என் வருங்கால மனைவியாகிய தோழிக்கு..
என் மாயாவிற்கு!
நீ யாரென்று எனக்கு தெரியாது. நான் உன்னை பார்த்ததும் இல்லை, பேசியதும் இல்லை. உன் பெயர்கூட எனக்கு தெரியாது. ஆனால், என்றைக்காவது ஒரு நன்னாளில் நீ இதை கண்டிப்பாக படிப்பாய் என நினைக்கிறேன். உனக்காக எழுதுகிறேன் இதை..
உனக்கும் சரி, எனக்கும் சரி.. கடந்தகாலம் நிறைய கற்றுகொடுத்து இருக்கும். பல வலிகள், நினைவுகள், சந்தோஷ தருணங்கள், கண்ணீர் துளிகள், இப்படி இன்னும் பல..
கடந்தகால கவலைகள் எல்லாம் மறந்து புதிதாய் ஒரு உலகில் நமக்கான உலகில் வாழ்வோம். எனக்காக நீ. உனக்காக நான். வேறென்ன இருந்துவிடப்போகிறது இவ்வுலகில் அன்பைவிட பெரியதாய் ?
அனைவரும் அழகின் முக்கியத்துவம் பற்றி பேசிக்கொண்டிருக்க நான் உன் அன்பின் உன்னதத்துவத்தை பேசிக்கொண்டிருக்கிறேன். உன் உண்மையான அழகு உன் முகத்தில் இல்லை, உன் உள்ளத்தில்தான் உள்ளது என்பதை நானறிவேன். என் உள்ளத்தின் அன்பையும் என்னையடைந்தப்பின் நீ உணர்ந்துக்கொள்வாய்..
உன்னை எவரிடத்திலும் விட்டுக்கொடுக்காமலும், உன்னிடம் விட்டுக்கொடுத்தும் வாழும் வாழ்க்கையே என்றும் மகிழ்ச்சி தரும் என்பதை நானறிவேன். என் ஆதிக்கம் என்றும் உன்மேல் இருக்காது. இருவரும் சமமே. உனக்கான இடம் என்றும் உனக்கு உண்டு.
எத்தனை பிள்ளைகள் பெற்றாலும், என் முதல் குழந்தை நீ. உன் முதல் குழந்தை நான். என் இரண்டாம் தாய் நீ. உன் இரண்டாம் தாய் நான்!
என் விரல்களின் இடையில் இதுநாள்வரையில் இருந்த இடைவெளியை போக்க உன் விரல்கள் கொடு. கைகள் கோர்த்து நடப்போம். உலகமெங்கும். உலக மயக்கங்களில் சிக்கிக்கொள்ளாமல் உண்மையான இயற்கையின் விதிப்படி வாழ்வோம்.
பணம் என்பது மனிதன் படைத்த ஆயுதம். அந்த ஆயுதம் நம்மை தாக்காமல், அதில் சிக்கி தவிக்காமல், நிம்மதியான வாழ்க்கையை வாழ்வோம்.
எனக்குகு பிடித்த ஜன்னலோர இருக்கையை இனி உனக்காக தியாகம் செய்கிறேன். ஒவ்வொரு பயணத்திலும் சரி வாழ்வின் அனைத்து தருணங்களிலும் சரி, உனக்கு தோள் கொடுத்து உன் தோழனாய் வாழ்க்கை முழுதும் பயணிப்பேன்.
உன் இமை நான். என்னை மீறி உன் கண்களில் இருந்து கண்ணீர் எப்படி வந்துவிடும் என்று பார்த்துவிடுகிறேன்.
என்னிடம் கொட்டிக்கிடக்கும் அன்பை வந்து அள்ளிக்கொள். உன் அன்பை நான் கொள்ளைக்கொள்கிறேன்.
சொகுசாக பஞ்சு மெத்தையில் படுப்பதைவிட அசதியில் உன் மடியில் தலைசாய்த்து உறங்கும் சுகம் போதும் எனக்கு.
உன் கணவன் என்பதைவிட நான் உன் உயிர்தோழன் என்று உரக்க சொல் இந்த உலகத்துக்கு.
நம் வாழ்க்கை என்னும் வசந்த நூலிற்கு நாமிருவரும் சேர்ந்தே முன்னுரை எழுதுவோம். நமக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பெயரையே அந்த நூலிற்கும் சூட்டுவோம். காதல், காமம், விருப்பு, வெறுப்பு, மகிழ்ச்சி, துக்கம், அன்பு, பாசம், நேசம், சண்டை, அரவணைப்பு.. இப்படி இன்னும் பல அத்தியாங்களால் அந்த நூலின் பக்கங்களை நிரப்புவோம்.
நம் கடைசி காலத்தில் அந்த புத்தகத்தை புரட்டிப்பார்த்து அசைப்போடுவோம். அந்த நாற்காலியில் நான் அமர்ந்தபடி, உன் தோளில் நான் சாய்ந்தபடி..
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் !?
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது !
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment