இன்று பழைய செய்தித்தாள்களை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தேன். ஏராளமான செய்திகள் என் கண்முன் தென்பட்டது. முல்லை பெரியாறு அணை பிரச்சனை, கூடங்குளம் பிரச்சனை, லோக்பால் வலியுறுத்தி அன்னா ஹசாரே சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தது, FIFA கால்பந்து போட்டி, ஜனாதிபதி தேர்தலில் யாரை நிறுத்துவது என்று கட்சிகளின் ஆலோசனைகள், சாய்னா இந்தோனேசியா இறகுப்பந்து போட்டியில் தங்கம் வென்றது, 2G வழக்கில் இருந்து ராஜா ஜாமின் பெற்றது, அமைதிக்கான நோபல் பரிசை 3 பெண்கள் பகிர்ந்துக்கொண்டது, அக்னி ஏவுகனையை இந்தியா வெற்றிகரமாய் விண்ணில் செலுத்தியது, சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரம் அடைந்துவருவது, இப்படி இன்னும் பல செய்திகளை நான் கடந்து வந்தேன். செய்திகளை மக்களுக்கு தெரிவிக்கும் ஊடகங்களும் சரி, மக்களும் சரி மறதி என்பதை தங்களின் பூர்வீக சொத்தாகவே வைத்து வருகின்றனர். மறதி ஒரு தேசியவியாதி என்று ஒரு திரைப்படத்தில் சொல்வார் நடிகர் கமலஹாசன். அது உண்மைதான் போலும். நேற்றுவரை முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் தமிழகமும் கேரளமும் அடித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த பிரச்சனைக்கு தீர்வு இன்னும் கிடைத்தபாடில்லை. மக்களின் போராட்டம் மற்றும் முடிந்துவிட்டது. அடுத்த செய்தி வந்ததும் அதைப்பற்றி கவனிக்க சென்று விடுகின்றனர் மக்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும் உலக நியதிதான். ஆனால் அது எல்லா விஷயங்களிலும் பொருந்தாதே. 2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட ஒரு தீவிரவாதியை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைக்க இந்திய அரசு வேண்டுகோள் விடுத்தது என்று படித்தேன். எனக்கு சிரிப்புதான் வந்தது. 2008ஆம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்பு தாக்குதலில் ஈடுபட்டு உயிரோடு பிடிக்கப்பட்ட ஒரே தீவிரவாதியை இன்னும் பத்திரமாக ஜெயிலில் வைத்துக்கொண்டு அவனுக்கு மக்களின் வரிப்பணத்தில் பல அடுக்கு பாதுக்காப்பு ஏற்படுத்திக்கொண்டு வழக்கையும் முடிக்காமல், தண்டனையையும் வழங்காமல் அவனை ஒரு விருந்தினரை போல பார்த்து வருகின்றனர். அதேபோல இன்னொரு விருந்தினரை தான் இந்தியா பாகிஸ்தானிடம் கேட்கிறது. அந்த தீவிரவாதியை இந்தியாவிடம் கொடுத்துவிட்டால் மட்டும் அடுத்த நொடியே அவனுக்கு மரண தண்டனை விதித்து அதை நிறைவேற்றவா போகிறீர்கள். உடனடி தீர்வு எடுக்கும் திறமை இன்றைய அரசியல்வாதிகளுடமும் அதிகாரிகளிடமும் இல்லை. அதனால்தான், வேறொரு பிரச்சனை ஒன்று வந்தால் இருக்கும் பிரச்சனையை விட்டுவிட்டு அடுத்த பிரச்சனையை பார்க்க சென்றுவிடுகின்றனர், பின் வேறொரு பிரச்சனை வந்தால் இதை விடுத்து அந்த பிரச்சனையை பார்க்க சென்றுவிடுகின்றனர். இது தொடர்வதால், பல உடனடி தீர்வு காண வேண்டிய பல பிரச்சனைகளை நாம் மறந்தே விடுகிறோம். மறதி என்பது நிச்சயம் ஒரு தேசியவியாதிதான் என்பது உண்மைதானே…
- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****
0 Comments:
Post a Comment