சமீபத்தில் படித்த செய்தி இது. சுமார் 25 கோடி
இந்தியர்கள் பட்டினியால் வாடுகின்றனர். இதை படிக்கும்போது மரணம் மனதை தொட்டுவிட்டு
சென்றது. என் மனம் இறந்துவிட்டதை உணர்ந்தேன். நாம் உயிர் வாழ்வதில் மட்டுமே அக்கறை
கொண்டிருக்கும் நாம், மற்றவரைப்பற்றி கொஞ்சமும் சிந்திப்பதில்லை. மற்றவர் என்றால் எங்கோ
வாழ்பவனை சொல்லவில்லை. நம் தெருவில் வசிக்கும் உங்களுக்கு நன்றாக தெரிந்த மனிதர்களைத்தான்
சொல்கிறேன். தினமும் என்னிடம் யாசகம் கேட்பவர்களை சராசரியாக ஒரு நாளுக்கு 5 முதல்
6 பேரையாவது சந்திப்பேன். நான் அவர்களிடம் பலமுறை கேட்கும் ஒரே விஷயம், பணம் தர விருப்பமில்லை
பசிக்கு சாப்பாடு வாங்கி தரேன் என்று. ஆனால் அவர்களில் பெரும்பாலும் மறுத்துவிடுவார்கள்,
சாப்பாடு வேண்டாம், பணம் தந்தால் போதும் என்பார்கள். அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக
அவர்கள் பணம் கேட்கிறார்களா என்று எனக்கு தெரியாது. ஆனால் எப்போதும் மற்றவர் வயிறார
உணவளிக்கத்தான் நான் அதிகம் விரும்புவேன். பணத்தை தருவதைவிட பசியை போக்குவதைத்தான்
அதிகம் ஊக்கப்படுத்துவேன் நான். பட்டினியின் கொடுமையை நன்கு அறிந்தவன் நான். வாரக்கணக்கில்
எல்லாம் கல்லூரி படிக்கும் போது காலம் ஓட்டியதுண்டு. பத்து ரூபாய்க்கு ஒரு பிஸ்கட்
பாக்கெட்டை வாங்கி வைத்துக்கொண்டு அதை பத்து நாளுக்கு வைத்து சாப்பிட்ட அனுபவமெல்லாம்
உண்டு எனக்கு. அப்போதெல்லாம் மற்றவருக்கு உதவ வேண்டும் என்றெல்லாம் என் மனம் சிந்ததில்லை.
என் பசிக்கு உணவு இருந்தால் சாப்பிடுவேன், இல்லையேல் பட்டினிதான். இப்போது சம்பாதிக்க
ஆரம்பித்த பின்னர்தான் உள்ளுக்குள் ஒளிந்துக்கொண்டிருந்த மனிதாபிமான் கொஞ்சம் கொஞ்சமாய்
எட்டி பார்க்க ஆரம்பித்தது. மற்றவர் துயரை துடைக்க முயலும் எண்ணம் வளர்ந்தது. ஆனால்
ஒருவன் மட்டும் கத்தி என்ன செய்வது, இருந்தாலும் என்னால் இயன்றதை செய்துக்கொண்டிருக்கிறேன்.
வலையில் மற்றவர்கள் செய்யவும் என் பதிவுகள் மூலம் வலியுறுத்திக்கொண்டிருக்கிறேன்.
பசி என்பதைவிட,
பட்டினி மிகக்கொடிய நோய். ஒரு வேளைக்கு உணவு இல்லையென்றால் பசியோடு இருக்கிறான் என்று
சொல்வோம். பல வேளைகள் உணவு கிடைக்காமல் இருந்தால் பட்டினியாஇ கிடக்கிறான் என்போம்.
பட்டினி ஒரு மனிதனை கொலையும் செய்ய தூண்டும் என்பதை உளவியலாளர்கள் பலரும் ஏற்றுக்கொண்ட
உண்மை. 120 கோடி மக்கள் வாழும் நம் நாட்டில் ஏறக்குறைய கால்வாசி பேர் பட்டினியால் வாடுகின்றனர்
என்பது எவ்வளவு அவலமான நிலை என்பதை பாருங்கள். நாம் சாப்பிட்டுவிட்டு மிச்சம் வைக்கும்
உணவு கூட மற்றவருக்கு அருசுவை உணவாய் தோன்றும். ஆனால் அந்த உணவு கூட கிடைக்காமல் வாடுவோர்
எத்தனையோப்பேர். இவ்வுலகம் எவ்வளவோ மாற்றங்களை கண்டுக்கொண்டுதா வருகிறது அறிவியலில்
முன்னேற்றம் கண்டு பற்பல சாதனைகளை செய்து காட்டியும் என்ன பயன். எல்லாம் இந்த வயிற்றுக்குத்தானே.
உங்கள் கையில் ஆயிரம் ரூபாய் இருக்கிறது. என்னிடம் ஒரு பைசா கூட இல்லை. உங்களிடம் இருப்பதில்
ஒரு பத்து ரூபாயை எடுத்து ஆளுக்கு 50 பைசா என 20 பேருக்கு கொடுக்கலாமே. அப்படி செய்வதால்
உங்கள் ஆயிரம் ரூபாய் ஒன்றும் பெரிதளவில் குறைந்துவிடப்போவதில்லையே. அதுப்போலத்தான்,
உங்களிடம் பிறருக்கு உணவளிக்கும் சக்தி இருந்தால், அதை செய்யலாமே. ஒரு நாளுக்கு ஒருத்தருக்காவது
உணவளிக்கலாமே. என் அலுவலகத்தில் ஒரு நாள் என் உயரதிகாரி ஒருவருக்கு நான் பணம் கொடுத்து
உணவு வாங்கி வர சொன்னேன். அவருக்கும் எனக்கும் எப்போதுமே ஆகாது. அது என் அலுவலகத்தில்
எல்லோருக்கும் தெரியும். நான் அவருக்காக உணவு வாங்கி வர சொல்லி நான் பணம் கொடுத்தபோது,
என்னுடன் வேலை செய்பவர் கேட்டார். என்ன சார், நீங்க அவருக்கு சாப்பாடு வாங்கி வர சொல்றீங்க
என்று. நான் சொன்னேன், மணி 3 ஆகிவிட்டது, அவரும் மனிதர்தானே. எனக்கும் அவருக்கும் அலுவல்
விஷயமாக ஆயிரம் பிரச்சனை இருக்கலாம், அதை மத்த விஷயங்களில் காட்டக்கூடாது. மற்றவருக்கு
உணவளிக்கும் சக்தியை இறைவன் எனக்கு கொடுத்திருப்பது ஒரு வரம். அந்த வரத்தை நான் பயன்படுத்தாமல்
இருப்பதுதான் தவறு என்றேன். உண்மைதானே நான் சொன்னது. மற்றவருக்கு உதவி செய்யும் சக்தி
இருந்தால் அதை செய்யாமல் இருப்பது பாவம் என்று பைபிளில் படித்திருக்கிறேன். அந்த பாவத்தை
நாம் செய்யலாமா. உங்களால் இயன்றவரை மற்றவருக்கு உணவளிக்க முயற்சி செய்யுங்கள். அது
யாராக இருந்தாலும் சரி. ஆனால் என்ன, சுயமாய் சம்பாதிக்க முடியாத மக்களுக்கு உங்கள்
சென்று சேரும்படி பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் தோழர்களுக்கும் உறவினர்களுக்கும் விருந்து
வைப்பது வேறு, முகமே தெரியாத அன்பர்களுக்கு உதவுவது என்பது வேறு. சிந்தியுங்கள் மக்களே.
மனிதனை வாழ வைக்கிறோமோ இல்லையோ, மனிதத்தை வாழ வைப்போம்.
- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****
0 Comments:
Post a Comment