நேற்றிரவு பாதி தூக்கத்தில் இருக்கிறேன். தூக்கம் வரவில்லை, படுத்துக்கொண்டு தூங்க முயற்சிக்கிறேன். அப்போது, ஒரு சிறு கனவு. தூக்கத்தில் வந்த கனவு இல்லை, விழிப்பின்போது வந்த கனவும் இல்லை. அந்த இரண்டுக்கும் இடையேயான ஓர் நிலையில் எனக்கு வந்த கனவு அது.
கடவுள்.. ஓர் சக்தி என்னிடம் எதையோ காண்பிக்கிறது. அந்த சக்தி கைகாட்டிய இடத்தை நான் உற்று நோக்குகிறேன். அது ஒரு வெற்றிடம். அதுதான் எல்லாவற்றின் முடிவு. அதனருகில் சென்று பார்க்கிறேன். இந்த உலகத்தின் அனைத்தும் என்னிடமிருந்து என்னைவிட்டு விலகி செல்கிறது, அல்லது நான் அவையனைத்தையும் விட்டு விலகி செல்கிறேன் என்கிற ஓர் உணர்வு. நான் ஒரு புது பயணத்துக்கு ஆயத்தமாகிறேன். அந்த வெற்றிடம் என்னை ஓர் புதிய பயணத்துக்கு தயாராக சொல்கிறது போன்ற ஓர் உணர்வு. அந்த பயணம் எப்படி இருக்கும், அது எவ்வளவு தூரம், எப்படி பயணிக்கப்போகிறேன் என்று எதுவுமே தெரியவில்லை. ஆனால் நான் மட்டும் தனியே பயணிக்கப்போகிறேன் என்று மட்டும் எனக்கு புரிந்தது. அந்த வெற்றிடத்தையே உற்று நோக்கினேன். என் மனம் கேட்டது, இதுதான் மரணம் என்பதோ ?
பாதி தூக்கத்தில் மரணத்தை சந்தித்துவிட்டு வந்திருக்கிறேன் என்கிற சந்தோஷம் எனக்கு. அந்த பாதி தூக்கத்தை வலுகட்டாயமாக விட்டுவிட்டு உடனே எழுந்து என் கைப்பேசியை எடுத்து இந்த கனவு அனுபவத்தை குறிப்பெடுத்து வைத்துக்கொண்டேன், இங்கே பதிவு செய்ய.
ஆனாலும் எனக்கொரு பெருமை.. அது மரணம் என்று தெரிந்தும் நான் மரணத்திற்கு அஞ்சவில்லை. அது கனவு என்று தெரிந்ததாலோ என்னவோ, இருப்பினும் அந்த வெற்றிடத்தினுள் பயணிக்க என் மனதை பக்குவப்படுத்திக்கொண்டேன்.
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment