சொல்லி இருக்கலாம்ல...

Saturday, May 18, 2013



  
     உன் காதலை என்னிடம் சொன்னாய். உன் அன்பு எவ்வளவு புனிதமானது எவ்வளவு ஆழமானது என்று எனக்கு புரியவைத்தாய். என்னை உன் குழந்தைப்போல் பார்த்துக்கொண்டாய். எல்லாவற்றிலும் என்கூட இருந்தாய். நான் இதுநாள் வரை அன்னையின் மடியில்கூட படுத்து அழுததில்லை. என் சோகத்திலும் கூட உன் மடியில்தான் அதிகம் படுத்து அழுததுண்டு. எல்லாவற்றையும் பகிர்ந்துக்கொண்டோம். தினமும் பேசுவோம். அன்று நடந்த அனைத்தையும் என்னிடம் பகிர்ந்துக்கொள்வாய். வீட்டு பிரச்சனை, வேலை செய்யும் இடத்தில் நடந்தவை, உன் சந்தோஷம், உன் வலி, உன் துக்கம், உன் அனைத்தையும் என்னிடம் சொல்லி பகிர்ந்துக்கொண்டாய்.
  
    நம் வாழ்க்கைக்காகவும் சமூகத்திற்காகவும் நான் ஒரு பெரிய பதவியில் இருந்து அனைவர்க்கும் உதவி செய்யவேண்டும் என்று சொன்னாய். நானும் படிக்க ஆரம்பித்தேன். நீ தந்த ஊக்கம்தான் எங்கோ இருந்த என்னை இங்கே கொண்டு வந்திருக்கிறது. நான் என்று படிக்க ஆரம்பித்தேனோ அன்று முதலே உன் கஷ்டங்களை நீ என்னிடம் சொல்வதை குறைத்துக்கொண்டாய். நீ என்னைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாய் பிரிந்து செல்வதை உணர்ந்த நானும் உன்னைத்தேடி வந்தேன். எனக்கு அறிவுரை சொல்லி என்னை படிப்பில் கவனம் செலுத்தவைத்தாய். நீ சொன்னபடி, உனக்காகவும் சமூகத்திற்காகவும் என்னை முழுவதுமாய் படிப்பில் ஈடுபடுத்திக்கொண்டேன். எல்லாம் நன்றாக சென்றுக்கொண்டிருந்தது. நீ அதிகம் உயிராய் நேசித்த உன் தந்தை இறைவனடி சேர்ந்ததையும்கூட எனக்குத்தான் முதலில் சொல்லி அழுதாய். நானும் நேரில் வந்து உனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்தேன். ஆனால் அதற்குப்பின் உன் வீட்டில் ஏற்பட்ட எந்தவொரு பிரச்சனையையும் என் கவனத்திற்கு நீ கொண்டுவரவே இல்லை. எத்தனையோ விஷயங்கள் என்னிடம் சொல்லியிருக்கிறாய் நீ. உன் வாழ்க்கை சம்பந்தமான பிரச்சனையை என்னிடம் சொல்லவே இல்லை. ஒரு மாதத்திற்கும் மேலாக என்னிடம் பேசாமலே இருந்தாய். மனம் கேட்காமல் தங்கையிடம் உன்னை சென்று பார்க்க சொன்னேன். நீ என்னைவிட்டு பிரிந்து சென்ற விஷயத்தை அவள் சொல்லித்தான் நான் தெரிந்துக்கொண்டேன். என் நலனுக்காக உன் வாழ்க்கையை நீ தியாகம் செய்ய துணிந்திருக்கிறாய் ஆனால் அதில் என் காதலும் அடங்கி இருக்கிறது என்பதை மறந்துவிட்டாயா. நீ எந்தமுடிவையும் எடுக்கும் முன்பு என்னிடம் யோசனை கேட்பாய். இந்த விஷயத்தில் என் நன்மைக்காக தியாகம் செய்கிறேன் என்று என்னை பிணமாக்கிவிட்டு நீ சென்றுவிட்டாய். எனக்கு தனிமை பிடிக்கும் என்று உனக்கு தெரியும். அதற்காக என்னை இப்படி அனாதையாகவே விட்டுவிட்டு செல்வாய் !!!???

  இன்றும் என் மனம் கேட்பது ஒரேயொரு விஷயம் தான். நீ முடிவெடுக்கும் முன், உன் பிரச்சனையை என்னிடம் ஒருமுறையாச்சும் மனம்விட்டு “சொல்லியிருக்கலாம்ல!?”

- கண்ணீருடன்
* உன் தினேஷ் *

0 Comments: