பகலில் கண் தெரியாமல் இருட்டில் மட்டுமே கண் தெரியும் கூகையின் வாழ்க்கையை ஒத்தது ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை என்பதை அழகாக நமக்கு உணர்த்தியிருக்கிறார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை வலி நிறைந்தது என்பதை அனைவரும் அறிந்திருந்தாலும், அந்த வலியை நமக்கும் கடத்தியிருக்கிறார்.
தன் பலம் என்னவென்றே தெரியாமல் பிற சிறிய பறவைகளுக்கும்கூட பயந்து வாழும் கூகையின் வாழ்க்கையை தலித் மக்களின் வாழ்க்கையோடு பொறுத்தி புனைவு தந்திருக்கிறார்.
இந்த நாவலில் வரும் சீனி, முத்துப்பேச்சி, அப்புச்சுப்பன் ஆகிய மூவரும் என் மனம் கவர்ந்த நபர்கள். இடையிடையே பல கதாப்பாத்திரங்கள் வந்து மனம் கவர்ந்து சென்றாலும், கதை முடிந்தாலும் இந்த மூன்று பேர் மனதில் கூடாரம் அமைத்துத் தங்கிவிடுகிறார்கள். தன் இன மக்களின் நலனையே கருத்தில் கொண்டிருக்கும் சீனியின் ஒவ்வொரு செயலும் ஆச்சரியமூட்டுகிறது. மேகலக்குடி மக்களுக்கும் தன் இன மக்களுக்கும் ஒரு பாலமாய் செயல்பட்டு முடிந்தவரை சண்டை சச்சரவின்றி வாழ உறுதுணையாக நிற்கிறான். ஐயர் எழுதி வைத்த வயலில் உழுது தன் இன மக்களின் வாழ்வில் ஒளியேற்ற பெரிதும் காரணாய் விளங்குகிறான்.
அப்புச்சுப்பன் கோபக்காரன். ஆனால் மூளை கம்மி. அதிகம் சிந்திக்க மாட்டான். எடுத்தோம் கவுத்தோம் என்று தடாலடியாக சண்டியர்தனம் செய்வான். ஆனால் அவன் செய்வது அனைத்தும் தன் மக்களுக்காகவே.
பேச்சி..
அப்புசுப்பனுக்கு அடைக்கலம் மட்டுமல்ல மறுவாழ்வும் கொடுத்தவள். அனைத்து குடி மக்களுக்கும் நீதி கிடைக்கவும் வாழ்வு கிடைக்கவும் பாடு பட்டவள். இரக்க குணம், வைராக்கியம் இவற்றின் மறுபெயர் பேச்சி.
அனைத்து கதாபாத்திரங்களிலும் என்னை அதிகம் கவர்ந்தது பேச்சியின் கதாப்பாத்திரமே. சீனியும் கூட தன் இன மக்கள் என்கிற ஒரு ஒட்டும் உறவும் இருந்ததால் அவர்களுக்காக நின்றான் எனலாம். ஆனால், முன்பின் பார்த்திராத அப்புச்சுப்பனுக்கு உதவி செய்து அவனுக்கு வாழ்வை மீட்டு கொடுத்தது இவளின் பெருந்தன்மை குணத்தை காட்டுகிறது. இவளின் பொறுமையும் அனுபவமும் எனக்கு வியப்பை கொடுக்கிறது.
இரண்டாம் பாகத்தில் வரும் கற்பனை நாடும், சீனியின் மரணமும் ஏனோ கதையுடன் ஒட்டவே இல்லை என்பதுபோல நான் உணர்கிறேன்.
எழுத்தாளர் சில இடங்களில் விரசமான விடயங்களையும்கூட நாசூக்காக சொல்லி இருப்பார். இரட்டை அர்த்தமுண்டு என்று போகிறப்போக்கில் படிப்பவர்களுக்கு புரியாது. மூன்று நான்கு முறைப் படித்தால் மட்டுமே அதன் உள் அர்த்தம் விளங்கும். அவரின் கற்பனைத்திறம் என்னை கவர்ந்தது.
பள்ளக்குடி, பறக்குடி, சக்கிலியக்குடி மக்கள் என்றைக்குமே பிறருக்கு மாடாய் உழைத்து ஏடாய் போகும் நிலை என்று மாறும் என்பதோடு கதை முடிகிறது. அவர்களுக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும். நல்லொழுக்கத்தோடு உழைப்பும் வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக கல்வியும் இருந்தால் மட்டுமே இவர்கள் வாழ்வில் ஆயிரம் சூரியனை கண்களாக கொண்ட கூகையின் கண் போல் ஒளி ஏற்படும் என்பதை உணர்த்தியிருக்கிறார்.
நாவலை படித்து முடித்தபோது மனம் கனக்கவுமில்லை, லேசாகவுமில்லை. இரண்டும் கலந்த ஓர் உணர்வு. ஒரு பத்து நாட்களாக கிடைக்கும் நேரங்களில் எல்லாம் இந்த புத்தகத்தை படித்து வந்தேன். இந்த பத்து நாட்களாக நான் வாழ்ந்துக்கொண்டிருக்கும் வாழ்க்கையோடு இன்னொரு வாழ்க்கையும் அதாவது கூகை நாவலில் வரும் நபர்களோடு சேர்ந்து பயணித்து அவர்களின் வாழ்க்கையையும் வாழ்ந்துவிட்டு வந்த ஓர் திருப்தி கிடைக்கிறது.
இந்த நாவலை நிச்சயம் நான் உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன். படித்து முடித்து உங்கள் கருத்துக்களை இங்கே என்னுடன் பகிரலாம்.
நன்றி.
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment