கொஞ்சம்..

Friday, April 12, 2013


       நான் யார் என்று பல சமயங்களில் எனக்கு நானே கேட்டுக்கொண்டதுண்டு. இந்த வாழ்க்கை நாடகத்தில் என் கதாபாத்திரம் என்ன, என் குணாதிசயம் என்னென்ன என்றெல்லாம் நான் அதிகம் சிந்தித்திருக்கிறேன். எனக்கு விவரம் தெரிந்த ஆரம்பகாலத்தில் விளையாட்டுதான் அதிகம் எனக்கு பிடிக்கும். பிறகு கொஞ்சம் படிப்பில் கவனம் செலுத்தியதால் வேறு எங்கும் கவனம் சிதறவில்லை. விடலைப்பருவம் வந்ததும் அந்த பருவத்திற்கே உரியதான நக்கல்,கிண்டல், சேட்டைகள் தொடர்ந்தது. பிறகு அவள் என்னுள் வந்தாள். காதலும் என்னுள் எட்டிப்பார்த்தது. நான் இருக்கும் இடத்தில் அனைவரும் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதற்காக அவள் கொஞ்சம் கொஞ்சமாய் என்னை மாற்றினாள். நானும் அவ்வாறே மாறினேன். எப்போதும் அனைவரிடத்தும் சிரித்துப்பேசி அனைவரின் கவலைகளையும் என்னுடம் பேசும்போது மறக்கவைக்கும் திறன் ஆண்டவனால் கிடைத்தது. காதலும் ஒருபக்கம் என் மனதில் வேறூன்றி இருந்தது.

      பொதுவாக நான் அதிகம் பேசுபவனாக இருந்தேன். அது காலப்போக்கில் தலைகீழாய் மாறியது. இப்போதெல்லாம் அதிகம் கவனிக்கிறேன். ஒருவர் பேசினால், அவர் மனதில் என்ன நினைத்துப்பேசுகிறார், எதற்காக பேசுகிறார் இப்படி இன்னும் பலவிஷயங்களை சிந்திக்கிறேன். அதிகம் படிப்பதால் இந்த மாற்றமா என்று எனக்கு தெரியவில்லை. சைக்காலஜியும் படிக்கிறேன். அதனாலேயே மக்களின் மனநிலையை புரிந்துக்கொள்ளும் ஆவலில் அவர்களை அதிகம் பேசவிட்டு நான் கவனிக்க ஆரம்பித்துவிடுகிறேன். இதுவும் ஒருவகை கலை தான். 

    அவள் பிரிந்து சென்றதிலிருந்து சிற்சில மாற்றங்கள் என்னுள் நிகழ்ந்திருப்பதை நானேஉணர்கிறேன். அதிகம் பேசமாட்டேன். உள்மனதில் இருக்கும் விஷயங்களை அதிகம் யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள மாட்டேன். அதனாலோ என்னவோ எனக்கு நானே அடிக்கடி சொல்லிக்கொள்வேன். இவன் கொஞ்சம் அழுத்தமானவன் என்று. சாமான்யமாக என் மனதில் இருக்கும் விஷயங்களை வார்த்தைகளாக வாங்கிவிட முடியாது. ஏனோ தெரியவில்லை என் மனதை இங்கே என் வலையில் பகிர்ந்துக்கொண்ட அளவிற்கு அவளைத்தவிர வேறு எவரிடமும் பகிர்ந்ததில்லை. அப்படியொரு நபரை இறைவன் கொடுக்கவில்லை என்று சொல்லிவிடமுடியாது. அப்படியொரு நபரை நான் தேடிசெல்லவில்லை என்றும் சொல்லலாம். ஆரம்பத்தில் மாயா என்னும் என்னவளை தேடிக்கொண்டிருந்தேன். இன்னும் அந்த தேடல் என் மனதில் இருக்கிற்து. ஆனாலும் அவளே என்னைத்தேடி வரட்டும் நான் தேடி கலைத்துவிட்டேன் என்று மனம் சொல்கிறது.

     இந்த அழுத்தமான மனதை பகிர்ந்துக்கொள்ள எவரும் வேண்டாம். தனியாய் இருப்பதிலும் ஒரு சுகம் இருப்பதை இப்போது உணர்கிறேன் நான். ஆனாலும் இன்னொரு உண்மை என்னவெனில், இல்லற வாழ்வில் இருக்கும் வலியும் சுகமும் தனிதான்...

0 Comments: