வீட்டுப்பாடம்

Friday, June 19, 2015



      இன்றைய இந்தியாவின் கல்விமுறை எப்படி இருக்கிறது என்று அனைவருக்கும் தெரிந்ததே. ஆங்கிலேயர்கள் அறிமுகம் செய்துவைத்த கல்விமுறையையே நாம் இன்னமும் பின்பற்றி வருகிறோம், அதுவே நம் அனைவருக்கும் ஏற்ற கல்விமுறை என கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருக்கிறோம்.

          சில தினங்களுக்கு முன்னர் என் நண்பர் ஒருவர் குடும்பத்துடன் அந்தமான் தீவு சுற்றுலா சென்று வந்தார். சுற்றுலா மிகவும் அருமையாக இருந்தது என்றார். சுற்றுலா முடிந்து வந்ததும் அலுவலகத்தில் தன் குழந்தைக்கு வீட்டுப்பாடம் அதிகமாக கொடுத்திருக்கிறார்கள், அதற்கு இணையத்தில் இருந்து சில குறிப்புகளை எடுத்துத்தர முடியுமா என்று என்னிடம் கேட்டார்.

       நான் அவரிடம் கேட்டேன், முழு ஆண்டு விடுமுறையில் என்ன வீட்டுப்பாடம் ? என்று கேட்டேன். அவர் குழந்தை படிக்கும் பள்ளியில் எந்த விடுமுறை வந்தாலும் சரி, அந்த  விடுமுறை முழுவதும் வீட்டுப்பாடம் எழுதியே விடுமுறை கழிந்துவிட வேண்டும் என்பது போல் அவ்வளவு வீட்டுப்பாடம் கொடுப்பார்கள் என்றார்.

      எனக்கோ வியப்பு, என்ன கல்விமுறை இது ? என்று. விடுமுறை என்பதே கல்வியில் இருந்து நம்மை கொஞ்சம் விலக்கிக்கொண்டு வாழ்க்கையின் மற்ற சாரம்சங்களையும் புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்குதான். ஆனால், விடுமுறையிலும் வீட்டுப்பாடம் தந்து குழந்தைகளை புத்தகப்புழுக்களாக ஏன் மாற்றுகிறார்கள் என்கிற ஆதங்கம் எனக்கு. 

  உலகில் தலைசிறந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள் சொல்லியிருக்கிறார், கல்வி என்பது பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே வந்தபிறகு நம் நினைவில் என்ன மிச்சம் இருக்கிறதோ அதுதான் கல்வி என்று. கற்பது வெறும் நூல்களில் மட்டும் இருந்துவிடக்கூடாது. குழந்தைகளை வெறுமனே நடக்க விடுங்கள். அவர்கள் நடக்கும்போதே பல விடயங்களை கூர்ந்து கவனிப்பார்கள். அவர்கள் மனதில் பல கேள்விகள் எழும். அந்த கேள்விகளுக்கு பொறுமையாய் பதில் கூறுங்கள். அதுவும் ஒரு கல்விதான். அவர்களை விளையாட விடுங்கள். வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஓர் அங்கம் என்பதை கற்பார்கள். நீச்சல் அடிக்க, ஊர் சுற்ற, நண்பர்களுடன் பழக, சிறு சிறு சண்டைகள் போட, சில வாக்குவாதங்களில் ஈடுபட, பிடித்த வேலையை செய்ய இப்படி சில விஷயங்களுக்கு அவர்களுக்கு சுதந்திரம் கொடுங்கள். அவர்கள் பள்ளியில் கற்பதைவிட அதிகமடங்கு இங்கே கற்பார்கள்.

    நம் கனவுகளை குழந்தைகள் மீது திணிக்க வேண்டாம். அவர்களை அவர்களாக இருக்க விடுங்கள். அவர்கள் விருப்பம் போல் வாழ்க்கையை வாழவிடுங்கள் அதே நேரம் உங்கள் மேற்பார்வையில் எல்லாம் நடக்கட்டும். பாடம் கற்க பள்ளி இருக்க, வீட்டில் ஓர் பாடம் - வீட்டுப்பாடம் எதற்கு ?
இந்த கல்விமுறை நிச்சயம் மாறியே ஆக வேண்டும்.

* தினேஷ்மாயா *

0 Comments: