இயற்கையே ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தது. இயற்கையை சார்ந்தே அமைந்த மனிதனின் வாழ்க்கையும் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததே. ஆனால், ஆதி மனிதனின் காலத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகள் யாவும், வளங்களை வைத்தே எழுந்தவை. ஒருவன் இருக்கும் இடத்தில் நிர் வளம் இருக்கும் இன்னொருவன் வசிக்கும் இடத்தில் மண் வளம் இருக்கலாம். இதனால் ஒருவனைவிட மற்றொருவன் செழிப்பாக வாழ முடிந்தது அதன் பொருட்டு மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு எழுந்தது. என்றைக்கு மதம் என்கிற பெயரில் இங்கே சாதிய வேற்றுமைகள் எழுந்ததோ அன்றுமுதல் இயற்கையால் மட்டுமின்றி செயற்கையாக மனிதனால் மனிதனுக்கிடையே பல ஏற்றத்தாழ்வுகள் எழத்துவங்கின. இதனால் ஒருவனை இன்னொருவன் அடக்கி ஆள முயல்வதும், அடிமையாய் நடத்துவதும், பல மனிதர்கள் குரலற்று போவதும், எதிர்த்தால் நசுக்கப்படுவதும் சில சமயங்களுல் வேறருக்கப்படுவதும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. ஆரம்பத்தில் எனக்கிருந்த கனவை நோக்கிய என் பயணத்தால் அதில் மட்டுமே என் கவனம் முழுவதும் இருந்தது. இன்று என் கனவை எட்டிவிட்டப் பிறகு,வாழ்க்கையில் திருமணம் குழந்தை என்கிற பொறுப்புகள் வந்தபிறகு என் பார்வை விசாலமானது. தெரியாத பல சங்கதிகளை தேடித்தேடி தெரிந்துக்கொண்டே இருக்கிறேன். இதுநாள் வரையில் நான் கண்ட, கேட்ட, என்னை நம்பவைத்த பல விடயங்கள் யாவும் மாயையே என்பதை உணர ஆரம்பித்திருக்கிறேன். சாதி என்னும் பெயரால் இங்கே நம் சமூகத்தில் நடந்துக்கொண்டிருக்கும் அவலங்கள் என் கண்களுக்கு தெளிவாகத் தெரிகிறது. ஆதிக்க சாதியினர் என்று சிலர் தங்களை எண்ணிக்கொண்டு வேறு சில சாதியினரை ஒடுக்குகின்றனர். இந்த ஒடுக்கப்பட்டவர்கள் யாரென்று பார்த்தால் அவர்களோடு என்னால் எளிதில் தொடர்புப் படுத்திக்கொள்ள முடிகிறது. நான் தினமும் காணும் மனிதர்களே அவர்கள். தங்கள் வாழ்க்கையில் எப்படியாவது வெளிச்சம் வந்துவிடாதா என்கிற நப்பாசையுடன் உழைக்கும் ஏழை வர்க்கம். இங்கே பொருளாதாரத்தால் மட்டும் இங்கே வர்க்க பேதங்கள் இல்லை, அதையும் தாண்டி, சாதியினால் ஏற்பட்டிருக்கும் வர்க்க பேதமே பெரிதாய் தெரிகிறது. பெரும்பாலும், ஒடுக்கப்பட்ட சாதியினரே ஏழைகள் என்னும் வட்டத்தின் பெரும்பகுதிக்குள் அடங்குகின்றனர். பிராமணர் சாதியிலும் உணவுக்காக ஏங்கும் ஏழைகளும் உள்ளனர் அதேசமயம் ஒடுக்கப்பட்ட சாதி என்று சொல்லப்படும் மக்களிடையே கோடிஸ்வரனும் உண்டு. ஆனால், பெரும்பான்மை என்று வந்தால், ஒடுக்கப்பட்ட மக்களே அதிகம் ஏழைகளாக இருக்கின்றனர் என்று தரவுகள் சொல்கிறது.
இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பதாலும், அவர்களின் பிரச்சனைகளை பொதுவெளியில் பேசுவதாலும், பிறரிடம் இவர்களுக்காக இவர்களின் குரலாக என் குரலை பதிவு செய்யும் தருணங்களிலும் நான் எதிர்கொள்ளும் கேள்வி இதுதான்... நீங்க தலித்தா?
இதற்கு சுற்றி வளைத்து பதில் அளிக்க நான் விரும்பவில்லை. நேராகவே சொல்கிறேன்.
ஆம். நான் தலித் தான்.
தலித் என்றால் யார் ?
தலித் என்பதற்கு உடைந்த / சிதறடிக்கப்பட்ட / சிதைக்கப்பட்ட / ஒடுக்கப்பட்ட என்று பொருள். ஆனால், இன்றைய சமூகத்தில் தலித் என்னும் வார்த்தை பட்டியலின மக்களை மட்டுமே குறிக்கும் ஒரு வார்த்தையாக மாற்றிவைத்திருக்கிறார்கள்.
வேதங்களின் படி பார்த்தால், பிராமணர்களைத் தவிர இன்று இருக்கும் அத்தனை மக்களும் சூத்திரர்களே. அதாவது, அவா பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் இங்கே இருப்பவர்களை இரண்டாக வகைப்படுத்தலாம். ஒன்று அவா மற்ற அனைவரும் தலித்துகள்.
என்னை நோக்கி நீங்க தலித்தா என்று கேட்கும் அந்த நபர்களும் தலித்தான் என்று அவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன் நான் ?
நான் கடந்து வந்த 32 ஆண்டுகால வாழ்க்கையில் பல வெற்றிகளை நான் சந்தித்திருந்தாலும் அவற்றைவிட ஆயிரக்கணக்கில் அவமானங்களை சந்தித்திருக்கிறேன். ஒடுக்கப்பட்டிருக்கிறேன். புறக்கணிக்கப்பட்டிருக்கிறேன். வேண்டுமென்றே பழிவாங்கப்பட்டிருக்கிறேன். செய்யாத தவறுக்காக தண்டனை அனுபவித்திருக்கிறேன். என் பக்க நியாயத்தை சொல்லவிடாமல் அமுக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய உரிமைகளை வேண்டுமென்றே தடுக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுக்க முடியாதபடி தள்ளப்பட்டிருக்கிறேன் அதையும் மீறி குரல் கொடுத்தால் அது பலனளிக்காமல் போகும்படி செய்வதை கண்டிருக்கிறே.
நிலமும் செல்வமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து, கடனில் நீந்தி, வட்டிக்கு முத்தமிட்டு, தோல்விகளையும் அவமானங்களையும் அணைத்தவாறு பயணித்து, கல்வி என்னும் ஒற்றை ஆயுதத்தால் வாழ்வில் நல்ல நிலையை எட்டியிருக்கிறேன். நான் தலித்தாக இல்லாமலிருந்திருந்தால் இந்நேரம் வெளிநாட்டில் குடியேறி பத்து ஆண்டுகள் ஓடியிருக்கும்.
தலித் என்பது ஒரு சாதியை அடையாளப்படுத்தும் வார்த்தை அல்ல. அது ஒரு புரட்சியின் வெளிப்பாடு. இங்கே ஒடுக்கப்படும் அனைவரும் தலித்துதான் என்பதை எப்போது உணரப்போகிறோம். இதைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்களும் ஒடுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறீர்கள். அதை நீங்கள் உணர்ந்தவராக இருக்கலாம், அல்லது இனிமேல் உணர்பவராக இருக்கலாம். ஆனால் உண்மை என்பது இதுதான்.
ஆம். நான் தலித் தான்.
உங்களையும் போல.
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment