பரதேசி திரைப்படத்தைப் பற்றிய என் கருத்துக்களை இங்கே பதியவேண்டும் என்று பல வாரங்களாக நினைத்திருந்தேன். இன்றுதான் நேரம் கிடைத்திருக்கிறது.
“ இன்று நாம் கதகதப்பாக அருந்தும் தேநீருக்காக அன்று ரத்தம் சிந்திய அந்த ஏழை மக்களின் உண்மை கதை ... ” என்று சொல்லி படத்தை துவங்குகிறார் இயக்குனர்.
1939-ஆம் ஆண்டில் துவங்குகிறது கதை. அன்றைய காலகட்டத்தில் இருந்த பேச்சு வழக்கு, உடை, பாவனைகள் எல்லாவற்றியையும் சரியே நம் முன் கொண்டு வந்திருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே ராசாவாக வரும் அதர்வா தன் கதாபாத்திரத்தில் தனியாக தெரிகிறார். அங்கம்மாவின் குறும்புத்தனங்கள் ரசிக்க வைக்கின்றன. வெள்ளந்தியாக வரும் கதாநாயகனை அனைவரும் உபயோகித்துக்கொள்கிறார்கள்.
பஞ்சம் பிழைக்க ஊர் விட்டு ஊர் தேடி செல்கின்றனர் கிராம மக்கள். ஆனால் அவர்கள் அப்படி செல்லும்வரை அந்த கிராமத்தில் பஞ்சம் இருப்பதாக ஒரு காட்சிக்கூட வைக்கவில்லை.
பாதி கிராமமே பிழைப்பைத்தேடி கங்கானியின் ஆசை வார்த்தைகளை நம்பி ஊரை விட்டு செல்கிறது. செங்காடே பாடலை திரையரங்கில் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண் கலங்கிவிட்டேன். வரிகள் அனைத்தும் ரத்தத்தால் எழுதியிருக்கிறார் வைரமுத்து. 48 நாட்கள் பயணத்திற்கு பிறகு என்றதை பார்த்ததும் மனம் ஒரு நொடி துடிக்கவே இல்லை. இந்த அளவிற்கெல்லாம் நம் முன்னோர்கள் கஷ்டப்பட்டிருப்பார்களா என்று நினைத்தும்கூட பார்க்க முடியவில்லை..
நான் மேலே பதிவு செய்திருக்கும் காட்சி, திரைப்படத்தில் இடைவேளை காட்சி. என்னைப்பொறுத்தவரை இதுவரை வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் முதலிடம் இந்த காட்சிக்கு நான் தருவேன்... அந்த காட்சி சொல்லும் அர்த்தத்தை புரிந்துக்கொண்டப்பின் என்னால் திரையரங்கில் ஒரு நொடிகூட உட்காரமுடியவில்லை.... மனதை வாட்டி எடுத்துவிட்டது அந்த காட்சி.
பல நாட்கள் போரட்டத்திற்குப் பிறகு ஒருவழியாக தேயிலைத் தோட்டம் வந்தடைகிறது அந்த பாதி கிராமம். அங்கு அவர்களுக்கு வேலையும் கொடுத்துவிட்டு சம்பளம் கொடுக்கிறோம் என்ற பெயரில் கொள்ளையடிக்கிறது ஒரு கூட்டம். வைத்தியம் பார்க்க, தாயத்து கட்ட இப்படி ஒவ்வொருவரும் கூலியை பிடுங்கிக்கொள்ள ஊருக்கு திரும்பவே முடியாத அளவிற்கு அந்த மக்களின் கதை செல்கிறது.
வெள்ளையனுக்கு கற்பை பறிகொடுத்துவிட்டு தவிக்கிறாள் ஒருத்தி. இவளைப்போன்ற ஒருத்திகள் அந்த காலத்தில் ஆயிரமாயிரம் !!
“இவள் உயிர் காத்த ஒரு சொத்தும் பறிபோனதே” வரிகள் போதும் அந்த அவலத்தை சொல்ல...
மரகதம் கதாபாத்திரமும் மனதில் நிற்கிறது.. இவளின் துணிச்சல் மிகவும் கவர்ந்தது.
படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் தனியாக நிற்கிறார்கள். அனைவருக்கும் சரிசமமான அளவில் முக்கியத்துவம் கொடுத்து அதைவிட கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, இசையாலும் வரிகளாலும் இன்னொரு அத்தியாயத்தையும் புகுத்தி பரதேசி என்னும் காவியம் படைத்திருக்கிறார் பாலா...
வெகுசில படங்களே என்னை அதிகம் பாதித்துள்ளன. அந்த வரிசையில் பரதேசியும் ஒருவன்...
@ அனைத்து திரைப்படங்களையும் திரையரங்கில் சென்று பார்க்க முயற்சி செய்யுங்கள் @
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment