நீதானே என் பொன்வசந்தம்

Tuesday, December 25, 2012




 நேற்று இரண்டாவதுமுறையாக நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்தேன். ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் புதிதாய் பார்க்கும் அனுபவம் எனக்கு. பாடல்கள்தான் என்னை அதிகம் கவர்கிறது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வருவது போலவே சில வசனங்களும் வசன உச்சரிப்புகளும் இருப்பதால் அந்த படத்தையே சில காட்சிகள் நினைக்க வைக்கிறது. பல காட்சிகள் கௌதம் மேனனின் தனி பாணியில் அமைத்திருக்கிறார் அவைகளை வெகுவாக ரசித்தேன். 

437 மின்னஞ்சல்களை நித்யாவிற்காக எழுதி அவளுக்கு அனுப்பாமல் ஒரே நாளில் அத்தனையையும் வருன் அவளுக்கு அனுப்புவது சற்று வித்தியாசமாக இருந்தது.

Punish me, but pls Forgive me - வசனம் ரொம்பவே பிடித்திருந்தது.

Forget and Forgive - என்னும் தலைப்பில் சமந்தா பேசுவதை பெரும்பாலும் யாரும் கவனித்திருக்க மாட்டார்கள், அப்போது சந்தானத்தின் பேச்சைத்தான் அனைவரும் ரசித்திருப்பார்கள். ஆனால் அப்போது சமந்தா ஆங்கிலத்தில் பேசுவது ரொம்பவே கவர்ந்தது. நமக்கும் சரி, நம்மை அதிகம் நேசித்தவர்க்கும் சரி இரண்டாவது வாய்ப்பு ஒரு வரப்பிரசாதம் என்று சொல்வார். மிகப்பெரிய தத்துவம் இது, ஆனால் என்ன ஆங்கிலத்தில் சொல்வதால் பலருக்கு இது சென்று சேராமல் போய்விட்டது.

இதை படமாக பார்ப்பவர்களுக்கு நிஜமாகவே வெறுப்புதான் வரும். ஆனால் இதை ஒரு காதலாக பார்ப்பவர்க்கு நிஜமான காதல் போன்றே தோன்றும். நேற்று என் நண்பருடன் படம் பார்க்க சென்றேன். கொஞ்சம் அறுவை என்று ஆரம்பத்தில் சொன்னவர் இடைவேளையில் தன் காதலைப்பற்றி முதல்முறையாக என்னிடம் பேசினார். அப்போது அவரிடம் சொன்னேன், இதுதான் இந்த திரைப்படத்தின் வெற்றி. உங்களுக்குள் மறைந்திருக்கும் உங்கள் காதலை வெளிகொண்டுவரும். அதான் போஸ்டரிலேயே போட்டிருக்கிறார்கள்.. This could be your love story !!! என்று.

கௌதம் மேனன், இசைஞானியுடன் இணைந்து பணியாற்றவே இந்த திரைப்படத்தை எடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். கதையைவிட இசைக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். இசையும் பாடல்களும் தனியாக இல்லாமல் திரைப்படத்தோடு ஒருங்கே பயணிப்பதால் படம் வேறு இசை வேறு என்று பிரித்து பார்க்க முடியவில்லை.

இதை கதையாக பார்க்காமல் காதலாக பார்க்கிறேன் நான். இன்னும் பல முறை பார்ப்பேன் என்று உறுதியாக கூறிவிட்டு இப்போதைக்கு விடைப்பெறுகிறேன்.


- அன்புடன்

****தினேஷ்மாயா****

0 Comments: