஷயம். இது அரசியல் என்றால் வெறுப்பாய் பார்த்த படித்த இளைஞர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இனி அவர்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்துவார்கள். எவர்க்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை அவர்கள் பதிவு செய்வார்கள்.

   இப்போதைய கேள்வி என்னவென்றால், தேர்தலில் போட்டியிடும் வாக்காளர்களைவிடவும் NOTA-விற்கு அதிக வாக்குகள் வந்தால் என்ன செய்யலாம் என்பதுதான். இப்போதைய சட்டப்படி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் என்ன சொல்கிறதென்றால், அப்படி NOTA-விற்கு அதிக வாக்குகள் வந்தாலும்கூட போட்டியிட்ட வேட்பாளர்களில் யார் அதிக வாக்குகள் பெற்றிருக்கிறார்களோ அவரே தேர்தலில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். 

   இது என்ன நியாயம் என்று கேட்கிறீர்களா ? உங்கள் கேள்வி எனக்கு புரிகிறது. இந்த தேர்தலில் NOTA ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ஆனால் அது நம் அரசியலில் பெரிய தாக்கத்தை இப்போது ஏற்படுத்தாதுதான், இருப்பினும் இன்று நாம் போடும் இந்த NOTA விதை பல வருடங்களுக்குப் பிறகு ஒரு சிறந்த பழத்தை நமக்கு தரும். எப்படி என்று கேட்கிறீர்களா ?

  ஒவ்வொரு அரசியல் கட்சிகளும், சுயேச்சை வேட்பாளர்களும் சரி, எவரும் குற்றப்பிண்ணனி இல்லாதவராக இருக்க  வேண்டும், உண்மையாகவே தங்கள் தொகுதி மக்களுக்கு நன்மை செய்பவரையே தேர்தலில் நிறுத்தவேண்டும் என்கிற தார்மீக பொறுப்பை அவர்களுக்கு கொடுக்கும். அப்படி அவர்களுக்கு பொறுப்பு வராவிட்டாலும், காலப்போக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு பெரும்பாலான மக்கள் NOTA-வை தேர்ந்தெடுத்தால் அங்கு மீண்டும் தேர்ந்தல் நடத்தவேண்டும் என்றும் சொல்லலாம். பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மீண்டும் தேர்தல் நடத்த அதிக செலவாகும் என்று.

  தவறான ஒருவரை தேர்ந்தெடுத்து நம் அரசாங்கம் இழக்கப்போவதைவிட, திறமையான ஒருவரை மீண்டும் தேர்ந்தெடுக்க ஆகும் தேர்தல் செலவு பெரிதல்லவே. மக்களின் விருப்பம் என்னவோ அதைத்தான் செய்யவேண்டும். பணம் அதிகம் செலவு ஆகும் என்பதால் மக்களுக்கு விருப்பமில்லாத ஒருத்தரை எப்படி தங்கள் பிரதிநிதியாக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் சொல்லுங்கள்.

  இம்முறை என் வாக்கு யாருக்கு என்பது நான் சொல்ல வேண்டியதில்லை. இம்முறை முதல்முறையாக வாக்களிக்கப் போகிறேன். இப்போது இல்லாவிட்டாலும் பின்னாளில் என் வாக்குக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்..

* தினேஷ்மாயா *

















0 Comments: