விமான நிலையம் !!

Friday, June 19, 2015



      இந்த மாதம் இரண்டுமுறை சென்னை பன்னாட்டு விமான நிலையம் செல்ல நேர்ந்தது. முதல்முறை நண்பர் ஒருவரை வெளிநாட்டிற்கு வழியனுப்ப சென்றேன், அடுத்தமுறை உறவினர் ஒருவர் வெளிநாட்டில் இருந்து வந்தார், அவரை வரவேற்க சென்றேன்.

     முதல்முறை ஒரு வித்தியாசமான உணர்வுகள், அனுபவங்கள் எனக்கு கிடைத்தது. அந்த இடம் பெரும்பாலும் சோக காட்சிகளாலும், கண்ணீராலும் சில இடங்களில் மகிழ்ச்சியாலும் நிரம்பியிருந்தது. அங்கே பல காட்சிகளை காண நேர்ந்தது. வேலைக்காக, படிப்பிற்காக, திருமணம் முடிந்து செல்வோர், வெளிநாட்டில் இருக்கும் பேரப்பிள்ளைகளை காணச்செல்வோர், இப்படியாக இன்னும் பலவிதமான பயணிகளை காணமுடிந்தது. அதுவும் சிலருக்கு, விமான பயண அனுபவம் முதல்முறையாகவும் இருக்கலாம், இங்கே உறவுகளையும் உணர்வுகளையும் விட்டு செல்லும் வலியைவிட, முதல் விமான பயணம் தரும் பீதிதான் அவர்கள் முகத்தை பெரிதும் ஆட்கொண்டிருந்ததை என்னால் உணரமுடிந்தது. என் நண்பரும் முதல் விமான பயணத்தை எண்ணி பெரிதும் பயந்தார். பலர் தங்கள் விமானம் தாமதம் ஆனதைக் கண்டு கொஞ்ச நேரம் தங்கள் உறவுகளிடம் இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கலாம் என்கிற சிறிய சந்தோசத்துடன் இருந்ததையும் என்னால் பார்கக முடிந்தது. எது எப்படி இருந்தாலும், நம் தாய்நாட்டை விட்டு செல்லும் அந்த உணர்வு இருக்கிறதே, அதை வார்த்தைகளால் வெளிப்படுத்தவே முடியாது. பள்ளி படிப்பு முடிந்ததும் , கல்லூரிக்காக சொந்த ஊரைவிட்டு வரவே மனம் அப்படி கனத்தது எனக்கு, பிறந்து வளர்ந்து நம் நினைவுகள் அத்தனையையும் ஆட்கொண்டிருக்கும் தாய்நாட்டை விட்டு வெளியில் செல்லும் அந்த முதல் தருணம் அதிகம் வலிக்கத்தான் செய்யும்.

        இரண்டாம் முறை விமான நிலையம் சென்றபோது கிடைத்த அனுபவம் கொஞ்சம் வித்தியாசமானது. பல நாட்களோ, மாதங்களோ, வருடங்களோ வெளிநாட்டில் இருந்துவிட்டு தாய்நாட்டிற்கு திரும்பும் மக்களின் முகத்தில் சொல்லமுடியாத மகிழ்ச்சியை என்னால் காண முடிந்தது. வெளிநாட்டிலேயே பேரன்/பேத்தி பிறந்திருப்பான்/ள். இதுநாள்வரை தொலைப்பேசியிலும் கணிணி வாயிலாகவுமே அவர்களின் குரலை கேட்டுவந்த தாத்தா பாட்டிக்கு அவர்களை முதன்முதலில் நேரில் பார்க்கும்போடு ஏற்படும் மகிழ்ச்சி இருக்கிறதே, அந்த உணர்வு உலகையே வென்றுவிட்டதுபோல் இருக்கும்.சொந்தங்களின் வருகைக்காக வழியையே வைத்தகண் வாங்காமல் பார்த்திருக்கும் சொந்தங்களின் கண்களில் அவ்வளவு ஏக்கம். சொந்தங்களை பிரிந்து இருந்தவர்கள் மீண்டும் வந்து சொந்தங்களை காணும்போது கட்டியணைத்து அன்பை பரிமாற்றம் செய்துக்கொள்கின்றனர். வேலைவிஷயமாக சென்றவர்கள், பல நாள் பொறுப்பை கொஞ்சம் இறக்கிவைத்துவிட்டு இங்கே வரும்போது அவர் முகத்தில் ஒருவகையான மகிழ்ச்சி. சிலர் வியாபாரம், சுற்றுலா இன்னும் இப்படி பல காரணங்களுக்காகவும் வந்தமாதிரி தெரிந்தது. அவர்கள் முகத்தில் ஒருமாதிரியான உணர்வுகள். 

உங்களுக்கு ஏதேனும் கஷ்டம் வந்தால், விமான நிலையம் வாருங்கள். பன்னாட்டு வருகையில் சென்று பாருங்கள், உறவுகளை விட்டு பிரிந்திருந்ததன் வலி எல்லாம் மறைவதை அங்கே காணலாம். பன்னாட்டு புறப்பாடு சென்று பாருங்கள். பிரிவால் நீங்கள் வருந்துகிறீர்கள் என்றால் அதைவிட பலர் அங்கே பிரிவால் வாடுவார்கள், அதைப்பார்த்து கொஞ்சம் ஆறுதல் அடைந்துக்கொள்ளுங்கள்.

விமான நிலையம் !!

எண்ணற்ற நினைவுகளையும், பிரிவின் வலையையும், மகிழ்ச்சியையும், பலரின் ஆத்மார்த்தமான உணர்வுகளையும் தாங்கி நிற்கிறது என்று எண்ணிப்பார்க்கும்போது கொஞ்சம் மனம் கனக்கவும் செய்கிறது, கொஞ்சம் லேசாக பறக்கவும் செய்கிறது. 

* தினேஷ்மாயா *

0 Comments: