காதலை சொல்வது எப்படி ?
உலகத்தில் இருக்கும் ஒருதலை காதலர்களின் மனதில் தினம் தினம் தீயாய் எரிந்துக்கொண்டிருக்கும் கேள்வி இது.
எப்படி தன் காதலை சொல்வது எப்போது சொல்வது இன்னும் இப்படி பல கேள்விகள் இருந்துக்கொண்டேதான் இருக்கிறது.
இந்த பதிவை என் நண்பர் ஒருவர் கேட்டுக்கொண்டதால் இங்கே பதிவு செய்கிறேன். இது அவருக்கு மட்டுமின்றி மற்றவர்க்கும் கொஞ்சம் உதவியாய் இருக்குமென நம்புகிறேன்.
இங்கே ஒரு ஆண் பெண்ணிடம் காதலை எப்படி சொன்னால் நல்லா இருக்கும்னு பார்க்கலாமே. ஏன்னா ஒரு ஆணின் மனசு ஒரு ஆணுக்குத்தான் தெரியும் இல்லையா..
என் விளக்கங்கள் கொஞ்சம் விளையாட்டாய் தெரிந்தாலும் கூர்ந்து படியுங்கள். உங்கள் மனதிடம் ஒப்படைத்துவிடுங்கள் பதில் சொல்லும் பொறுப்பை.
முதலில் சொல்லுங்கள்.. நீங்கள் உண்மையாகவே அவளை விரும்புகிறீர்களா. உயிருக்கு உயிராக விரும்புகிறீர்களா. அவள்தான் உங்கள் வாழ்க்கைதுணை என்று உறுதியாக நம்புகிறீர்களா. அப்படியானால் இந்த பதிவை மேற்கொண்டு நீங்கள் படிக்கலாம். இல்லையென்றால் வேறு வேலை எதாச்சும் இருந்தா பாருங்க.
ம்.. அவள் தான் உங்கள் வாழ்க்கை துணை என்று மனதில் உறுதியாய் பொருத்திட்டீங்க இல்லையா.
சரி..
அவளுக்கு நீங்கள் அவளை விரும்புவது தெரியுமா. அதாவது நீங்கள் விரும்புவது அவளுக்கு அவள் தோழிகள் வாயிலாகவோ அல்லது உங்கள் நண்பர்கள் மூலமோ அல்லது உங்கள் செயல்கள் மூலமாகவோ அவளுக்கு தெரியுமா.தெரியவில்லை என்றால் அதை முதலில் தெரியப்படுத்துங்கள். நான் என்ன சொல்ல வரேன்னா, நீங்கள் அவளை விரும்புவது அவளுக்கு உங்கள் செயல்கள் மூலம் தெரியப்படுத்துங்கள். இதுதான் முதல் கட்டமாக இருக்க வேண்டும். இதையெல்லாம் விடுத்து எடுத்த எடுப்பிலேயே காதலை சொல்லி விடாதீர்கள்.
அப்புறம் இன்னுமொரு விஷயம். அவள் வேறு யாரையாவது விரும்புகிறாளா என்பதையும் தெரிஞ்சுக்கனும். சரியா.
உங்களுக்கு மட்டுமே அவளை பிடித்திருக்கனும் உங்களை மட்டுமே அவளுக்கு பிடித்திருக்கனும் என்றில்லையே.
அப்புறம் அவளிடம் பேசுங்கள். முதலில் நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்களை அவள் புரிஞ்சுக்க வாய்ப்பை கொடுங்கள். அவளை நீங்கள் புரிஞ்சுக்க முயற்சி செய்யுங்க. பார்த்ததும் காதல் தவறில்லை. ஆனால் அழகைவிட அன்பு மட்டுமே கடைசி வரைக்கும் கூட வரும் என்பதை மறந்துடாதீங்க. அவளைப்பற்றி முழுசா தெரிஞ்சுக்கோங்க. அதே சமயம் அவளுக்கு உங்களைப் பற்றி நல்ல எண்ணம் வரும்படி நடந்துக்கோங்க. அதற்கு முன்னாடி தப்பான பழக்கம் ஏதாச்சும் இருந்தா விட்டுடுங்க. அவளுக்கு செய்யுற துரோகம் அது அதோடில்லாமல் அது அவளுக்கு தெரியவரும்போது அதுவே உங்கள் காதலுக்கு முதல் எதிரியாய் மாறிடவும் வாய்ப்புகள் இருக்கு.
அவள் உங்களுடன் பேசவே மறுக்கிறாள், உங்களை பார்க்கவே வெறுக்கிறாள் என்றால், அவளை தூரத்தில் இருந்து பாருங்கள். நீங்கள் பார்ப்பதை அவளும் பார்க்க வேண்டும். தினமும் அவளை நீங்கள் பார்ப்பதைவிட அவள் உங்களை தினமும் பார்க்க வேண்டும். இதற்கு நீங்கள் என்ன செய்வீங்களோ எனக்கு தெரியாது. எப்படியாவது அவள் உங்களை தினமும் ஒரு நொடியாவது பார்க்கும்படி செய்யுங்கள்.
உங்கள் இருப்பை அவளுக்கு தெரியப்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும்.
ஒருவேலை நீங்கள் ஒரு ஊரிலும் அவள் வேறு ஊரிலும் இருந்தால் அவளுடன் தொடர்பில் இருக்க பாருங்கள். முடிந்தால் தினமும் ஒருமுறையாவது அவள் குரலை கேளுங்கள். அவளிடம் பேச முயலுங்கள்.
எடுத்த எடுப்பிலேயே காதலை நேரிலோ, கடிதத்திலோ, தொலைப்பேசியிலோ சொல்ல வேண்டாம்.
இன்னொரு விஷயம். நீங்கள் அவளிடம் காதலை சொல்லும்போது நேரில் சென்று சொல்லுங்கள். வேறு எவரின் துணையும் வேண்டாம், கடிதம் அல்லது வேறு எந்தவித தொடர்பும் வேண்டாம்.
நேரில் காதலை சொல்லும் துணிச்சல் உங்களுக்கு இருந்தாலே போதும், அவளுக்கு உங்களை பிடித்துவிட்டது மாதிரிதான். காதலும் வீரமும் தமிழர் பண்பாடு. காதலை மட்டும் காட்டாதீர்கள். கூடவே வீரத்தையும் காட்டுங்கள். அதுக்காக சண்டையெல்லாம் போட சொல்லல. தைரியமாக காதலை நேரில் சொல்லுங்கள்.
அவள் செல்லும் இடத்திற்கெல்லாம் நிங்களும் செல்லுங்கள். அவள் மனதில் இடம் பிடிக்க வேறெதுவும் செய்ய வேண்டாம். அவள் பார்வையில் இடம் பிடியுங்கள். தானாகவே அவள் மனம் உங்களைப்பற்றி நினைக்கும். அதற்காகத்தான் சொன்னேன். தினமும் அவள் உங்களை பார்க்கும்படி செய்யுங்கள் என்று.
நல்ல நாள் எதுவும் பார்க்க வேண்டாம். கடவுளிடம்கூட வேண்ட வேண்டாம். உங்கள் மனதில் இருக்கும் உண்மை காதலை அவளிடம் தெரியப்படுத்த ஒரு சில சந்தர்ப்பங்கள் போதும்.
அவள் உங்களை பார்க்கும்போது சிரித்தால் அல்லது முகம் சுழிக்காமல் பார்த்தால் உடனே அவளும் உங்களை காதலிக்கிறாள் என்று அவசர படாதீர்கள். நீங்கள் பார்க்க சுமாரக இருக்கீங்கனு அர்த்தம். வேறு எதுவும் பெரிசா இருக்க வாய்ப்புகள் இல்லை.
ஒருவேலை அவள் உங்களை பார்ப்பதை தவிர்த்தால், அவள் மனதில் உங்களுக்கு இடம் கிடைப்பது கொஞ்சம் கடினம் என்று மட்டும் சொல்லலாம். அவள் மனதில் வேறு யாராவது இருக்கலாம் அல்லது அவளுக்கு உங்கள் மீது விருப்பம் இல்லாமல் இருக்கலாம். இருப்பினும் எதையும் அவசரம் காட்டாமல் பொறுமையாக முடிவு செய்யுங்கள்.
சினிமாவில் வரும் சாகசங்கள் எதுவும் தேவையில்லை. உண்மையாக இருக்கும் பையனையே ஒரு பெண் எதிர்பார்க்கிறாள். பணத்தையோ மற்ற எதயாச்சும் எதிர்பார்த்து வந்தால் அது காதல் கிடையாது. உண்மையாக இருங்கள். நீங்கள் ஏழையென்றால் பணக்காரன் போல அவளிடம் நடந்துக்கொள்ள வேண்டாம். பணக்காரன் என்றால் தாம்தூம் என்றெல்லாம் அவள் முன் செலவு செய்ய வேண்டாம். எப்போதும் ஒரு பெண்ணை பொய்யான வெளிப்பாடுகளால் கவர நினைக்காதீர்கள். உங்கள் உண்மை நிலையை வெளிப்படுத்து அவள் மனதில் இடம்பிடிக்க நினையுங்கள். அதுதான் எப்போதும் நிலைத்திருக்கும்.
எடுத்த எடுப்பிலே காதலை சொல்லாதீர்கள். கொஞ்சம் பொறுத்திருந்து சொல்லுங்கள். ஆனால் காதலை நேரில் சொல்லுங்கள், அவளிடன் தனிமையில் சொல்லுங்கள். அவள் பதிலுக்காக காத்திருங்கள். மாத கணக்கில் காத்திருக்காதீர்கள். உங்கள் காதலை சொல்லிய ஓரிரு நாட்களுக்கு அவளுக்கு சிந்திக்க நேரம் கொடுங்கள். அவளாகவே உங்களிடம் எதுவும் சொல்ல மாட்டாள். நீங்கள்தான் சில நாட்கள் கழித்து அவளை அணுக வேண்டும். அப்போதே உங்களுக்கு அவளின் செயல்கள் மூலம் அவளின் விடை தெரிந்துவிடும்.
காதலை இப்படித்தான் சொல்ல வேண்டும் என்றெல்லாம் எவனும் எழுதிவைத்துவிட்டு செல்லவில்லை. என் கதையை கேட்டால் அது கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கும். இருந்தாலும் எனக்கு கிடைத்த நேரத்தில் என்னால் முடிந்தமட்டும் இங்கே பதிந்திருக்கிறேன்.
Love பண்ணுங்க Boss.. Life நல்லா இருக்கும் !
* தினேஷ்மாயா *