மூன்று கனவு

Sunday, August 10, 2014





இன்று மதியம் ஒரு 12 மணிக்கு சிறிது நேரம் தூங்கலாம் என்று கண் அயர்ந்தேன். 1 மணிக்கு கண் விழித்த அடுத்த நொடி எனக்கு இந்த 1 மணி நேரத்தில் வந்த 3 கனவுகளை இங்கே பதிகிறேன்.  இரண்டு கனவுகள் சிறிய கனவுதான். அடுத்த கனவுதான் கொஞ்சம் பெரிய கனவு.

1.  என் கல்லூரியில் எனக்கு அறிமுகமான அக்கா ஒருவருக்கு திருமண வாழ்வில் ஏதோ ஒரு பிரச்சனை. அவர் எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். அதனால் நான் அவரை தொலைப்பேசியில் அழைக்கிறேன். ஆனால் மறுமுனையில் வேறொரு பெண் எடுக்கிறார். அவரின் குரல் எனக்கு பரிச்சயமானது போல இருந்தாலும் அவர் யாரென்று எனக்கு தெரியவில்லை. அவர் யாரென்று தன்னை அறிமுகம் செய்துக்கொள்ளாமலே அக்காவின் பிரச்சனை என்னவென்று சொல்லிக்கொண்டிருக்கிறார். நான் அனைத்தையும் கேட்டு முடித்துவிட்டு, அக்காவிடம் தொலைப்பேசியை கொடுங்கள் என்றேன். அவர் அக்காவே பிறகு உங்களை அழைப்பார்கள் என்று சொல்லிவிட்டு வைத்துவிடுகிறார்.

இந்த கனவு வர காரணம், சில தினங்களுக்கு முன்னர்தான் அவர் தன் முகநூலில் ஒரு கவிதை எழுதியிருந்தார். அந்த கவிதையை படித்துப் பார்த்தபோது அவர் குடும்ப வாழ்வில் ஏதோ பிரச்சனை இருப்பதுபோல உணர்ந்தேன். அது என்னை அந்தளவிற்கு பாதித்துள்ளது போல. அதான் வெகு விரைவில் கனவில் வந்திருக்கிறது.

2. என் அறையில் என்னுடன் தங்கியிருக்கும் கோகுல் மற்றும்  மேல் அறையில் தங்கியிருக்கும் ஜோசப் இருவரும் எங்கோ வெளியில் கிளம்புகின்றனர். எங்கு கிளம்ப போகிறீர்கள் என்று கேட்கிறேன். ஆனால் அத்துடன் கோகுல் தன் வண்டியை விட்டுவிட்டு வேறொரு நண்பரின் வண்டியில் வேகவேகமாக கிளம்புகிறார். அத்துடன் கனவு முடிகிறது.

3. இந்த கனவுதான் என்னை இங்கே பதிவு செய்ய தூண்டியது. மிகவும் அழகான கனவு. கல்லூரியில் என் இறுதியாண்டில் என் வாழ்க்கையில் வந்த அந்த தோழி என் கனவில் வந்தால். இப்போது அவள் என் வாழ்வில் இல்லை. சரி, கனவுக்கு வருகிறேன்.

கனவு எங்கள் கல்லூரியில் ஆரம்பிக்கிறது. நானும் அவளும் கல்லூரியை முடித்துவிட்டோம். ஆனால் மீண்டும் கல்லூரிக்கு எதேச்சையாக இருவரும் வந்திருக்கிறோம். எங்கள் நண்பர்கள் யாரும் வரவில்லை. அவளை தூரத்தில் இருந்து பார்க்கிறேன். அவளுக்கு எனக்கு சிறிய கருத்துவேறுபாடு இருந்ததால் இருவரும் பேசிக்கொள்வதில்லை. இரண்டு வருடங்களாக எந்த தொடர்புமில்லை அதனால் எப்படி அவளை அணுகி பேச ஆரம்பிப்பது என்று தயங்கினேன். இதில் தயக்கம் என்ன என்று நானே அவளை அணுகி பேசினேன். எப்படி இருக்க என்று. அவளும் சகஜமாகவே பேசினாள்.பேசிக்கொண்டே இருவரும் Canteen சென்றோம். அது மதிய நேரம் என்பதால்,  சாப்பிடலாமா என்று கேட்டால். சரி என்று அவளுக்கும் எனக்கும் உணவு வாங்கிக்கொண்டு, அங்கே அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தோம். அக்கா எப்படி இருக்காங்க, போன வருஷம் இந்தியா வந்திருந்தாங்க போல என்றேன். அவள் ஒரு கோபம் கலந்த பார்வையில் என்னை பார்த்தால். அந்த கோபத்திற்கான அர்த்தம் எங்கள் இருவருக்கு மட்டுமே தெரியும். நான் சிரித்துக்கொண்டே, சரி சரி, சொல்லு என்றேன். ஆமாம் போன வருஷம் ஊருக்கு வந்திருந்தாங்க. மூனு மாசம் முன்னாடிதான் கிளம்பி போனாங்க, இப்ப அம்மாவும் அக்காகூடத்தான் இருக்காங்க என்றாள். பேசிக்கொண்டிருக்கும்போதே, இங்கே வேணாம், நாம் வெளியில் சென்று அமர்ந்துக்கொள்வோம் என்றால். நான் ஏன் என்று சுற்றிமுற்றிப் பார்த்தேன். அவள் எதுவும் சொல்லாமல் எழுந்து நடந்தாள். நானும் வெளியே வந்துவிட்டேன். பிறகு, அவளும் நானும் அருகில் இருக்கும் ஒரு கடைக்கு செல்கிறோம். அங்கே சுண்டல்  மட்டுமே இருக்கிறது. வேறு எதுவுமில்லை. உணக்கும் சுண்டல் வாங்கட்டுமா என்று கேட்கிறேன். அவளும் சரி என்கிறாள். அவள் சரி என்று சொன்னதும் அந்த கடைக்கு செல்கிறேன் உடனே என் கல்லூரி மறைந்து ஒரு கிராத்தில் இருக்கிறேன். ஆனால் நான் கேட்ட அதே கடை, அதே சுண்டல், அதே கடைக்காரர்கள். ஆனால் முதலில் கேட்டபோது கல்லூரியில் இருக்கிறோம், அடுத்த நொடி ஒரு கிராமத்தில் அதே சூழ்நிலையில் இருக்கிறொம். சற்று குழம்பிப்போனவனாய், ஒரு சுண்டல் தாருங்கள் என்கிறேன். அந்த கடைக்காரர் அதற்கு ஒன்றெல்லாம் தர முடியாது இரண்டுதான் தரமுடியும் என்கிறார், அதுவும் கன்னட மொழியிலோ அல்லது தெலுங்கு மொழியிலோ. எதுவென்று சரியாக கணிக்கமுடியவில்லை. அவளிடம் சென்று, உனக்கு கன்னடம் தெரியும்தானே, அவர்கள் என்ன பாஷை பேசுகிறார்கள் என்று சொல்லேன் என்கிறேன், அதற்கு அவள் இதழோரத்தில் புன்சிரிப்புடன், ஒரு பெரிய அட்டைப்பெட்டியை திறக்கிறாள். அதில் கட்டுக்கட்டாய் பணம் இருக்கிறது. நான் விளையாட்டை கேட்கிறேன், இதெல்லாம் அரிசிக்கடையில் சம்பாதித்தது தானே என்கிறேன். அவள் கொஞ்சம் செல்லமான கோபத்துடன், உங்களிடம் பேசாமல் தவிர்ப்பதுதான் நல்லது என்கிறாள். ஏனென்றால், அவளுக்கு அரிசிக்கடை என்றொரு செல்லப்பெயர் அவள் பள்ளிப்பருவத்தில் உண்டு. அது எனக்கு மட்டுமே தெரியும். 

அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று ஆர்வமாய் காத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்குள்  என் அறையின் கதவு தட்டப்படுகிறது. திறந்துப்பார்க்கிறேன். சார், Paper Bill என்கிறார் ஒரு நபர். மனதில் உனக்கு Bill வாங்க இந்த நேரம்தான் கிடைச்சதா, அருமையான கனவை கலைச்சுட்டியே என்று மனதில் நினைத்துக்கொண்டே அவரிடம் பணம் கொடுத்துவிட்டு, இங்கே உடனே வந்து என் பதிவை தொடங்கிவிட்டேன்.

* தினேஷ்மாயா *

0 Comments: